காதலியை மீட்டு தரக்கோரி குடும்பத்துடன் புகார் அளித்த காதலன்
காதலியை மீட்டு தரக்கோரி காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காதலன் குடும்பத்துடன் புகார் அளித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்புதூர் அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரதாப் என்கிற ஜோஸ்வா. இவர் எம்பிஏ பட்டதாரி ஆவார்.
இவருடைய தங்கை கலா அவருடைய தோழியான ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சித்தூர் கிராமத்தை சேர்ந்த சுவேதாவுடன் இணைந்து ஸ்ரீபெரும்புதூர் தேரடி பகுதியில் குருவில்லா என்ற துணிக்கடையை நடத்தி வந்துள்ளனர்.
தங்கையின் கடைக்கு உதவிக்கு சென்று வந்த நிலையில் சுவேதாவுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறி ஒரு வருடமாக பழகியுள்ளனர்.
இந்நிலையில் ஸ்வேதாவிற்கு அவரது வீட்டில் திருமண நிகழ்வு ஏற்பாடு செய்வதாக கூறியதால் அவரது வீட்டுக்கு பிரதாப் சென்று குடும்பத்துடன் பெண் கேட்டுள்ளார்.
அப்போது இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் வாகனம் ஏற்றி கொல்ல முயற்சித்ததாக கூறி ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் பிரதாப் சார்பில் கடந்த 4ம் தேதி புகார் செய்யப்பட்டுள்ளது
இந்நிலையில் பிரதாப்பிற்கு திருமணம் செய்து தருவதை விட அவளை கொன்று விடலாம் என தனது உறவினருடன் தொலைபேசியில் பேசியதாக சுவேதா கூறியுள்ளார். இதனால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனால் அச்சம் அடைந்த பிரதாப், தனது காதலியை மீட்டு தரக்கோரி காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகரிடம் குடும்பத்துடன் வந்து மனு அளித்துள்ளார்.
பிரதாப் ஆதிதிராவிடர் என்பதும், சுவேதா வன்னியர் என்பதும், இதனால் பெண் தர அவருடைய குடும்பம் மறுப்பதாகவும், பெண்ணுக்கு திருமணம் செய்துகொள்ள முழு விருப்பம் உள்ளதாகவும் பிரதாப் சார்பில் கூறப்படுகிறது.
No comments
Thank you for your comments