Breaking News

இந்தியாவுக்கு ஐஎம்எப் [ IMF ] பாராட்டு

வாஷிங்டன்: 

கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ள இலங்கைக்கு தக்கநேரத்தில் இந்தியா செய்து வரும் மனிதாபிமான உதவிக்கு சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.

‘‘இலங்கை சுதந்திரத்திற்குப் பின்னர் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது, உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, மின்சார வெட்டு பெருமளவிலான மக்களை கடுமையாக பாதித்துள்ளது. இதன் விளைவாக இலங்கை அரசுக்கு எதிராக தீவிர போராட்டங்களும் நடந்து வருகின்றன.



இந்நிலையில், கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ள இலங்கையில் அண்மையில் கையிருப்பு டீசல் தீர்ந்து பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு இந்தியா 40,000 டன்கள் டீசலை உடனடியாக வழங்கியது. நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு பெரும் ஆறுதலாக அமைந்தது.

நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்கு 1 பில்லியன் டாலர்கள் கடன் வழங்க இருநாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதன்படி கடன் வரம்பு நிர்ணயிக்கப்பட்டு தொடர்ந்து பெட்ரோல், டீசல் வழங்கவும் இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது.


இந்தியாவினால் எரிபொருள், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை 500 மில்லியன் டாலர் தொகை கடன் வரம்பில் வழங்கி வருகிறது. இதன்படி ஏப்ரல் 15-ம் தேதி, 18-ம் தேதி தலா 40,000 டன் டீசலை இந்தியா அனுப்பியது. அதே அளவிலான பெட்ரோல் ஏப்ரல் 22 ஆம் தேதி அனுப்பப்படுகிறது.

மனிதாபிமான அடிப்படையில் இந்தியா செய்து வரும் உதவிக்கு இலங்கையின் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், மக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இலங்கைக்கு தக்க நேரத்தில் இந்தியா செய்து வரும் மனிதாபிமான உதவிக்கு சர்வதேச நாணய நிதியமும் பாராட்டு தெரிவித்துள்ளது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சர்வதேச நிதியத்தின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். இதில் ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். ஜி 20 நாடுகளின் மத்திய வங்கிகளின் ஆளுநர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டமும் நடைபெறுகிறது.

சர்வதேச செலாவணி நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிரிஸ்டாலினா ஜார்ஜிவா உடன் வாஷிங்டனில் நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன் சந்திப்பு :

முதல் நாளில், சர்வதேச செலாவணி நிதியம்-உலக வங்கி வசந்தகால கூட்டங்களை ஒட்டி, சர்வதேச செலாவணி நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிரிஸ்டாலினா ஜார்ஜிவா உடன் வாஷிங்டன் டி.சி.யில் மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர்  நிர்மலா சீதாராமன் இன்று இருதரப்பு கூட்டத்தை நடத்தினார். 

இந்திய நிதி அமைச்சகத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் ஆனந்த வி. நாகேஸ்வரன் மற்றும் சர்வதேச செலாவணி நிதிய முதல் துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் போன்ற மூத்த அதிகாரிகள் இச்சந்திப்பின் போது இருந்தனர்.

​​உலக மற்றும் பிராந்திய பொருளாதாரங்கள் தற்போது எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் இந்தியாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது அவர்கள் விவாதித்தனர்.

கொவிட்-19 சவால்களை எதிர்கொண்ட போதிலும், உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் நாடாக இருக்கும் இந்தியாவின் உறுதியை ஜார்ஜீவா எடுத்துரைத்தார். இந்தியா பின்பற்றும் பயனுள்ள கொள்கை கலவை குறித்து  ஜார்ஜீவா பேசினார். சர்வதேச செலாவணி நிதியத்தின் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு இந்தியா அளித்த பங்களிப்பிற்காக அவர் பாராட்டினார்.

இந்தியாவின் தடுப்பூசி திட்டம் மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கும் பிற பாதிக்கப்படக்கூடிய பொருளாதாரங்களுக்கும் இந்தியா உதவியதை திருமிகு ஜார்ஜீவா பாராட்டினார். குறிப்பாக இலங்கையின் கடினமான பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா அளித்து வரும் உதவிகளை அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச செலாவணி நிதியம் இலங்கைக்கு ஆதரவளித்து அவசரமாக நிதி உதவி வழங்க வேண்டும் என்று  நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டினார். சர்வதேச செலாவணி நிதியம் தொடர்ந்து இலங்கையுடன் இணைந்து தீவிரமாக பணியாற்றும் என நிர்வாக இயக்குநர் நிதி அமைச்சரிடம் உறுதியளித்தார்.


No comments

Thank you for your comments