பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி.. முக்கிய பங்காற்றும் மு.க.ஸ்டாலின்
சென்னை:
தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக வலுவான எதிர்க்கட்சிகள் அடங்கிய கூட்டணியை அமைக்க திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் முக்கிய பங்காற்றுவார் என்று டெல்லி அரசியலில் பேச்சுகள் எழுந்துள்ளன.
காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணாமூல் காங்கிரஸ் போன்றவை மேற்கு வங்கத்தில் எதிரும் புதிருமான நிற்கின்றன. ஆனால், இந்த மூன்று கட்சிகளையும் இணைக்கும் பாலமாக ஸ்டாலினால் இருக்க முடியும் என்று காங்கிரஸ் தலைமை கருதுவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் தொடர்ந்து தன்னுடைய செல்வாக்கை நிலை நிறுத்தி வரும் பாஜக, இந்த ஆண்டு ஹிமாச்சலப்பிரதேசம், குஜராத், பிறகு கர்நாடகா எனத் தொடர்ச்சியாக சட்டப்பேரவைத் தேர்தலில் வெல்வதற்கான வியூகங்களை வகுத்து செயல்படுத்தத் தொடங்கிவிட்டது.
அதேபோல 2024-ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தலுக்கு சரியாக இன்னும் 2 ஆண்டுகள் இருந்தாலும், தேர்தலை எதிர்கொள்ளவும் ஹாட்ரிக் வெற்றி பெறவும் பாஜக காய்களை நகர்த்தி வருகிறது.
பாஜகவை மூன்றாவது முறையாக வெல்ல விடக் கூடாது என்ற எண்ணம் எதிர்க்கட்சிகளுக்கு இருந்தாலும், அந்தக் கட்சிகள் ஓரணியாக இணைவதில் பெரும் சிக்கல் இருக்கிறது. யார் தலைமையில் இயங்குவது என்பது இடியாப்பச் சிக்கலாகவே உள்ளது.
கடந்த காலங்களில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் தெற்கிலிருந்து என்.டி.ராமாராவ், மு.கருணாநிதி, சந்திரபாபு நாயுடு போன்ற தலைவர்கள் முக்கிய பங்காற்றியிருக்கிறார்கள். இப்போதும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க தெற்கிலிருந்து அதுபோன்ற தலைவர்களின் தேவை இருக்கிறது.
2024ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில், ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தியை முதன் முதலில் பிரதமர் வேட்பாளராக மு.க. ஸ்டாலின் முன்னிறுத்தி பேசினார். அது, தமிழகத்தில் எடுபட்டது. ஆனால் , தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் பொருட்படுத்தவில்லை. இதேபோல சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர ராவ் ஆகியோரும் அணிகளை கட்டமைக்க பல தலைவர்களையும் சந்தித்தனர். ஆனால், அதெல்லாம் ஒரு புள்ளியில் வந்து நிற்கவில்லை.
இந்நிலையில் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான கூட்டணியை உருவாக்குவதில் காங்கிரஸ் கட்சியின் விருப்பமான தேர்வாக மு.க. ஸ்டாலினே இருப்பதாக டெல்லியில் தகவல்கள் அலையடிக்கின்றன.
உதாரணமாக காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணாமூல் காங்கிரஸ் போன்றவை மேற்கு வங்கத்தில் எதிரும் புதிருமாக நிற்கின்றன. ஆனால், இந்த மூன்று கட்சிகளையும் இணைக்கும் பாலமாக முதல்வர் ஸ்டாலினால் இருக்க முடியும் என்று காங்கிரஸ் தலைமை கருதுவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதே கருத்தில்தான் இடதுசாரிகளும் இருப்பதாகவும் தெரிகிறது.
தமிழகத்தில் பாஜக - அதிமுக கூட்டணிக்கு எதிராக மதச்சார்பற்ற கூட்டணியை உருவாக்கி, அந்தக் கூட்டணியை வெற்றிகரமாக 4 ஆண்டுகளாக நகர்த்தி வந்திருப்பதையும் இடதுசாரிகள் ஓர் உதாரணமாகக் குறிப்பிடுகின்றன.
மேலும் தேசிய அரசியலில் ஸ்டாலினின் பங்கை அங்கீகரித்துள்ள இடதுசாரிகள், ‘ஸ்டாலின் தேசிய அளவில் முக்கிய முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக’ அண்மையில் டெல்லியில் நடைபெற்ற திமுக அலுவலக திறப்பு விழாவில் தலைவர்கள் கலந்துரையாடலின்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.
மேலும், ‘தேசிய அரசியல் அரங்கில் திமுகவின் பொறுப்பு உயர்ந்துள்ளது. பாஜகவுக்கு எதிரான வலுவான கூட்டணியை அமைக்க ஸ்டாலின் விருப்பம் தெரிவித்தார்’ என்றும் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு திமுக அமைப்புச் செயலாளரும் எம்.பி.யுமான ஆர்.எஸ். பாரதியும் தெரிவித்திருக்கிறார்.
காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் மட்டுமல்லாமல், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி, ஆர்ஜேடி போன்ற கட்சிகளோடும் திமுக நல்ல தோழமையில் உள்ளதால், முதல் கட்டமாக இதுபோன்ற கட்சிகளை ஓரணியில் இணைக்க திமுக முக்கிய பங்காற்றும் என்று டெல்லி வட்டாரங்களில் அரசியல் காற்று அனலடிக்கத் தொடங்கியிருக்கிறது.
முன்னதாக, எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் காங்கிரசுக்கு இடம் இல்லை என தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி , அந்த கூட்டணிக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தலைமை ஏற்க வேண்டும் என சூசகமாக குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் சரத்பவார் பேசியதாவது, அண்மையில் எங்கள் கட்சியின் இளைஞரணி சார்பில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராக நான் இருக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அந்த பதவி மீது தமக்கு ஆர்வம் இல்லை. நான் அந்த பொறுப்பை ஏற்க மாட்டேன். எனினும் பாஜகவை எதிர்த்துப் போராட எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க உதவுவேன்.
ஆட்சியில் இல்லா விட்டாலும் காங்கிரஸ் நாடு முழுவதும் கிளைகளை கொண்டுள்ள கட்சி. எதிர்க்கட்சி கூட்டணியில் இருந்து அந்த கட்சியை விலக்கி வைக்க முடியாது . நாட்டில் ஒரு கட்சி மட்டும் வலுவாக இருந்தால், அது புதினைப் போல மாறும் , இந்தியாவில் ஒருபோதும் புதின் இல்லை என்று நம்புகிறேன். இவ்வாறு சரத் பவார் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைப்பதில் முக்கிய பங்காற்றும் இடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்.... தேசிய அரசியலில் தவிர்க்க முடியாத முக்கிய தலைவராக உருவெடுத்துள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின்..
No comments
Thank you for your comments