லதா மங்கேஷ்கருக்கு இரங்கல்: மாநிலங்களவை ஒரு மணி நேரம் ஒத்திவைப்பு
புதுடெல்லி:
லதா மங்கேஷ்கர் மறைவால் இசை உலகில் ஈடுசெய்ய முடியாத வெற்றிடம் உருவாகியுள்ளதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு பேசினார்.
இந்தியாவின் இசைக்குயில் என்று போற்றப்பட்ட பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார். அவரது உடல் அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது. அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில், லதா மங்கேஷ்கர் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இன்று மாநிலங்களவை கூடியதும், அவைத்தலைவர் வெங்கையா நாயுடு இரங்கல் குறிப்பை வாசித்தார்.
‘லதா மங்கேஷ்கரின் மறைவால், இந்திய இசை மற்றும் திரைப்பட உலகில் ஒரு பழம்பெரும் பின்னணிப் பாடகியையும், மனிதநேயமிக்க மனிதரையும், உயர்ந்த ஆளுமையையும் நாடு இழந்துவிட்டது. அவரது மறைவால் ஒரு சகாப்தம் முடிந்துவிட்டது. இசை உலகில் ஈடுசெய்ய முடியாத வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது’ என வெங்கையா நாயுடு குறிப்பிட்டார்.
அப்போது, உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று லதா மங்கேஷ்கருக்கு மவுன அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர் ஒரு மணி நேரத்துக்கு அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.
No comments
Thank you for your comments