Breaking News

மீண்டும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு உள்பட 58 இடங்களில் சோதனை

கோவை:

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு, நகைக்கடை, அலுவலகம், உறவினர்களின் வீடு, உதவியாளர் வீடு என 6 மாவட்டங்களில் 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் அன்பரசன், உதவியாளர் சந்தோஷ் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

கோவை, பாலக்காடு சாலை குனியமுத்தூர் அருகேயுள்ள சுகுணாபுரத்தைச் சேர்ந்தவர் எஸ்..பி.வேலுமணி. கடந்த 2016-21 அதிமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக பதவி வகித்தார். தற்போது முன்னாள் அமைச்சரான எஸ்.பி.வேலுமணி தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏவாக உள்ளார். அதிமுக கொறடாவாகவும் உள்ளார்.



கடந்த அதிமுக. ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக  இருந்தபோது தனது பதவியை தவறாக பயன்படுத்தி தனக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள் ஆகியோருக்கு சலுகை அடிப்படையில் டெண்டர் வழங்கியதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி எஸ்.பி.வேலுமணி வீடு மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வீடு, அலுவலங்கள் என 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்தது. இந்த சோதனையின் போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் ரூ.13 லட்சம் சிக்கி இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.



இந்நிலையில், அவர் மீது இன்ஸ்பெக்டர் எழிலரசி கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸில் ஒரு புகார் அளித்தார். அதில்,"முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வருமானத்துக்கு அதிகமாக 3,928 சதவீதம், அதாவது ரூ.51.09 கோடி சொத்து சேர்த்து உள்ளார்,"எனப் புகார் அளித்தார்.

அதன் பேரில் எஸ்.பி.வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன், அவரது மனைவி ஹேமலதா, கான்டிராக்டர் சந்திரசேகர், சந்திரபிரகாஷ், கிருஷ்ணவேனி, கார்த்தி ,சுந்தர், விஷ்ணுவர்தன், சரவணக்குமார் ஆகிய 10 பேர் மீதும் மற்றும் ஸ்ரீமகா கணபதி ஜூவல்லர்ஸ், கன்ஸ்ட்ரோன்மேன் கூட்ஸ் நிறுவனம், ஆலம் கோல்டு டைமண்ட் நிறுவனம் ஆகிய 3 கம்பெனிகள் என 13 பேர் மீது கூட்டுச்சதி ,ஊழல் தடுப்புச் சட்டம் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் கோவை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் நேற்று வழக்குப்பதிந்தனர்.

இதைத் தொடர்ந்து சுகுணாபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டுக்கு இன்று காலை 6 மணிக்கு டி.எஸ்.பி மதியழகன் தலைமையில் 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் குழுவினர் வந்தனர். அப்போது வீட்டில் எஸ்.பி.வேலுமணி , மனைவி , மகன் உள்ளிட்டோர் இருந்தனர். வீட்டில் இருந்தவர்களை ஓரிடத்தில் அமரச் சொல்லிவிட்டு போலீஸார் தங்களது சோதனையை தொடங்கி நடத்தினர்.

பின்னர் அவரது வீடு முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

அதேபோல் கோவையில் அன்பரசன் வீடு, வேலுமணியின் உதவியாளர் சந்தோஷ் உள்ளிட்ட 41 இடங்களிலும், சென்னையில் 8 இடங்கள், சேலத்தில் 4 இடங்கள், திருப்பத்தூரில் 2 இடங்கள், நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரியில் தலா ஒரு இடம், கேரளாவில் ஒரு இடம் என 58 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனை நடைபெற்று வரும் தகவலை அறிந்ததும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அம்மன் அர்ச்சுணன் தலைமையில் ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் வீட்டின் முன்பு குவிந்து போலீசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பாதுகாப்பு காரணமாக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதேபோன்று தொண்டாமுத்தூரில் உள்ள எஸ்.பி. வேலுமணியின் பண்ணை வீட்டிலும் சோதனை நடந்தது. சுகுணாபுரத்தில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் அன்பரசன் வீடு, அவர் நடத்தி வரும் அறக்கட்டளை அலுவலகம் மற்றும் கடையிலும் சோதனை நடந்தது.

எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவராக கருதப்படும் வடவள்ளி மகாராணி அவென்யூவில் வசித்து வரும் கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளரும் என்ஜினீயருமான சந்திரசேகர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

இதேபோல் கோவை சேரன் மாநகரில் உள்ள சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. கே.ஆர்.ஜெய ராம், வடவள்ளியில் உள்ள சந்திரபிரகாஷ், எஸ்.பி. வேலுமணியின் உதவியாளரான சந்தோஷ் என்பவர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

எட்டிமடையில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ சண்முகம் வீடு, சூலூர் முதலி பாளையத்தில் உள்ள சூலூர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் கந்தவேல் வீடு, அன்னூரில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகாந்தா வீடு உள்பட எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான உறவினர்கள், அதிகாரிகள் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. கோவையில் மட்டும் மொத்தம் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒரே நேரத்தில் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வந்து பல்வேறு பிரிவுகளாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனை நடந்து வரும் அனைத்து இடங்களிலும், யாரும் உள்ளே நுழையாதவாறு வீட்டின் கதவுகள், கேட்டுகள் அனைத்தும் மூடப்பட்டன. வீட்டில் இருந்த யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அவர்களிடம் இருந்த செல்போன் உள்ளிட்டவற்றையும் போலீசார் வாங்கி வைத்து கொண்டனர்.

இதேபோல் சேலத்தில் உள்ள ஒரு நகைக்கடை, ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் வீடு உள்பட 4 இடங்களிலும் நாமக்கல், கிருஷ்ணகிரியில் தலா ஒரு இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்தது.

சென்னையில் 8 இடங்களிலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு இடத்திலும், திருப்பூர் குமரன் சாலையில் உள்ள ஒரு மஹா கணபதி நகை கடையிலும் சோதனை நடைபெற்றது. இதேபோல் கேரளாவில் ஒரு இடத்திலும் சோதனை நடைபெற்றது.

எஸ்.பி.வேலுமணி வீட்டில் 2-வது முறையாக நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்பு சோதனை அரசியல் அரங்கத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


 

No comments

Thank you for your comments