Breaking News

அனைத்து கல்வி நிறுவனங்களும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.. AICTE போட்ட அதிரடி உத்தரவு..

புதுடெல்லி:

கொரோனா கட்டுப்பாடுகளை தொடர்ந்து கடைபிடிக்க தொழில் நுட்ப கல்வி நிலையங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வருவதால், பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட கொரோனா கட்டுப்பாடுகள் பெரும்பாலும் தளர்த்தப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களில் விதிக்கப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் கொரோனா தொற்றும் இன்னும் முழுமையாக நீங்கவில்லை என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். இதனால் ஒரு சில மாநிலங்கள் கட்டுப்பாடுகளை தொடர்ந்து நீட்டித்து வருகின்றனர். அந்த வகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என தொழில் நுட்ப கல்வி நிலையங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் வழங்கியுள்ள உத்தரவில், 

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வருகையின் போது “தெர்மல் ஸ்கேனிங்” மூலம் உடல் வெப்பநிலை கண்டறிய வேண்டும். முக கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், கிருமி நாசினி மூலம் கைகளை அவ்வபோது சுத்தம் செய்து கொள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும்.

மாணவர்கள் மற்றும் ஊழியர்களிடையே சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க அறிவுறுத்தல் வழங்க வேண்டும்.கல்வி நிறுவனங்களின் வளாகங்கள் மற்றும் மாணவர்களுக்கு பயன்படுத்தப்படும் பேருந்துகள் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும். அதேபோல, மாணவர்கள் அல்லது ஊழியர்கள் யாரேனும் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டால் உடனடியாக அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவரை சார்ந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

பொது இடங்களில் எச்சில் துப்புவதற்கு தடை விதிக்க வேண்டும். மாணவர்கள் அல்லது ஊழியர்களில் யாரேனும் குடும்பத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தால் கூட அந்நபரை கல்வி நிறுவனங்களில் நேரடியான வகுப்புகளில் கலந்து கொள்வதற்கு அனுமதிக்க கூடாது. அனைவரும் கட்டாயம் “ஆரோக்கிய சேது” செயலியை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கல்வி நிலையத்தின் வளாகம்,கேண்டின் உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும். அதேபோல, பயன்படுத்தப்படும் முக கவசங்கள் உள்ளிட்டவற்றை முறையாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பல்வேறு ஆலோசனைகளையும் கட்டுப்பாடுகளையும் வழங்கி உடனடியாக இதனை அமல்படுத்த வேண்டும் என அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments