கேர் 2 திட்டத்தின் கீழ் மானியத்துடன் கடன் உதவி அறிவிப்பு
குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட தகுதிவாய்ந்த தொழில் முனைவோருக்கு கோவிட் உதவி மற்றும் நிவாரணம் வழங்கும் புதிய திட்டத்தை ரூ. 50 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் ஒராண்டு காலத்துக்கு செயல்படுத்த அரசு அறிவித்துள்ளது.
இத்திட்டம் கேர் 1 மற்றும் கேர் 2 என்ற 2 வகைத் திட்டங்களை உள்ளடக்கியது, கேர் 1 திட்டத்தின்படி 2020 - 2021 மற்றும் 2021 - 2022 ஆகிய 2 ஆண்டுகளில் கொரோனா தொற்றால் வணிக ரீதியாக பாதிக்கப்பட்ட தொழில் முனைவோர் தாமாகவோ அல்லது தமது வாரிசுகள் மூலமோ ஏற்கனவே உள்ள வணிகத்தை மீண்டும் நிறுவ அல்லது அதேபோன்று இன்னொறு நிறுவனத்தை உருவாக்க அல்லது வேறு ஏதேனும் தொழிலைத் தொடங்க 25 சதவீதம் அரசு மானியத்துடன் (அதிகபட்சமாக வங்கி ரூ. 25 லட்சம் வரை) நிதி உதவி வங்கியின் மூலம் வழங்கப்படும்.
இதில் திட்டமதிப்பீடு அதிகபட்சமாக ரூ. 5 கோடி வரை இருக்கலாம். விண்ணப்பதாரர் 55 வயதுக்கு மேற்படாதவராகவும், குறைந்த பட்சம் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். இத்திட்டத்தில் உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த நிறுவனங்களும் பயன்பெறலாம்.
கேர் 2 திட்டத்தின் கீழ் கொரோனாவால் வணிக ரீதியாக பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் தொழில் நுட்ப மேம்பாடு அல்லது நவீன மயமாக்கம் செய்வதற்காக நிறுவப்பட்ட இயந்திரங்களின் மதிப்பில் 25 சதவீதம் (அதிகபட்சமாக 25 இலட்சம் வரை) மானியம் வழங்கப்படும். 23.03.2020- க்கும் பின்னர் தொழில் நுட்ப மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கலுக்கான இயந்திரங்கள் வாங்கிய அனைத்து நிறுவனங்களும் இத்திட்டத்தில் பயன் பெறலாம்.
இதற்கான விண்ணப்பங்களை www.msmetamilnadu.tn.gov.in என்ற இணைய தளம் வழியே பதிவிடலாம். இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், காஞ்சிபுரம் (044-27238837,044-27238551,044-27236686, 9566990779) அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெவித்துள்ளார்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments
Thank you for your comments