07.04.2022 அன்று பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று பொருட்கள் கண்காட்சி
காஞ்சிபுரம், ஏப்.6-
ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் மீதான தடை அறிவிப்பை, தமிழக அரசு, 25.06.2018 நாளிட்ட அரசாணை எண் 84ல் வெளியிட்டது. இதன்படி ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கோப்பைகள், அனைத்து அளவிலான மற்றும் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள், நெய்யப்படாத பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், தெர்மாகோல் கோப்பைகள், உணவுப் பொருட்களை கட்ட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள், தண்ணீர் பைகள்/பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்றவை தயாரிக்கப்படுவதும், சேமித்து வைப்பதும், விநியோகிப்பதும், போக்குவரத்து செய்வதும், விற்பதும், உபயோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளன.
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் (தெற்கு மண்டலம்) பிளாஸ்டிக் தடையை கடுமையாக அமல்படுத்தவும், மீறுபவர்களுக்கு எதிராக அடிமட்ட அளவில் நடவடிக்கைகளை எடுக்கவும் அரசுக்கு தொடர்ந்து உத்தரவுகளை வழங்கி வருகின்றன.
இதனை முழுமையாக கண்காணிக்க 07.02.2022 நாளிட்ட அரசாணை எண்.25 ன் படி மாவட்ட அளவிலான பணிக்குழு காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டு, அதன் முதல் கூட்டம் 16.03.2022 அன்று மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி வீசப்படும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள், வணிக வளாகங்கள், துணி கடைகள், மருந்து கடைகள், பல்பொருள் அங்காடிகளில் பயன்படுத்துவதை முற்றிலும் தடை செய்து, அதற்கு மாற்று பொருட்களை பயன்படுத்த ஒருவார காலத்திற்குள் மாறும்படி 21.03.2022 அன்று செய்தி வெளியிடப்பட்டது.
மேலும் இதை தீவிரமாக கண்காணிக்க மாநகராட்சி/ நகராட்சிகள்/ பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் தனித்தனியே குழுக்கள் அமைக்கப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து 07.04.2022 மற்றும் 08.04.2022 அன்று இரண்டு நாட்களுக்கு தடை செய்யப்பட்ட (பிளாஸ்டிக்) நெகிழிப் பொருள்களுக்கு மாற்று பொருளாக பயன்படுத்தப்படும் வாழையிலை, பாக்குமர இலை, காகித சுருள், கண்ணாடி/உலோகத்தால் ஆன குவளைகள், காகித உறிஞ்சு குழாய்கள், காகித/துணி கொடிகள் உணவு தேக்கரண்டிகள், அலுமினியத்தாள், தாமரை இலை, மூங்கில்/மரம் மண் பொருட்கள், துணி/காகிதம்/சணல் பைகள், பீங்கான் பாத்திரங்கள், மண் குவளைகள் ஆகியவைகளை பயன்படுத்த ஊக்குவிக்கும் விதமாக கண்காட்சி / விற்பனையகம், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
எனவே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
No comments
Thank you for your comments