சாதனைப் படைத்த கலைஞர்கள் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்
வேலூர், ஏப்.14-
கலைத்துறையில் சாதனைப் படைத்த வேலூர் மாவட்டக் கலைஞர்கள் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தின் கலைப் புலமைகளை மேம்படுத்தவும், பாதுகாக்கும் நோக்கிலும், கலைஞர்களின் கலைத்திறனை சிறப்பிக்கும் வகையிலும் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் செயல்படும் மாவட்டக் கலைமன்றங்களின் வாயிலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் கலைத்துறையில் சாதனைகள் படைத்துள்ள 18 வயதும் அதற்குட்பட்டவர்களுக்கு கலை இளமணி விருது, 19 முதல் 35 வயது வரை கலை வளர்மணி விருது, 36 முதல் 50 வயது வரை கலைச்சுடர்மணி விருது, 51 முதல் 65 வயது வரை கலை நன்மணி விருது, 66 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கலை முதுமணி விருது என அகவைக்குதக்க விருதுகள் வழங்கிட அரசு ஆணையிட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த குரலிசை, பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில், வயலின், மிருதங்கம், வீணை, புல்லாங்குழல் உள்ளிட்ட இசைக் கருவிகள் இசைக்கும் கலைஞர்கள், ஓவியம், சிற்பம், சிலம்பாட்டம், நாடகக் கலைஞர்கள் மற்றும் கரகாட்டம், காவடி, பொய்க்கால் குதிரையாட்டம், கைச்சிலம்பாட்டம், தெருக்கூத்து உள்ளிட்ட நாட்டுப்புறக்கலைகளை தொழிலாகக் கொண்டுள்ள கலைஞர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
விருதுகள் பெற கலைஞர்கள் தங்கள் சுய விவர குறிப்பு, நிழற்படம் இணைத்து, வயதுச் சான்று, முகவரிச் சான்று (ஆதார் அட்டை நகல்) மற்றும் கலை அனுபவச் சான்றுகளின் நகல்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களுடன் உதவி இயக்குநர், கலை பண்பாட்டுத் துறை, சதாவரம் , ஓரிக்கை அஞ்சல் , சின்ன காஞ்சிபுரம்-631502 என்ற முகவரிக்கு 30.04.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரம் வேண்டுவோர் இவ்வலுவலக தொலைபேசி எண் 044-27269148 பெறலாம் என வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
செய்தி வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், வேலூர்
No comments
Thank you for your comments