மதுக்கடையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த குடிமகன்கள்
ஈரோடு -
ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர் காலனி ஜெயகோபால் வீதியைச் சேர்ந்த மது பிரியர்கள் சிலர் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- நாங்கள் பல வருடமாக ஜெயகோபால் வீதியில் வசித்து வருகிறோம். இங்கு மது கடை செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரம் குடும்பங்கள் வசிக்கிறோம்.
நாங்கள் பெரும்பாலும் கூலி தொழிலாளிகள் தான். நாங்கள் இங்கு உள்ள மதுக்கடையில் தான் மது அருந்து வருகிறோம். எங்களால் இதுவரை எந்த ஒரு பிரச்சினையும் இந்த பகுதியில் ஏற்பட்டதில்லை.
இந்நிலையில் ஒரு சிலர் இந்த மதுக்கடையை அகற்ற முயற்சி செய்து வருகிறார்கள். அவ்வாறு இங்கு இருக்கும் மது கடையை அகற்றினால் நாங்கள் மது குடிக்க பல கிலோ மீட்டர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதனால் எங்கள் நிலையை கருத்தில் கொண்டு தொடர்ந்து இங்கேயே மதுக்கடை இயங்க அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர். மதுக்கடையை மூட எதிர்ப்பு தெரிவித்து குடிமகன்கள் மனு கொடுக்க வந்ததால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.
No comments
Thank you for your comments