Breaking News

தமிழ்நாடு கனிம நிறுவன கிரானைட் வருவாயை ரூ.105 கோடியாக அதிகரிக்க திட்டம்: கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்

 சென்னை: 

தமிழ்நாடு கனிம நிறுவனம் 2022-2023 ஆம் நிதியாண்டில் கிரானைட் மூலம் கிடைக்கும் வருவாயினை ரூபாய் 77 கோடியாகவும், 2023-2024 ஆம் ஆண்டில் ரூபாய் 105 கோடியாகவும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக சுரங்கங்கள் மற்றும் கனிமவளங்கள் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று கனிம வளங்கள் துறை, தொழில் துறை, தமிழ் வளர்ச்சித்துறைகளுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. முன்னதாக கேள்வி நேரத்தின் போது, உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.

தமிழ்நாடு கனிம நிறுவனம் கிரானைட் விற்பனை குறித்து வெளியிட்டுள்ள தகவல்கள்:

> தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு கனிம நிறுவனம் 1978-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறுவப்பட்டது.

> பெருங்கனிமங்கள் மற்றும் கிரானைட் உள்ளிட்ட சிறு கனிம வளங்களை கண்டறிதல் மற்றும் அவற்றின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றம் செய்து சந்தையில் விற்பதை தமிழ்நாடு கனிம நிறுவனம் தனது முக்கிய குறிக்கோளாக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

> தமிழ்நாடு கனிம நிறுவனம் கருப்பு, வண்ண கிரானைட் கற்கள், பெருங்கனிமங்களான சுண்ணாம்புக்கல், கிராஃபைட், போன்ற கனிமங்களை அறிவியல் முறையில் வெட்டியெடுத்து முறையாக விற்பனை செய்து வருகிறது.

> தமிழ்நாடு கனிம நிறுவனம், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களான கிரானைட் கற்பலகைகள், ஓடுகள், சுவர் பலகைகள், நினைவுச் சின்னங்கள் போன்றவற்றை பல்வேறு நாடுகளில் விற்பனை செய்து தனக்கென ஓர் சந்தையை உருவாக்கியுள்ளது.

> 1978-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரையிலான கால அளவில் இந்தியாவிற்குள் கிரானைட் தொழிலில் 20 சதவீதத்திற்கு மேல் உற்பத்தி / விற்பனை செய்யும் முதன்மை மாநிலமாக தமிழகம் இருந்தது.

> தமிழ்நாடு கனிம நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படுகின்ற கிரானைட் உலகத்திலேயே மிகச் சிறந்த தரம் வாய்ந்த கிரானைட் கற்களாக கருதப்படுகிறது.

> சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் உள்ள கடுமையான நிபந்தனைகளின் காரணமாக 35 கிரானைட் குவாரிகள், 2013-ம் ஆண்டிலிருந்து 2020-ம் ஆண்டு வரை படிப்படியாக மூடப்பட்டதால், 2013-2014 ஆம் ஆண்டில், கிரானைட் மூலம் கிடைத்த தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூபாய் 113 கோடியிலிருந்து 2019-2020 ஆம் ஆண்டில் ரூபாய் 19 கோடியாக குறைந்தது.

> தமிழ்நாடு கனிம நிறுவனம் 2021-2022 ஆம் ஆண்டில், சுமார் 4,700 கன மீட்டர் கிரானைட் கற்களை உற்பத்தி செய்து ரூபாய் 39 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

> தமிழ்நாடு கனிம நிறுவனம் 2022-2023 ஆம் நிதியாண்டில் அதன் வருவாயினை ரூபாய் 77 கோடியாகவும், 2023-2024 ஆம் ஆண்டில் ரூபாய் 105 கோடியாகவும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு அந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments