தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் செயல்படும் விடுதிகளுக்கு முக்கிய அறிவிப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிற்சாலை மற்றும் நிறுவன உதவியுடன் தனிநபர் நடத்தும் பணிபுரியும் பெண்கள் விடுதிகள் (SIPCOT), தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் செயல்படும் விடுதிகள் மற்றும் இல்லங்களும் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தங்கும் விடுதிகளை நடத்தி வருகின்றனர். இது தவிர குழந்தைகள் மற்றும் பணிபுரியும் மகளிர் விடுதிகள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன இவற்றில் சில பதிவு செய்யாமலும், பதிவுகளை புதுப்பிக்காமலும் இயங்கி வருவதாக அவ்வப்போது புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.
இவ்விடுதிகளை முறைப்படுத்தி கண்காணித்திட தமிழக அரசால் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் மற்றும் இல்லங்கள் சட்டம் 2014 கொண்டுவரப்பட்டு நடைமுறையில் உள்ளது. இச்சட்டத்தின்படி விடுதி நிர்வாகிகள் https://tnswp.com என்ற இணையதள வழியில் உரிய சான்றுகளுடன் தாங்கள் நடத்திவரும் விடுதிகளை பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் போன்றவற்றை 31.08.2022க்குள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மேலும், விடுதிகளின் செயல்பாடுகள் குறித்து தொடர் ஆய்வு மேற்கொள்ளப்படும். அவ்வாறு ஆய்வின்போது மகளிர் விடுதிகள் அனுமதி பெறாமல் நடைபெறும் பட்சத்தில் சட்டப்பிரிவு 20ன் கீழ் உட்பிரிவு 1ன் படி குற்றவியல் நடவடிக்கை எடுத்து விடுதிகள் மற்றும் இல்லங்களை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
நெஞ்சை பிளக்கும் வீர வசனங்கள்
எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிற்சாலை மற்றும் நிறுவன உதவியுடன் தனிநபர் நடத்தும் பணிபுரியும் பெண்கள் விடுதிகள் (SIPCOT), தனியார் பள்ளிகள் (ம) கல்லூரிகளில் செயல்படும் விடுதிகள் மற்றும் இல்லங்களை நடத்திவரும் அனைத்து விடுதி நிர்வாகிகளும் மேற்கண்ட இணையதளத்தில் தவறாமல் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் பணியினை 31.08.2022 க்குள் முடித்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் பணிபுரியும் மகளிர் விடுதியில் 24 மணிநேரமும் பாதுகாப்பு வழங்குதல் மற்றும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளதை உறுதிபடுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக பழைய கட்டிடம், முதல் தளம், மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட சமூகநல அலுவலகத்தை (தொலைபேசி எண்.044-27239334) அணுகுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.மா.ஆர்த்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments
Thank you for your comments