திராவிட மாடல் ஆட்சிக்கு மக்களின் அங்கீகாரம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சென்னை :
"அதிமுகவின் கோட்டை என்று சொன்ன கொங்கு மண்டலத்தில் பெரும் வெற்றியை பெற்றுள்ளோம்" என்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வெற்றி குறித்து பெருமிதம் தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. அதில் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான இடங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் பெரும்பான்மை பலத்தோடு வெற்றியை பெற்று வருகிறது.
இதன் காரணமாக சென்னையில் உள்ள தி.மு.க. தலைமையகமாக அண்ணா அறிவாலயம் தொண்டர்களின் கொண்டாட்டத்தால் விழாக்கோலம் போல காட்சியளித்தது. இப்படி இருக்கையில் அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களை சந்தித்து மகிழ்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதன் விவரம் பின்வருமாறு:-
இந்த தேர்தல் நேரத்திலே தமிழ்நாட்டு மக்களிடத்தில் ஒரேயொரு வேண்டுகோளை வைத்திருந்தேன். அது, எங்கள் கூட்டணிக்கு முழு வெற்றியை கொடுங்கள். அதனை பயன்படுத்தி உங்களுக்காக பணியாற்ற தொண்டாற்ற காத்திருக்கிறோம் எனக் கோரினேன்.
தற்போது அந்த முழு வெற்றியை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தமிழ்நாட்டு மக்கள் வழங்கியிருக்கிறார்கள்.
கடந்த 9 மாத கால ஆட்சிக்கு மக்கள் வழங்கியிருக்கக்கூடிய நற்சான்றுதான் இந்த வெற்றி. என்னை பொறுத்தவரையில் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கக் கூடிய திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் கொடுத்திருக்கும் அங்கீகாரம்தான் இது.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியமைத்தால் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவார்கள், அந்த நம்பிக்கையை இந்த 9 மாத காலத்தில் முழுமையாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம் நிறைவோற்றுவோம் என உறுதியளிக்கிறேன்
மக்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற தயாராக இருக்கிறோம். எத்தனையோ நல்ல திட்டங்களை வரலாற்றும் பதிவாகும் அளவுக்கான சாதனையை செய்துக் கொண்டிருக்கிறோம். செய்யப்போகிறோம்.
இது தமிழ்நாட்டு மக்களுக்கு 100 சதவிகிதம் கிடைக்க வேண்டுமென்றால் உள்ளாட்சி நிர்வாகத்திலும் 100 விழுக்காடு திமுக கூட்டணி இருக்கவேண்டும் என்றுதான் பிரசாரத்தின் போதும் எடுத்துரைத்தேன்.
இதற்காக ஸ்டாலின் பேராசை கொள்கிறார் என நினைத்துவிடாதீர்கள். இந்த தேர்தலில் உங்களது வாக்குகள் மூலமாக உங்களுக்கான உரிமையை நிலைநிறுத்தியிருக்கிறீர்கள்.
இந்த வெற்றியைக் கண்டு கர்வம் கொள்ளவில்லை. மக்கள் நம் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்ற உறுதிதான் இங்கே நிற்க வைத்திருக்கிறது.
No comments
Thank you for your comments