Breaking News

சுய விளம்பரம் தேடும் அண்ணாமலை மீது வழக்கு- அமைச்சர் நாசர்

சென்னை: 

சென்னையில் நேற்று சுகாதாரம் மற்றும் பால்வளத் துறை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இதில் பங்கேற்ற சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 



தாய்மார்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்டகத்தில் `PRO PL Health mix 32' வகையான புரோட்டீன்கள் உள்ள பவுடர் 2018-ம் ஆண்டில் இருந்தே வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2 நாட்களாக ஆவினில் வழங்கலாம் என்று கருத்து தெரிவிக்கப்படுகிறது.



இதுகுறித்து ஆவின்-சுகாதாரத்துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆவின் நிர்வாகத்தால் அதுபோன்ற ஹெல்த் மிக்ஸ் தயாரிக்கப்படவில்லை என்ற விவரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஆவினில் ஹெல்த் மிக்ஸ் இருப்பதுபோலவும், தமிழகசுகாதாரத் துறை அதை வாங்க மறுப்பதுபோலவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது வருத்தத்துக்குரியது.

அதேபோல, அரை கிலோ நெய் கடந்த ஆட்சியிலிருந்தே வழங்கப்படுகிறது. ஆவினில் 17 லட்சத்து 78 ஆயிரத்து 691 எண்ணிக்கையில் அரை கிலோ நெய் கொள்முதல் செய்யப்பட்டு, மக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. சுகாதாரத் துறை ஆவின் நெய்க்காக ரூ.34.49 கோடியை செலுத்தியுள்ளது. எதிர்காலத்தில் யார் டெண்டர் எடுத்தாலும், ஆவின் நெய் வாங்க வேண்டும் என்பது நிபந்தனை. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் கூறியதாவது: 

சில அரசியல் தலைவர்கள், தங்களை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதால், தவறான கருத்துகளை விளம்பரத்துக்காக தெரிவித்து வருகின்றனர்.

ரூ.77 கோடி இழப்பு என்ற தவறான செய்தியை, ஐபிஎஸ் படித்த அதிகாரி விளம்பரத்துக்காகத் தெரிவித்துள்ளார்.

ஊட்டச்சத்து பெட்டகத்துக்கும், ஆவின் தயாரிக்கப் போகும் ஹெல்த் மிக்ஸுக்கும் வேறுபாடுகள் உள்ளன. தீபாவளிக்கான இனிப்புகூட ரூ.87 கோடிக்கு ஆவினில்தான் வாங்கப்பட்டன.


சுய விளம்பரம் தேடிக்கொள்கிறார் அண்ணாமலை. அவர் மீது வழக்குத் தொடர்வது குறித்து முதல்வர் முடிவு செய்வார். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறும்போது,

“இந்த வாரம்தான் ஆவின் தொடர்பான டெண்டரைத் திறக்க உள்ளோம். இந்நிலையில், இதில் பெரும் ஊழல் நடைபெற்றதாக கூறுவது, உண்மைக்குப் புறம்பான செய்தி” என்றார்.

இதற்கிடையில், "அம்மா தாய்சேய் ஊட்டச்சத்து பெட்டகத்தில் மூன்று 200 மி.லி. பாட்டில்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.224. ஆனால், ஒரு பாட்டில் (200 மிலி) ரூ.224-க்கு கொள்முதல் செய்வதாக, உண்மைக்குப் புறம்பானதகவல் வெளியிடப்பட்டுள் ளது" என்று தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments