அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்- சென்னை உரிமையியல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சென்னை:
சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கிய அதிமுக பொதுக்குழுவின் தீர்மானம் செல்லும் என்று சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதிமுக பொதுச் செயலளாராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு 2016-ம் ஆண்டு பிப்ரவரி 29-ம் தேதி கட்சியின் பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவையும், துணை பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரனையும் தேர்ந்தெடுத்துள்ளதாக அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்ல நேரிட்டது. இதனால் அ.தி.மு.க.,வை அவரால் வழிநடத்தி செல்ல இயலவில்லை.
இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது. அப்போது சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும், டி.டி.வி. தினகரனை துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கி தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
மேலும் அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான கடிதங்களை தலைமை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்தனர். தேர்தல் ஆணையமும் அவர்களது தேர்வை ஏற்றுக்கொண்டது.
இதை எதிர்த்து சசிகலா சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் 1.11.2017-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லாது என்றும் அது சட்டத்துக்கு புறம்பானது என்றும் கூறி இருந்தார்.
பொதுச்செயலாளராகிய நான் தான் பொதுக்குழுவை கூட்ட முடியும். ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் புதிய பதவிகளை உருவாக்கியது சட்ட விரோதமானது. எனவே இவர்கள் கூட்டிய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்.
சசிகலா மனுவிற்கு பதில் அளிக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, செம்மலை ஆகிய 3 பேரும் பதில் மனுதாக்கல் செய்தனர். அதில் அ.தி.மு.க. இணைந்ததால் தேர்தல் கமிஷனில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது.
எங்களது ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. எனவே சசிகலா தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி இருந்தனர்.
இதற்கு சசிகலா தரப்பில் மீண்டும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் அ.தி.மு.க., அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் இறந்துவிட்டார். டி.டி.வி. தினகரன் அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கிவிட்டார் என்று குறிப்பிட்டிருந்தார்.
இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தீர்ப்பு வழங்க முடிவு செய்து இருந்தது. ஆனால் நீதிபதி வராததால் தீர்ப்பு அளிப்பது தள்ளி வைக்கப்பட்டது.
இந்த வழக்கில், சென்னை மாவட்ட 4-வது கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஜெ. ஸ்ரீதேவி தீர்ப்பளித்தார். அதில், அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து வி.கே.சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை ஏற்று, சசிகலா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தும், சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கிய அதிமுக பொதுக்குழுவின் தீர்மானம் செல்லும் என்றும் நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
No comments
Thank you for your comments