கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார் தா.மோ.அன்பரசன்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியங்களில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமினை மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் மற்றும் திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.டி.ஆர்.பாலு ஆகியோர் துவக்கி வைத்தார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம் மொளச்சூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி மற்றும் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் நல்லூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி ஆகிய இடங்களில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமினை மாண்புமிகு மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் மற்றும் திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.டி.ஆர்.பாலு ஆகியோர் இன்று (23.04.2022) துவக்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகள் மற்றும் பரிசோதனை மையங்களை பார்வையிட்டனர்.
இம்முகாமில் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் பேசியதாவது:
மாண்புமிகு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் வருமுன் காப்போம் திட்டமானது ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டம் பூந்தமல்லியில் முதன்முதலில் செயல்படுத்தப்பட்டது. கிராமப்புற பொதுமக்கள் நோயற்ற நல்வாழ்வு வாழ உறுதி செய்திடும் வகையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் தற்போது புதுப்பொலிவுடன் செயல்படுத்தப்பட்டு மீண்டும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
கிராமங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் மருத்துவ வல்லுநர் குழுவினர் நேரில் சென்று மருத்துவ முகாம்களை நடத்தி பல்வேறு நோய்களை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து, மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்து குணப்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். பொதுமக்களிடம் வருமுன் காப்போம் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பல்வேறு விதமான நோய்களை கண்டறிந்து மேல் சிகிச்சை மேற்கொள்ள மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களுக்கும், இயலாத மக்களுக்கும் இலவச பன்முனை மருத்துவ பரிசோதனை சிகிச்சைகள் செய்து கொள்ள வழிவகுக்கும்.
இம்முகாம்களில் குழந்தை நலம், பல் மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை, இருதய நோய், நீரிழிவு நோய், புற்றுநோய், காசநோய், மகப்பேறு மருத்துவம், சித்த மருத்துவம், மனநல ஆலோசனை ஆகிய துறைகளில் சிறப்பு மருத்துவ குழுவினர்களால் மருத்துவ உதவிகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 19 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இம்முகாம்களின் மூலம் 18,101 நபர்கள் பயனடைந்துள்ளனர். இதில் 7842 நபர்களுக்கு ரத்த பரிசோதனை, 1386 நபர்களுக்கு இருதய பரிசோதனையும், 754 கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்து, சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சிகிச்சையின் போது, மேல் சிகிச்சை செய்திட வேண்டுமென்றால் முதலமைச்சருடைய விரிவான காப்பீட்டு திட்டத்திற்கு பரிந்துரை செய்யப்படுகிறது.
தற்போது செயல்படுத்தப்படும் மக்களை தேடி மருத்துவம் என்கிற திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்து மருத்துவ உதவிகள் வழங்கப்படுகிறது. மேலும் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தில் எலும்பு முறிவு, கை, கால், மூட்டு வலி, தசை தளர்வு போன்ற நோய்களுக்கு வீட்டிற்கே சென்று பிஸியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 82,229 நபர்கள் பயனடைந்துள்ளனர். இதுமட்டுமல்லாமல் நெடுஞ்சாலைகளில் சாலை விபத்து ஏற்படின், அவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.
மக்களுக்காக செயல்படுத்தப்படும் இத்திட்டங்களை பொதுமக்கள் வாய்ப்பாக கருதி பயன்படுத்திக்கொண்டு, தேவையான பரிசோதனைகள் மேற்கொண்டு தொடக்க நிலையிலேயே நோயின் தன்மையை தெரிந்து மருத்துவ ஆலோசனைகளை பெற்று தங்களது ஆரோக்கிய வாழ்வை உறுதி செய்து கொள்ள வேண்டும் என மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
இம்முகாமில் மக்களை தேடி மருத்துவம் என்கிற திட்டத்தின் கீழ் 10 நபர்களுக்கு மருத்துவ பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 60 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டத்சத்து பெட்டகம் மற்றும் 5 ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளை மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன், திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப. மற்றும் திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.செல்வப்பெருந்தகை ஆகியோர் வழங்கினர்.
இம்முகாமில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.செல்வப்பெருந்தகை, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் படப்பை திரு.ஆ.மனோகரன், குன்றத்தூர் ஒன்றியக் குழுத் தலைவர் திருமதி.சரஸ்வதி மனோகரன், திருப்பெரும்புதூர் ஒன்றியக் குழு தலைவர் திரு.எஸ்.டி.கருணாநிதி, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.பா.பிரியாராஜ் மற்றும் உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.

.jpg)
.jpg)

No comments
Thank you for your comments