Breaking News

ஜூலை 18ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: 

ஜூலை 18-ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். டெல்லியில் இன்று பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் ஜூலை 24ம் தேதியுடன் நிறைவடைகிறது.  குடியரசு தலைவர் தேர்தலை தற்போது உள்ள குடியரசு தலைவரின் பதவி காலம் முடியும் முன்னரே நடத்தி முடிக்க வேண்டும்.  ஜூலை 25-ஆம் தேதிக்குள் புதிய குடியரசுத் தலைவர் பதவியேற்றுக் கொள்ள வேண்டும்.

இதனிடையே அடுத்த குடியரசுத் தலைவராக யாருக்கு வாய்ப்புள்ளது என்ற விவாதங்களும் கூட சமீப நாட்களாக மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன...  

இந்த நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், 

“ஜூலை 18ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூலை 21ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. 

வேட்புமனு தாக்கல் செய்ய ஜூன் 29 கடைசி நாள், வேட்புமனு பரிசீலனை ஜூன் 30ம் தேதி நடைபெறும். வேட்புமனுவை திரும்ப பெற ஜூலை 2ம் தேதி கடைசி நாள் ஆகும்” என்று அறிவித்தார்.  

மாநிலங்களவை செயலர் பிரமோத் சந்திரா மோடி குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான  தலைமை தேர்தல் அதிகாரியாக செயல்படுவார். 

எம்எல்.ஏ.க்கள் வாக்கு  5,43,231 மற்றும் எம்.பி.க்கள் வாக்கு  5,43, 200 என மொத்தம் 10,86,431 வாக்குகள் உள்ளன. மொத்தமாக 4,809 பேர் வாக்களிக்க உள்ளனர். 

குடியரசுத் தலைவர் தேர்தல் நாடாளுமன்ற வளாகத்திலும், மாநில சட்டமன்றங்களிலும் நடைபெறும். 

வாக்களிக்க யாருக்கு தகுதி? 

குடியரசுத் தலைவரை நாடாளுமன்ற உறுப்பினர்கள், அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூடி தேர்ந்தெடுப்பர். இருப்பினும் நியமன எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க முடியாது. அதேபோல் எம்எல்சி.க்களும் வாக்களிக்க இயலாது.

இந்த முறை 776 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 4,033 சட்டப்பேரவை உறுப்பினர்கள் என மொத்தம் 4,809 பேர் வாக்களிப்பார்கள். குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்னதாக மாநிலங்களவைத் தேர்தல் முழுமையாக நடத்தி முடிக்கப்படும்.

குடியரசுத் தலைவர் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பும் எகிரத் தொடங்கிவிட்டது.

No comments

Thank you for your comments