ஆப்ரேஷன் 2.0- கஞ்சா வியாபாரிகள் 350 பேர் கைது...
சென்னை:
கஞ்சாவை போன்று குட்கா உள்ளிட்ட அனைத்து போதைப் பொருட்களையும் ஒழிக்க நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்க டி.ஜி.பி. சைலேந்திரபாபு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மாவட்ட போலிஸ் சூப்பிரண்டுகள், மாநகர போலீஸ் கமிஷனர்கள், போலீஸ் ஐ.ஜி.க்கள், டி.ஐ.ஜி.க்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த போலீசார் ஒரு மாத சிறப்பு வேட்டையில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.
இதன்படி கடந்த 28-ந்தேதி முதல் மாநிலம் முழுவதும் போலீசார் கஞ்சா வேட்டையில் தீவிரம் காட்டினர்.
சென்னை உள்பட அனைத்து இடங்களிலும் நடைபெற்ற தீவிர கஞ்சா வேட்டையில் 2 நாட்களில் மட்டும் கஞ்சா வியாபாரிகள் 350 பேர் கைதாகி உள்ளனர். 300 வழக்குகள் போடப்பட்டுள்ளன. 150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவையில் அதிகபட்சமாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாம்பரம், ஆவடி போலீஸ் கமிஷனரக எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் கஞ்சா மற்றும் குட்கா வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் 50 பேர் வரையில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது.
கோவையில் ஒரே நாளில் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒடிசாவை சேர்ந்த நிபாஸ் பண்டிகி என்ற வாலிபர் வெளி மாநிலங்களில் இருந்த கஞ்சா பொட்டலங்களை வாங்கி வந்து கோவையில் விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.
சூலூர் பழைய பஸ் நிலையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மணிகண்டன் என்ற வாலிபரும் கைது செய்யப்பட்டுள்ளார். காரமடை பகுதியில் நவநீதகிருஷ்ணன் என்ற வாலிபர் கைதானார். மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கஞ்சா வேட்டையை போலீசார் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு ஒரு மாதம் கஞ்சா வேட்டை நடத்தப்பட்டது. இதில் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து இந்த ஆண்டு தொடங்கியுள்ள கஞ்சா வேட்டைக்கு “ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0” என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 27-ந்தேதி வரை ஒரு மாதம் நடைபெறும் கஞ்சா வேட்டையின்போது அனைத்து கஞ்சா வியாபாரிகளையும் பிடித்து சிறையில் தள்ள போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதற்காக கஞ்சா வியாபாரிகளை போலீசார் விரட்டி விரட்டி கைது செய்து வருகிறார்கள். கஞ்சாவை போன்று குட்கா உள்ளிட்ட அனைத்து போதைப் பொருட்களையும் ஒழிக்க நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments