2வது நாளாக பொது வேலை நிறுத்தம்... மக்கள் பெரும் அவதி..
சென்னை, மார்ச் 29-
நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொது வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று காலை முதல் நடைபெற்று வருகின்றது. விலைவாசி உயர்வு கட்டுப்பாடு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதையும், பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வுக்கும் எதிர்ப்பு தெரிவித்து சிஐடியூ, ஏஐடியூசி, யூடியூசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. மேலும்,வங்கி,எல்.ஐ.சி. உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த பொது வேலைநிறுத்தம் காரணமாக தமிழகத்தில் சென்னை உட்பட பல இடங்களில் பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு, பெட்ரோல்-டீசல் மற்றும் விலையேற்றம் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தும், மத்திய அரசின் கொள்கைகளைக் கண்டித்தும் பல்வேறு தொழிற்சங்கங்கள் நேற்று நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கின. இன்று தொடர்ந்து போராட்டம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தொழிற்சங்கங்கள், அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறை தொழிலாளர்கள் பெருமளவில் போராட்டத்தில் இறங்கியதால் இயல்பை விட பாதிப்பு அதிகமாக இருந்தது. அரசு போக்குவரத்து கழகத்தின் பெரும்பாலான டிரைவர், கண்டக்டர்கள் நேற்று பணிக்கு வராததால் தமிழகம் முழுவதும் சுமார் 70 சதவீத பஸ்களை இயக்க முடியவில்லை.
தமிழகத்தில் பெரும்பாலான பஸ்கள் இயங்கவில்லை. தமிழகத்தில் ஓடும் மொத்த 15,335 பஸ்களில் சில பஸ்கள் மட்டுமே இயக்கப்படுவதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இதுபோல் சென்னையில் 3,175ல் 318 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. மொத்தம் தமிழகத்தில் 67% பஸ்கள் இயங்கவில்லை. இந்த நிலையில், இன்று (மார்ச் 29) 60 சதவீத பஸ்கள் இயக்கப்படும் என தொமுச நிர்வாகிகள் தெரிவித்தனர்.
வேலை நிறுத்தத்தின் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் பேருந்துகள் சரிவர இயக்கப்பட வில்லை. பஸ்கள் சரியாக இயங்காததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். சென்னையிலும் நகரப் பேருந்துகள் சரிவர இயங்காததால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
சென்னையில் பொதுபோக்குவரத்தில் முக்கிய அங்கம் வகிப்பது மின்சார ரயில்களும், மெட்ரோ ரயில்களும்தான். தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில்களில் பயணம் செய்கிறார்கள். நேற்று பொதுவேலை நிறுத்தம் நடந்தாலும் ரயில் போக்குவரத்து வழக்கம்போல் இயங்கியது.
பொதுவேலை நிறுத்தத்தில் தொழிற் சங்கங்கள் ஈடுபட்டாலும் அலுவலகங்கள், நிறுவனங்கள் செயல் பட்டதால் கட்டாயம் பணிகளுக்கு செல்ல வேண்டியவர்கள் திண்டாடினார்கள்.
மின்சார ரயில்களிலும், மெட்ரோ ரயில்களிலும் வழக்கமாக நெரிசல் மிகுந்த காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே கூட்டம் அலைமோதும். ஆனால் நேற்று பயணிகள் கூட்டம் காலையில் இருந்தே அலைமோதியது. தாம்பரம்-கடற்கரை, சென்ட்ரல்-அரக்கோணம் வழத்தடத்தில் பல ரயில் நிலையங்களில் டிக்கெட் வாங்குவதற்காக பலர் திரண்டனர். நீண்ட நேரம் காத்திருந்துதான் அவர்களால் டிக்கெட் வாங்க முடிந்தது.
சென்ட்ரல்-பரங்கிமலை, வண்ணாரப்பேட்டை-விமான நிலையம் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களில் நேற்று வழக்கத்தைவிட அதிகமான கூட்டம் காணப்பட்டது.
மின்சார ரயில்களைவிட மெட்ரோ ரயில்களில் கட்டணம் அதிகமாக இருப்பதால் சாமானிய மக்கள் பலர் மெட்ரோ ரயில் பயணத்தை விரும்பவில்லை. ஆனால் நேற்று மெட்ரோ ரயில்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.
மெட்ரோ ரயிலில் வந்த பயணிகள் சிலரிடம் கேட்டபோது, மெட்ரோ ரயில்களில் எவ்வித சிரமும் இல்லாமல் சரியான நேரத்துக்கு செல்ல முடிந்தது. கட்டணம் அதிகமாக இருப்பதால் தினமும் இப்படி சொகுசாக பயணிக்க இயலவில்லை என்று ஆதங்கப்பட்டனர். மேலும் ஷேர் ஆட்டோக்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
திருப்பூர், கோவை, நீலகிரியில் மொத்தம் 980 பஸ்களில் 162 பஸ்கள் மட்டுமே இயங்குகின்றன. திருப்பூர் மண்டலத்தில் உள்ள, 559 பஸ்களில், தற்போது வரை, 62 பஸ்களே பணிமனையை விட்டு வெளியேறி இயக்கத்துக்கு வந்துள்ளது.பெரும்பாலான வழித்தடங்களில் பஸ்கள் இயங்கவில்லை.
பொள்ளாச்சி அரசு போக்குவரத்துக் கழக மூன்று கிளைகளின்,190 பஸ்களில், 15 பஸ்கள் மட்டுமே இயக்கம். நீலகிரியில், 270 வழித்தடத்தில், 320 பஸ்கள் இயக்கப்படுகிறது. நேற்று தொழிற்சங்கங்கள் அறிவித்த ஸ்டிரைக்கையொட்டி, 40 பஸ்கள் இயக்கத்தில் உள்ளது. பெரும்பாலான வழித்தடத்தில் பஸ்கள் இயங்கவில்லை. நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் போராட்டத்திற்கு ஆதரவாக பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. ஆறு பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டது. கேரளாவில் இருந்தும் நீலகிரிக்கு கேரளா அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால், பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். ஆனால், கர்நாடகா அரசு பஸ்கள், வழக்கம்போல் நீலகிரிக்கு இயக்கப்பட்டது.
ஸ்டிரைக்கில் ஈடுபட்டால் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று அறிவித்தும் ஊழியர்கள் பலர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். பொது வேலை நிறுத்தத்தின் காரணமாக தூத்துக்குடி துறைமுகத்தில் ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை. வெளிநாடுகளில் இருந்து வந்த சரக்கு கப்பல்களில் காற்றாலை ஏற்றிச் செல்வதற்கு தயாராக இருந்த கப்பலை மரைன் பைலட் கப்பலை வெளியே அனுப்ப கயிறு எடுத்துவிடும் தொழிலாளர்களிடம் தெரிவித்து உள்ளார். ஆனால் நேற்று வேலை நிறுத்தம் என்பதால் வேலை செய்யமாட்டோம் என்றனர்.
இதனை தொடர்ந்து தொழிற் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்க்கு வந்தனர் . பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது 2 தொழிலாளர்கள் கடலில் குதித்து போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தொமுச நிர்வாகி நடராஜன் கூறுகையில், பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று இன்று (மார்ச் 29) 60 சதவீதம் பஸ்கள் இயக்க ஒத்துழைப்பு வழங்கப்படும். முன்னணி நிர்வாகிகள் மட்டுமே வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவர். மற்ற தொழிலாளர்கள் பணிக்குச் செல்வார்கள். அத்தியாவசிய பணிகள் பாதிக்காமல் வேலைநிறுத்த போராட்டம் தொடரும்' என்றார்.
வேலை நிறுத்தத்தையொட்டி தமிழகத்தில் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வங்கி ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் நேற்றும் இன்றும் வங்கிகள் செயல்படாது. ஏப்.1-ம் தேதி வங்கிகள் செயல்பட்டாலும், வருடாந்திர கணக்கு முடிக்கும் பணியால் வாடிக்கையாளர் சேவை இருக்காது. ஏப். 2-ம் தேதி சனிக்கிழமை தெலுங்கு வருடப் பிறப்பு என்பதால் அன்றும் வங்கிகளுக்கு விடுமுறை.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை நாளாகும். எனவே, இந்த வாரத்தில் புதன், வியாழன் (மார்ச் 30, 31) ஆகிய 2 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும். இதனால், வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும். எனினும், ஆன்லைன் சேவைகள் எப்போதும் போல தடையின்றி செயல்படும் என்றும் ஏடிஎம் மையங்களில் பணத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க போதிய அளவு பணம் இருப்பு வைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




No comments
Thank you for your comments