Breaking News

ஓய்வெடுக்க மறுத்த ஜெயலலிதா- அப்பல்லோ மருத்துவர் வாக்குமூலம்!

சென்னை, மார்ச் 7-

ஊட்டிக்கு சென்று ஜெயலலிதாவை ஓய்வெடுக்க கூறியும், அதனை மறுத்து ஜெயலலிதா தொடர்ந்து பணிகளை செய்து வந்ததாக அப்பல்லோ மருத்துவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.


2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தனித்து  போட்டியிட்டு வெற்றி பெற்று சாதனை படைத்தார் ஜெயலலிதா,  இரண்டாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி சிம்மாசனத்தில் அமர்ந்த ஜெயலலிதாவிற்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. 

இந்நிலையில், 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி  75 நாட்களுக்கு பிறகு  மரணம் அடைந்தார். இந்த சம்பவம் அதிமுக தொண்டர்களை அதிர்ச்சி அடைய செய்தது. 

இதனையடுத்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் தர்ம யுத்தம் என்ற பெயரில் போராட்டம் நடத்தினார். இதனை தொடர்ந்து  தமிழக அரசு சார்பில் ஜெயலிதா இறப்பு தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் 2017 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. 

சுமார் இரண்டு வருடங்களுக்கு மேல் நடைபெற்ற விசாரணை ஆணையத்தில் 140க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்றது. குறிப்பாக ஜெயலிதாவின் உதவியாளர்கள், சமையலர்கள், பாதுகாவலர்கள் என அனைத்து தரப்பிலும் விசாரணை நடத்தியது ஆறுமுக சாமி ஆணையம்

இந்த விசாரணை ஆணையம் மீது அப்பல்லோ மருத்துவமனை வழக்கு தொடர்ந்தது. இதனையடுத்து இந்த ஆணையத்திற்கு   இடைக்கால தடை விதிக்கப்பட்டு 2 வருடங்களாக வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

இந்த சூழலில், ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் நிபுணத்துவம் பெற்ற எய்ம்ஸ் இயக்குநர் மருத்துவ குழு அமைத்து விசாரணையை நடத்துவதற்கு  உச்சநீதிமன்றம் உத்தரவு  பிறப்பித்தது.  ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ எய்ம்ஸ் மருத்துவர் நிகில் டாண்டன் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த குழுவை மாற்றியமைத்து மருத்துவர் சந்தீப் சேத் தலைமையில்  6 மருத்துவர்கள் இடம்பெற்றுள்ளனர். 

இதனையடுத்து அப்பல்லோ மருத்துவர்கள் 11 பேருக்கு நேரில் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.  அதன்பேரில் இன்று காலையில் 5 டாக்டர்கள் ஆஜர் ஆனார்கள். அவர்களிடம் வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தினார்.  நாளை 6 மருத்துவர்கள் ஆஜராகிறார்கள். இதற்கிடையில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்களும் காணொலி மூலமாக இன்றைய விசாரணையில் பங்கேற்றனர்.

விசாரணையில் அப்பல்லோ மருத்துவர்கள் ஆஜராகி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.  அதில், 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்கும் நாளுக்கு முன்னதாக ஜெயலலிதாவுக்கு தலை சுற்றல், மயக்கம், துணையில்லாமல் நடக்க முடியாத சூழல், ஆகிய பிரச்னை இருந்ததாக  அப்பல்லோ மருத்துவர் பாபு மனோகர் விசாரணை ஆணையத்தில் தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் தனிப்பட்ட மருத்துவர் சிவக்குமார் அழைத்ததின் பேரில் பதவியேற்புக்கு முந்தைய நாள் போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவை சென்று சந்தித்ததாக மருத்துவர்  பாபு மனோகர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். அப்போது ஜெயலலிதாவிற்கு சில மருந்துகளை பரிந்துரைத்ததோடு, சில உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவும் பரிந்துரைத்ததாகவும் கூறியுள்ளார்.  மேலும் சிறுதாவூர் அல்லது ஊட்டி சென்று சில நாட்கள் ஓய்வு எடுக்குமாறு பரிந்துரைத்ததாகவும் பாபு மனோகர் தெரிவித்துள்ளார். 

நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் வேலை இருப்பதாக ஜெயலலிதாக கூறியதாகவும்,   இதனால் தன்னால் ஓய்வு வெடுக்க முடியாது என மறுத்ததாகவும் பாபு மனோகர் விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வாக்குமூலம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து விசாரணையானது மற்ற மருத்துவர்களிடம் நடைபெற்று வருகிறது. விரைவில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் சசிகலாவிற்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments

Thank you for your comments