அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை கோரி ஓபிஎஸ் மனு: உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை
சென்னை:
ஜூலை 11-ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக் குழுவுக்கு தடை விதிக்க கோரி ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள வழக்கை, அவசர வழக்காக நாளை (ஜூலை 6) விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஜூன் 23-ம் தேதி நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, அதன் மூலம் அவை தலைவராக தமிழ் மகன் உசேன் நியமிக்கப்பட்டதும், அடுத்த பொதுக்குழு ஜூலை 11-ம் தேதி கூட்டப்படும் என்ற அறிவிப்பும் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு முரணானது என்பதால் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளை தண்டிக்க வேண்டும் என்று அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த வழக்கு நேற்று இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஜூலை 11-ம் தேதி பொதுக்குழுவிற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக விசாரிக்க முடியாது என்றும், இதுதொடர்பாக தனி நீதிபதியை தான் அணுக வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "பொதுக்குழு கூட்டத்திற்கு 15 நாட்களுக்கு முன்பாக அழைப்பு விடுக்க வேண்டும்.
ஆனால் ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு கூட்டம் தொடர்பான அறிவிப்பு நேற்று மாலை தான் தனக்கு கிடைத்தது. அதன் அடிப்படையில் உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் கூட்டப்படும் பொதுக் குழுக்கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார் .
ஓ பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பாக உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் ஆஜராகி முறையீடு செய்தார். அவரது முறையீட்டை ஏற்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி வழக்கை நாளை விசாரிப்பதாக ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments