தனியார் மருத்துவமனைகளில் தொடரும் முறைகேடுகள்..!
வேலூர், ஏப்.5-
கல்வியும் சுகாதாரமும் மனிதனின் அடிப்படை உரிமை என்கிறோம். ஆனால், இந்த இரண்டிலும்தான் அதிக முறைகேடுகள் நடக்கின்றன. இந்த இரண்டு இடங்களில்தான் ஏன் என்ற கேள்வி எழுப்பாமல்... பேரம் பேசாமல் கேட்கும் கட்டணத்தை பொதுமக்கள் கட்டுகின்றனர் என்று கூறினால் மிகையாகாது... அன்றாடும் தேவைக்கு அல்லல்படுபவர்களும் சரி... ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர்களும் சரி... பள்ளியிலும், மருத்துவமனைகளில் சம்பாதிக்கும் பணத்தை ஏனென்ற கேள்வி இல்லாமல் அதிகம் செலவிடும் இடமாக உள்ளது... குறிப்பாக, சில தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் கட்டணக் கொள்ளைகள் பற்றி நாம் கேள்விப்படும் சம்பவங்கள் ஒவ்வொன்றும் நெஞ்சை பிளக்கும்...
‘‘சேவையாக இருந்த மருத்துவம் எப்போது தொழில்மயமானதாக மாறியதோ, அப்போதே அது பணம் சம்பாதிப்பதற்கான இடமாக மாறிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் அரசு மருத்துவமனைகள் நம்பகத்தன்மையை இழந்ததுதான் காரணம்!
கொள்ளை லாபம்
கோடிக்கணக்கான ரூபாயை தனியார் மருத்துவமனைகள் முதலீடு செய்கின்றன. அதனால், செலவு செய்த பணத்தை எடுத்தாக வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு வந்துவிடுகிறது. அதற்குப் பிறகு லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற அடுத்த கட்ட நெருக்கடியும் இருக்கிறது. இதனால்தான் சேவையாக நடக்க வேண்டிய மருத்துவம் இன்று இலக்கு நிர்ணயித்து செயல்படும் இண்டஸ்ட்ரியாக மாறியிருக்கிறது. லாபம் என்ற விஷயத்தை ஏற்றுக் கொள்ளலாம்தான். ஆனால், ‘கொள்ளை லாபம்’ என்று அளவு தாண்டுவதைத்தான் சகித்துக் கொள்ள முடியவில்லை.
அரசு மருத்துவமனைகள் மக்களிடம் தங்கள் நம்பகத்தன்மையை இழந்துவிட்டதும் தனியார் மருத்துவமனைகளின் விஸ்வரூப வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகிவிட்டது.
தனியாக கிளினிக் நடத்தும் அரசு மருத்துவர்கள்
அரசு மருத்துவர்கள் தனியாக கிளினிக் நடத்தக் கூடாது. ஆனால், அரசு மருத்துவர்களில் பலர் தனியாக கிளினிக் நடத்துவதால் மருத்துவமனைகளில் அவர்கள் இருக்கும் நேரமும் குறைகிறது. அதுமட்டுமின்றி அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளிடம் நீங்கள் எனது கிளினிக் வந்த பாருங்கள் என்றெல்லாம் கூறும் அரசு மருத்துவர்களும் உண்டு... இதுபோன்ற சம்பவமும் தொடர்ந்து அரங்கேறிவருகிறது... நோயாளிகளோ பயத்தில் மருத்துவர்கள் கூறுவதை பின்பற்றுகின்றனர்...
இந்நிலையில், கிளினிக் வருபவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய அரசு மருத்துவமனைக்கு வரவழைத்து இலவச அறுவை சிகிச்சை செய்த சம்பவமும் வேலூரில் நடைபெற்று உள்ளது... இது பாராட்டுதலுக்கு உரியதுதான்... இதுபோன்ற மருத்துவர்களுக்கு இடையில் பலர் கொள்ளை லாபத்தோடு செயல்படும் செயல் வெட்க கேடானாது...
மருத்துவ தொழிலை சேவையாக கருதி நேர்மையாக தொழில்புரிபவர்களும் உண்டு... அதே போல் வர்த்தக நோக்கோடு லாபம் மட்டுமே பிராதனம் என்று தொழில் புரிபவர்களும் உண்டு... லாப நோக்குடன் செயல்பட்டாலும்... மனித உயிர்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாகும்... மருத்துவ செலவிற்கு யாரும் பேரம் பேசுவதில்லை... இதனை மருத்துவர்களும் உணரவேண்டும்.. நடமாடும் தெய்வமாக மருத்துவர்களைதான் பார்க்கின்றனர்.... லாப நோக்கிற்காக மனிதனின் உணர்வுகளோடு விளையாடகூடாது என்பதுதான் அனைவரது அவா.....
மருத்துவ மனைகளில் நடக்கும் முறைகேடுகள்.. மக்களின் பாதிப்புகளும் அவ்வப்போது செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது... இதுபோன்ற சம்பவங்களால் பொதுமக்கள் மிகவும் அச்சத்திற்கு ஆளாகின்றனர்... குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் சில தனியார் மருத்துவமனைகளில் நடைபெறும் முறைகேடுகளை பட்டியலிட்டால் நீண்டுகொண்டே போகும் அளவிற்கு முறைகேடுகள் அரங்கேறுகிறது...
கட்டண கொள்ளை
நோயாளிகளின் பலவீனத்தை சாதகமாக பயன்படுத்தி தேவையில்லாத பரிசோதனை, உபகரண செலவுகள் என பல்வேறு வகையில் கட்டணங்களை வசூலிக்கின்றனர்... உள் நோயாளிகளிடம் பெட் சார்ஜ் வரைமுறையின்றி வசூலிக்கப்படுகின்றன... இவ்வாறு பல்வேறு குற்றச்சாட்டுகள் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது... அதுமட்டுமின்றி பார்மசி கமிஷனுக்காக மருந்தகளை வீட்டு மளிகை பொருட்கள் போன்று நீளாமாக பட்டியலிடும் அவலமும் தொடர்கதையாக உள்ளது...
மருத்துவ காப்பீடு
அன்மை காலங்களாக இந்த பட்டியலில் அதிக முறைகேடு நடப்பது காப்பீடு திட்டத்தில்தான்... ஒருவர் காப்பீடு திட்டத்தில் சிகிச்சைக்காக வருகிறார் என்றால் எப்படியெல்லாம் அவரைப் பயன்படுத்திக் கொள்ள முடியுமோ, அந்த அளவுக்குப் பயன்படுத்துகிறார்கள்... அதுவும் முதியோர் என்றால் அவர்களுக்கு வரப்பிரசாதம் போல்...
சாதரணமாக இப்போது உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவமனைக்கு சென்றால்... காப்பீடு இருக்கின்றது என்றறிந்தால் உடனடியாக அவர்களை உள்நோயாளி பிரிவில் சேர்த்துவிடுகிறார்கள்... உடனே பரிசோதனை, சிகிச்சை என்று ஆரம்பித்து அவர்கள் இஷ்டம்போல் கல்லா கட்டுகின்றனர்... அப்பாவி பாமர மக்கள் விவரம் அறியாமல் இலவசமாக பரிசோதனை செய்கொள்கின்றோம் என்ற ஆர்வத்தில் கையெழுத்து இடுகின்றனர்... இதனால் நஷ்டம் அடைவது அரசாங்கம்தான்... மக்களின் வரிப்பணம்... அதன்பிறகு உண்மையில் அவர்களுக்கு தேவைபடும் போது காப்பீடு பயனற்றுபோகும் என்பதை அப்பாவி மக்கள் உணரவேண்டும்...
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலமாக கட்டணமில்லாமல் வழங்குவதற்காகவும், அனைவருக்கும் சுகாதார வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் தமிழக அரசால் தொடங்கப்பட்டு, யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
ஆனால், இதில் அதிக பலன் பெறுவது சில அடாவடி தனியார் மருத்துவமனைகள்தான்... என்ற குற்றச்சாட்டு சமீப காலமாக தொடர்ந்த வண்ணம் உள்ளது... கடந்த சில ஆண்டுகளாக இந்த முறைகேடு அதிகரித்துள்ளது...
மருத்துவமனையில் இப்படியெல்லாம் மோசடிகள் நடக்கிறது என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். காப்பீட்டுத் திட்டங்களை அரசாங்கம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். கொள்ளை அடிக்கும் மருத்துவமனைகள் பற்றிப் புகார் வந்தால், அவற்றை சரிபார்த்து இன்ஸ்யூரன்ஸ் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்... என்ற கோரிக்கைகள் தற்போது வலுத்துவருகிறது.
ஒருமுறை பயன்படுத்தும் மருத்துவ சாதனங்கள்
மேலும், சில தனியார் மருத்துவமனைகளில் ஒருமுறை பயன்படுத்தும் மருத்துவ சாதனங்கள் (single-use medical devices) திரும்பவும் பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
ஒரு சில மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்டும் சில வகை உபகரணங்கள் மறுபயன்பாட்டுக்கு தகுதியற்றதாக வகை பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நோயாளிக்கும் இந்த உபகரணத்தை புதிதாக தான் பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவ விதிமுறைகள் உள்ளது. இத்தகைய பொருட்கள் பயன்பாட்டிற்கு பிறகு அழிக்கப்பட வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், சில தனியார் மருத்துவமனைகள் இத்தகைய உபகரணங்களை நோயாளிக்கு தெரியாமல் மறுபயன்பாடு செய்து வரும் அதிர்ச்சி தகவல்கள் அவ்வப்போது வெளியாகியுள்ளது. அதோடு, நோயாளியிடம் புதிய உபகரணத்திற்கான கட்டணத்தை வசூல் செய்து கொண்டு, ஏற்கனவே வேறு ஒரு நோயாளிக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையே பயன்படுத்தி, தலா ரூ. 10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை கொள்ளை லாபம் அடிப்பதும் தொடர்ந்து அரங்கேறிவருகிறது... இதனால் பணத்தையும் பறிகொடுத்துவிட்டு, கிருமி தொற்று ஆபத்தையும் நோயாளி சுமக்க நேரிடுகிறது.
இத்தகைய உபகரணங்களின் மறுபயன்பாடு என்பது 4 முதல் 5 முறை வரை நீடிக்கிறது. செலவை கட்டுப்படுத்துவதற்காக இத்தகைய விதிமீறல் நடக்கிறது. உபகரணங்களை மீண்டும் பயன்படுத்துவது அவ்வளவு நல்லதல்ல. இது நோயாளிக்கு இழைக்கப்படும் அநீதி என்பதோடு, இது கிரிமினல் குற்றமாகும். இந்த மோசடி பல தனியார் மருத்துவமனைகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதை எளிதாக அரசு விசாரித்து கண்டுபிடித்து விட முடியும். ஏழை மக்களின் செலவை குறைப்பதற்காக இவ்வாறு மறு பயன்பாடு செய்வதாக சில மருத்துவமனைகள் சப்பை கட்டு கட்டுகிறது.
தகுதியற்ற ஊழியர்கள்
சில தனியார் மருத்துவமனைகள் குறைவான சம்பளத்திற்காக, தகுதியற்ற ஊழியர்களை பணியில் அமர்த்துகின்றனர். குறிப்பாக செவிலியர்கள் படிப்பை படிக்காதவர்கள் செவிலியர்களாக பணியாற்றுகின்றனர்.. இதுபோன்ற செயல்களாலும், அஜாக்கிரதையான செயல்பட்டாலும் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது..
கருதரிப்பு மையம்
இதே போன்று கருதரிப்பு மையத்திலும் பல்வேறு குளறுபடிகள் நடக்கின்றன... குறிப்பாக பெண்ணுக்கு கருதரிப்பு செய்யும் போது அவர்களுடைய கணவரது விந்து என்று கூறி வேறொருவருடைய விந்தை பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது...
சட்டவிரோத கருகலைப்பு
சில தனியார் மருத்துவமனைகளில் கருகலைப்பும் சட்டவிரோதமாக நடைபெறுகிறது... கருகலைப்பு கழிவை திருட்டுதனமாக கழவுநீர் கால்வாயில் கொட்டும் அவலமும் அவ்வபோது வேலூரில் அரங்கேறி வருகிறது... நடவடிக்கை எடுக்கவேண்டிய மாநகராட்சி அறியாமையில் உள்ளதா... அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் உள்ளதா என்ற கேள்வியே நம்¢முன் எழுகின்றன...
நம்பிவரும் மக்களை ஏமாற்றும் தொழிலாக இன்று மருத்துவதுறை விஸ்வரூபம் வளர்ச்சி அடைந்து வருகிறது... மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கின்றது... உண்ணதமாக போற்றும் தொழிலான மருத்துவ துறையில் நடக்கும் முறைகேடுகள் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது... இதில் அதிகம் பாதிக்கப்படுவது அப்பாவி ஏழை மக்கள்தான்...
ஆனாலும் சில மருத்துவர்கள் தெளிவாக கூறுகிறார்கள்... இந்த மருந்து அளவுக்கு அதிகமாக எடுக்ககூடாது... அடிக்கடி ஸ்கேன் செய்ய கூடாது.. தேவையற்றது என்று கூறும் மருத்துவர்களையும் காண முடிகிறது என்பது ஆறுதலான விஷம்... பாராட்டுதலுக்கு உரியது...
மருத்துவமும் மருத்துவக் கல்லூரிகளும் அரசு மயமாக இருந்தவரையில் இந்த அளவு மோசடிகள் நடக்கவில்லை. தனியார் மயமான பிறகுதான் இந்த ‘கொள்ளை லாபம்’ என்ற முறையே உருவானது. அதனால், மருத்துவம் என்பது மீண்டும் அரசு மயமாவதுதான் இதற்குத் ஒரே தீர்வு.
அன்பார்ந்த வாசகர்களே...
அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள தங்களது நல்ல அனுபவங்களையும், பாதிப்புகளையும் மற்ற வாசகர்களுக்கு பகிர்ந்துகொள்ள காலச்சக்கரம் பாலமாக உள்ளது.
எனவே உங்களது அனுபவங்களையும் கருத்துகளையும்
“காலச்சக்கரம் நாளிதழ்,
54, 3வது குறுக்குத்தெரு,
டிகேஎம் கல்லூரி பின்புறம்,
கணபதி நகர், வேலூர்-2”
என்ற முகவரிக்கு எழுதி அனுப்பவும்.. அல்லது 9360006677 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கோ..
ksm.news2015@gmail என்ற மின்னஞ்சலுக்கும் அனுப்பலாம்...
No comments
Thank you for your comments