பொதுக்குழு விவகாரம்- ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு நாளை மீண்டும் விசாரணை
சென்னை:
வேறு நிவாரணங்களை பெற உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருப்பதாக ஓபிஎஸ் வழக்கறிஞர் கூறினார்.
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றம் பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் சென்னை ஐகார்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் வாதாடும்போது, 11ம் தேதி பொதுக்குழு கூட்டலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, ஆனால் வேறு நிவாரணங்களை பெற உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என தெரிவித்திருக்கிறது, அதனால் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்றார்.
அப்போது, குறுக்கிட்ட நீதிபதி, வேறு என்ன நிவாரணம் கேட்கிறீர்கள்? என்றார். அதற்கு பதிலளித்த வழக்கறிஞர், பொதுக்குழுவுக்கு தடை கேட்கப்பட்டிருக்கிறது, என்றார்.
அதன்பின்னர் எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர், பதில் மனுதாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்று கேட்டார். அப்போது, 11ம் தேதி கூட்டத்தைக் கூட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பதை நீதிபதி சுட்டிக்காட்டினார். இதையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவை நாளை தாக்கல் செய்வதாகவும், இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் ஓபிஎஸ் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இந்த வழக்கை விசாரிக்கலாம் என உச்ச நீதிமன்றம் விளக்கியிருப்பதாகவும் கூறினார்.
தொடர்ந்து வாதாடிய எடப்பாடி பழனிசாமியின் வழக்கறிஞர் கட்சி விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தெரிவித்திருப்பதால், அந்த அடிப்படையில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவின் நகல்களை நாளை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை நாளை பிற்பகல் 2.15 மணிக்கு தள்ளி வைத்தார்.
No comments
Thank you for your comments