கோட்டையூரில் அதிகாரிகளால் விழுந்த ஓட்டை..! - புதிய மேயர் சரி செய்வாரா?
வேலூர், மார்ச் 14-
வேலூர் மாநகராட்சியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் பெயர்தான் ஸ்மார்ட் சிட்டி பார்ப்பதற்கோ சுமாரான சிட்டியாககூட இல்லை என்றுதான் சொல்லவேண்டும்... கடந்த ஆட்சியில்தான் இந்நிலை... இந்த ஆட்சியிலாவது நிலைமாறுமா இல்லை வழக்கம்போல் கடந்த ஆட்சியை குறைகூறிவிட்டு இவர்களும் தன்பங்கிற்கு கல்லா கட்டுவார்களா என பொதுமக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது..
2011ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகு சுமார் 5 ஆண்டுகளாகியும் நடைபெற வேண்டிய உள்ளாட்சி தேர்தல் பல காரணங்களுக்காக நடைபெறாமல் ஐந்து ஆண்டுகளாக தள்ளி சென்றது.. இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து, அன்மையில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்து மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றனர். இதையடுத்து மறைமுக தேர்தல் நடைபெற்று மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள் என அனைவரும் பதவி ஏற்றுள்ளனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் பணியாற்றவேண்டும், ஆட்சிக்கும், கட்சிக்கும் அவப்பெயர் ஏற்படும்படி நடந்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வேண் என்று அறிவுறுத்தலோடு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
தமிழக முதல்வரின் பேச்சால் பொதுமக்களும் ஆவலுடன் மக்கள் திட்டப்பணிகள் செயல்படுத்துவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். அதே சமயத்தில், அரசியல்வாதியின் பேச்சு காற்றோடு போச்சு என்பதுபோல்தான் இருக்கும், தலைமை என்னதான் செய்தாலும் உள்ளுரில் உள்ளவர்கள் மக்கள் பணியாற்றுவார்களா? என்ற கேள்வியையும் சந்தேகத்தையும் எழுப்பி உள்ளனர். ஆங்காங்கே மாமன்ற உறுப்பினர்கள் இப்போதே மிரட்டல் வேலைகளில் ஈடுபடுவதாகவும் அரசல் புரசலாக உள்ளது... குறிப்பாக வேலூர் மாநகராட்சியில் வேட்பு மனு தாக்கல் செய்தபோது வர்த்தகர்களை மிரட்டியதாகவும்.. பெரும் பேச்சு எழுந்தது...
வேலூர் என்றதுமே... நமக்கு நினைவுக்கு வருவது அகழியுடன் அமைந்த கோட்டை. இந்திய சுதந்திர போராட்டத்துக்கு வித்திட்ட சிப்பாய் புரட்சி நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாக வேலூர் கோட்டை விளங்குகிறது. 16-ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசு காலத்தில் நாயக்கர் மன்னரான குச்சிபொம்மு நாயக்கரால் கட்டப்பட்ட இக்கோட்டையில் தான் 1806-ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி நடந்த புரட்சியில் இந்திய சிப்பாய்களால் முதன்முதலாக பல ஆங்கிலேய அதிகாரிகளும், நூற்றுக்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் நபர்களும் கொல்லப்பட்டனர். அத்தகைய சிறப்பு வாய்ந்த வேலூர் கோட்டையில் தற்போது ஜலகண்டேஸ்வரர் கோயில், மத்திய, மாநில அரசுகளின் அருங்காட்சியகம், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தேவாலயம், மசூதி, பழங்கால ஆயுதக் கிடங்குகள், திப்பு சுல்தான், இலங்கையின் கண்டி பகுதியை ஆட்சிபுரிந்த தமிழ் மன்னர் விக்கிரராஜசிங்கன் ஆகியோர் குடும்பத்துடன் சிறை வைக்கப்பட்டிருந்த இடங்களும் அமைந்துள்ளன. மேலும், தற்போது வேலூர் மாநகராட்சியில் ஸ்ரீபுரம் தங்கக் கோயில், விஐடி, சிஎம்சி மேலும் சிறப்பை அதிகப்படுத்திவிட்டது.
வேலூர் நகராட்சி மன்றம், 1920 இல் எம்.டி.எம். சட்டம் 1920 -இன் படி அன்றைய காலகட்டத்திலேயே உருவாக்கப்பட்டது. அதன் பின் இரண்டாம் நிலை நகராட்சியாக 1947 யிலும், பின் முதனிலை நகராட்சியாக 1979&யிலும் உயர்த்தப்பட்டது.
1866 இல் உருவாக்கப்பட்ட நகர மேம்பாட்டு சட்டம் 1865-ன்படி, 2008 ஆகஸ்டு 1-ம் தேதி முதல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இம்மாநகராட்சி, மேயர், துணை மேயர் உள்ளிட்ட 48 மாமன்ற உறுப்பினர்களைக் கொண்டது.
2011-க்குப் பின்னர் காட்பாடி பேரூராட்சி வேலூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு 60 வார்டுகளாக உயர்த்தப்பட்டது. இந்த மாநகராட்சியின் ஆண்டு வரி வருவாய் சுமார் ரூ.100 கோடி.
இந்நிலையில், பிப்ரவரி 19-ம் தேதி நடந்த முடிந்த தேர்தலில் 31-வது வார்டில் மாமன்ற உறுப்பினராக போட்டியிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார் சுஜாதா ஆனந்தகுமார். இதையடுத்து வேலூர் மேயார் யார் என்ற பரபரப்புக்கு இடையில் திமுக தலைமை அறிவித்ததின்பேரில் ஒருமனதாக சுஜாதா ஆனந்தகுமார் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை மேயராக சுனில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 8-வது வார்டில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்திருந்தநிலையில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்..
வேலூர் மாநகராட்சியில் மொததம் 60 வார்டுகள், 15 வார்டுக்கு ஒரு மண்டலம் என 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மண்டலத்திற்கு ஒரு உதவி ஆணையர்(ஏசி) நிர்வாகத்தின் கீழ் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக உள்ளாட்சியில் நகர்புறத் தேர்தலில் மாநகராட்சி தேர்தல் நடைபெறாமல் அதிகாரிகளின் நிர்வாகத்தின் கீழ் இருந்து வந்தது. மக்கள் பிரதிநிதிகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் அதிகாரிகள் பல்வேறு சட்டங்களை முன்னிலைப்படுத்தி தடை செய்வதில் குறியாக இருந்து வந்தனர்.
ஆனால் அதிகாரிகள் நிர்வாகத்தின் கீழ் இருந்தபோது கேட்பதற்கு ஆளில்லாமல் பணம் பாதாளம் மட்டும் பாய்ந்து பலமாடி கட்டிடங்கள் இன்று நகரின் பல்வேறு பகுதிகளிலும் வானுயர்ந்து அதிகாரிகளின் புகழை சொல்லிக் கொண்டு நிற்கிறது. வரி வருவாய் மாநகராட்சிக்கு கூடியது. அது கட்டிடங்கள் அளவிற்கு அல்ல என்பதும், அது நிர்வாகத்தையும் மக்கள் பணிகளை சிறப்பாக செய்யும் அளவிற்கு போதுமானதாக மாறவில்லை.
காரணம் மாநகராட்சிக்கு வரவேண்டிய வரி வருவாயை குறைத்து மேசையின் கீழே கையூட்டாகப் பெற்று தங்களை வளப்படுத்தி பலர் கொழுத்த கோடீஸ்வரன் கூட ஆகிவிட்டனர். சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆனபின்னும் அடிப்படையான குறைந்த பட்சம் குடிநீர் தேவையைக் கூட முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. அதுவே அப்படி என்றால் குப்பைகள் சரிவர அகற்றப்படாததால் தேங்கி கொசுக்களின் கூடாரமாக மாறிவிட்டது.
புதியதாக பொறுப்பேற்று உள்ள மேயர் சுஜாதா ஆனந்தகுமார் குதிரையின் லகானைப் பிடித்து கடிவாளம் போட்டு அடக்க வேண்டும். அதிகாரிகள் மாமன்ற உறுப்பினர்களுடன் கைகோர்த்து மக்கள் பணிக்கு கையூட்டு வாங்கும் நிலை பெருகுவதை தடுக்க வேண்டும். மக்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் அடங்கிய கண்காணிப்பு குழுவை ஒவ்வொரு வார்டிலும் துவக்கி தீவிர கண்காணிப்பு செய்ய வேண்டும்.
மக்கள் சேவையே மகேசன் சேவையாக நினைத்து மக்களின் தேவையை அறிந்து அடிப்படை தேவைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். இதற்கு தடையாக இருப்பது அதிகாரிகள் என்றால் உடனடியாக மாற்றவும் தயங்கக் கூடாது. கட்டப்பட்ட கட்டிடங்கள் மறு அளவை செய்து முன் தேதியிட்டு வரிகள் வசூலிக்கப்பட வேண்டும். அனுமதி இல்லாமல் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டிடங்கள் இடித்து மாநகராட்சி தேவைக்கு பயன்படுத்த வேண்டும். கட்டடம் மாநகராட்சிக்கு தேவைப்படுமானால் ஆக்கிரமிப்பு இடங்களில் உள்ளதை மாநகராட்சி கையகப்படுத்தி தனது செயல்பாட்டிற்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
முறைகேடாக கட்ட அனுமதித்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து அபராதமும் உரிய அதிகாரிகள் சொத்தில் இருந்து வசூல் செய்ய வேண்டும். அதிகாரிகள் மாற்றம் தான் தீர்வு என்றால் மாற்றம் ஒன்றே மாறாதது என உடனடியாக மாற்றுதல் செய்ய வேண்டும். தேவை எனில் பணியிடை நீக்கமோ, பணி நீக்கம் செய்ய தயக்கம் காட்டக் கூடாது.
அதிகாரிகள்தான் இப்படியென்றால், மாமன்ற உறுப்பினர்கள் சிலர் எல்லை மீறும் செயலும் அரங்கேறி வருகிறது... வேலூர் மாநகராட்சியில் பூங்கா இடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன.. இதில் திமுக மாமன்ற உறுப்பினர்களும் அடங்குவார்கள்... இதனால் பொதுமக்கள் அச்சம் படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்...
எங்களைப் போன்ற அரசியல்வாதிகளுக்கும், உங்களைப் போன்ற அதிகாரிகளுக்கும் மக்கள் தான் எஜமானர்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது என்று மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார் என்பதை நினைவில் நிறுத்த வேண்டும்.
நாம் கோடு போட்டு காட்டிவிட்டோம். மேயர் இனி ரோடு போட்டுக் கொள்ள வேண்டும்.
முதலமைச்சர் வழியில், மக்கள் பணியே மகேசன் பணி என்று புதிய மேயர் மக்கள் பணி செய்து, என்றும் உங்களுடன் என்று மக்கள் போற்றும் மேயராக செயலாற்ற வேண்டும் என்று காலச்சக்கரம் மனமார்ந்த வாழ்த்துகளை தற்போதே சொல்லி பெருமை கொள்கிறது.
பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பு நிறைவேறுமா? என்பதை காலச்சக்கரம் சுழற்சியே காட்டும்...
“மாமன்ற உறுப்பினர்கள் மக்கள் பணி செய்வார்களா... அல்லது காய்ந்த மாடு கம்பு கொல்லை மேய்ந்த கதையாகுமா... காலச்சக்கரம் சுழற்சியில் அனைத்தும் அரங்கேறும்...
No comments
Thank you for your comments