போதை காளான், கஞ்சா வியாபாரிகளுக்கு 6 மாத சிறை
கொடைக்கானல்:
கொடைக்கானல் மேல்மலை மன்னவனூர் கிராமப் பகுதியில் வைரவேல் (வயது32), லட்சுமணன் (38), மதன் (24) குணசேகரன் (52) ஆகியோர் பல நாட்களாக கஞ்சா மற்றும் போதைக்காளான் விற்பனை செய்து வந்துள்ளனர். இவர்கள் மீது கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் பலமுறை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதன் காரணமாக தங்கள் இந்தத் தவறை மீண்டும் செய்ய மாட்டோம் எனக்கூறியதால் கடந்த 15-ந் தேதி அன்று கொடைக்கானல் கோட்டாட்சியர் முருகேசன் பரிந்துரையின்படி கொடைக்கானல் வட்டாட்சியர் முத்துராமன் முன்னிலையில் 6 மாத கால நன்னடத்தை பிணையப்பத்திரம் எழுதி கையெழுத்திட்டுள்ளனர்.
ஆனால் 2 நாட்களிலேயே தங்களது நிலையை மாற்றி மீண்டும் போதைக்காளான், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு 18ம் தேதி கொடைக்கானல் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
4 பேர் மீதும் நன்னடத்தை பிணைய ஒப்பந்தத்தை மீறிய காரணத்தால் 6 மாத காலம் பிணையில் வெளியில் வர முடியாத கடுமையான தண்டனை வழங்க தாசில்தார் முத்துராமன் சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.
கொடைக்கானல் பகுதிகளில் தொடர்ந்து போதை காளான் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் அவர்களது வங்கிக் கணக்கு முடக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

No comments
Thank you for your comments