Breaking News

பஸ் வசதி ஏற்படுத்தி தர கோரி டிஆர்ஓவிடம் மனு

ஈரோடு: 

ஈரோடு டி.ஆர்.ஓ. சந்தோஷினி சந்திராவிடம், கேர்மாளம், திங்களூர் பகுதியை சேர்ந்த பெற்றோர்கள் மனு வழங்கினார்கள். 

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: தாளவாடி யூனியன் திங்களூர், கேர்மாளம் பஞ்சாயத்துகளில் காடட்டி, சுஜ்ஜல்கரை, கேர்மாளம் என்ற ஊரில் 3 அரசு உயர்நிலை பள்ளிகள் இயங்கி வருகிறது. 



கோட்டமாளம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியாக கடந்த கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்டது. திங்களூர், கேர்மாளம் பகுதியில் இருந்து மட்டும் 80 முதல் 100 பேர் கோட்டமாளம் பள்ளியில் மேல்நிலை கல்வி படிக்கின்றனர். 

இதற்கு முன் 60 கி.மீ. தூரத்தில் உள்ள சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று வந்தனர். தற்போது 20 கி.மீ. தூரத்தில் உள்ள கோட்டமாளம் பள்ளிக்கு செல்ல பள்ளி நேரத்தில் உரிய பஸ் வசதி இல்லை. இப்பகுதி புலிகள் சரணாலயத்துக்கு உட்பட்ட அடர்ந்த காடு என்ற காரணத்தால் பல நேரம் காட்டுப்பாதையில் செல்ல இயலாது. 

மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களில் சென்று வந்தாலும், ஆபத்தானது. திங்களூர், கேர்மாளம் பகுதியில் உள்ள கிராமங்களில் 6000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். வங்கி, மருத்துவமனை, யூனியன் ஆபீஸ், வேளாண் அலுவலகம் என அனைத்தும், இப்பகுதியினர் திங்களூர், கேர்மாளம் பஞ்சாயத்தை சார்ந்துள்ளனர். 

திங்களூர், கேர்மாளம், கோட்டமாளத்தை இணைத்து கடந்த 10 ஆண்டுக்கு முன் பஸ் இயக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. தாளவாடி டெப்போவில் இருந்து இயக்கப்பட்ட பஸ்சை, தாளவாடியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட செய்து ஆசனூருக்கு 6:45 மணிக்கும், கேர்மாள த்துக்கு, 7:30 மணிக்கும் வந்து, கோட்ட மாளத்துக்கு 8:30 மணிக்கு செல்லும்படி இயக்க வேண்டும். 

மறு மார்க்கமாக காலை கோட்டமாளத்தில் 8:45 மணிக்கு புறப்பட்டு, தாளவாடிக்கு 11:30 மணிக்கு வந்து சேரும். தாளவாடியில் மதியம் 2 மணிக்கு பஸ் புறப்பட்டால் ஆசனூருக்கு 2:45 மணி, கேர்மாளம் 3:30 மணி, கோட்டமாளம் மாலை 4:30 மணிக்கு வந்து சேரும். பள்ளி விட்டதும், மாலை 4:45 மணிக்கு அந்த பஸ் புறப்பட செய்தால் இரவு, 7:30 மணிக்கு தாளவாடிக்கு சென்றடையும். 

இதன் மூலம் 100-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள், 6,000 -க்கும் மேற்பட்ட மக்களும் பயன் பெறுவர். இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.

இந்த மக்களின் கோரிக்கை நிறைவேறுமா... துறை துரிதமா? துயரமா? என்பதை பொறுத்திருந்தான் பார்ப்போம்...


 

No comments

Thank you for your comments