பள்ளிக்கரணை சதுப்புநில ஆக்கிரமிப்பு - சீமான் அறிக்கை
சென்னை, பிப்.1-
2014-ல் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கின் விளைவாக 2021-ல் செப்டம்பரில் சென்னை உயர்நீதி மன்றத்தால் பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களின் சர்வே எண்கள் குறிப்பிடப்பட்டு இதில் எந்தவிதப் பதிவும் செய்யக்கூடாது என்று உத்தரவிடப்பட்டது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னையின் சுற்றுச் சூழல் அமைப்புகளில் பள்ளிக்கரணை சதுப்புநிலம் மிக முக்கியமான ஒன்றாகும். 5,000 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்பட்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலமானது தொடர் ஆக்கிரமிப்புகளின் காரணமாகத் தற்போது வெறும் 500 ஹெக்டேராகச் சுருங்கிக் காணப்படுகிறது.
இச்சதுப்பு நிலமானது கடலுக்கு அருகில் இருப்பதால் கடல் நீரையும், கடல் பொங்கி வரும் நேரத்தில் உள்வரும் நீரையும் நிலத்தின் அடியில் தேக்கி வைக்கும் தன்மை கொண்டது. மேலும், இது ஒரு சிறந்த நன்னீர் வடிகட்டியாகவும் திகழ்கிறது. மிகுந்த சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இவ்வமைப்பானது தொடர்ந்து நடைபெறும் கட்டிட ஆக்கிரமிப்புகளாலும், குப்பைகளை அப்பகுதியில் கொட்டப்படுவதாலும், இதனைச் சரிசெய்ய வேண்டிய அரசாங்கத்தின் கவனக்குறைவாலும் அலட்சியப்போக்கினாலும் சீரழிந்து வருகிறது.
2014-ல் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கின் விளைவாக 2021-ல் செப்டம்பரில் சென்னை உயர்நீதி மன்றத்தால் பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களின் சர்வே எண்கள் குறிப்பிடப்பட்டு இதில் எந்தவிதப் பதிவும் செய்யக்கூடாது என்று உத்தரவிடப்பட்டது.
மேலும், தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் உத்தரவிடப்பட்டது. இப்படி மேற்சொன்ன அதிகாரிகள் மட்டுமின்றி பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நடந்த முறைகேடு குறித்த மொத்த புகாரையும் அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் அளித்துள்ளது தெரிய வருகிறது.
இருப்பினும்கூட, இந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல், மாறாக அவர்களுக்குப் பதவி உயர்வும் முக்கியமான பொறுப்புகளும் கொடுக்கப்படுவது ஜனநாயகத்துரோகமாகும்.
எனவே, சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை மீட்டுருவாக்குவதில் முதன்மைக்கவனமெடுத்து, ஆக்கிரமிக்கப்பட்ட நிலப் பரப்புகளை மீட்டெடுத்து, இனி எந்தவித ஆக்கிரமிப்பும் நடைபெறாதவாறு தடுக்க வேண்டும். இதுவரை நடைபெற்ற மோசடிகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments