டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளனின் மறைவு-ரூ.10 லட்சம் நிதியுதவி..
சென்னை, ஏப்.19-
மேகாலயா மாநிலத்தில் நேற்று முன்தினம் நடந்த சாலை விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் (18), உயிரிழந்தார். டேபிள் டென்னிஸ் வீரரான விஸ்வா தீனதயாளனின் மறைவிற்கு பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
83வது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ள தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் மற்றும் 3 வீரர்கள், அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து நேற்று முன்தினம் காரில் ஷில்லாங் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். ஷாங்பங்க்ளா என்ற இடத்தில் சென்றபோது, எதிரே வந்த லாரி டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் டிவைடரை தாண்டி வந்து கார் மீது மோதியது.
இந்த விபத்தில் கார் டிரைவர் மற்றும் தீனதயாளன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மற்ற 3 பேர் படுகாயமடைந்தனர்.
தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்கள் வென்றுள்ள தீனதயாளன், வரும் 27ம் தேதி ஆஸ்திரியாவின் லின்ஸில் தொடங்க உள்ள சர்வதேச போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க இருந்தார்.
கார் விபத்தில் உயிரிழந்த விஸ்வா தீனதயாளனின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல் எனமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்நிலையில், விபத்தில் பலியான டேபிள் டென்னிஸ் வீரரின் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, விஸ்வாவின் உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட உடலுக்கு அமைச்சர் மெய்யநாதன் அஞ்சலி செலுத்தினார். இதனை அடுத்து பேட்டியளித்த அவர், வெளிநாடுகள் அல்லது வெளிமாநிலங்களுக்கு விளையாடச் செல்லும் விளையாட்டு வீரர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும் என்றார்.
இந்நிலையில், தமிழக சட்டசபை நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. முதலில் மேகாலயா மாநிலத்தில் கார் விபத்தில் பலியான தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளனுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
No comments
Thank you for your comments