Breaking News

ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி - சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை:

விரைவில் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து முற்றுப்புள்ளி வைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (06.01.2022) அறிவித்துள்ளார்.

தமிழகத்திலே ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவிலே முற்றுப்புள்ளி வைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவித்தார். விவரம் வருமாறு:

முதலமைச்சர்:  மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, எதிர்க்கட்சியைச் சார்ந்த மாண்புமிகு உறுப்பினர் திரு. வைத்தியலிங்கம் அவர்கள், ஆன்லைன் சூதாட்டத்தைப் பற்றி இங்கே எடுத்துச் சொன்னார்கள்.  இதுகுறித்து தொடர்ந்து பத்திரிகைகளிலும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. 

ஆன்லைன் சூதாட்டத்தைப் பொறுத்தவரையில், சென்ற ஆட்சியிலே தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.  3-8-2001 அன்று உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பிலே, 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்டம் மற்றும் காவல் சட்டங்கள் திருத்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறிவிட்டது.  ஆனாலும், அந்தத் தீர்ப்பின்மீது சட்ட ஆலோசனை கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தினுடைய தீர்ப்பினைத் தடை செய்யக் கோரி, இந்த அரசு உச்ச நீதிமன்றத்திலும் மேல் முறையீடு செய்திருக்கிறது.

வழக்கைப் பொறுத்தவரைக்கும், விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விசாரணை தொடர்ந்து நடைபெறவிருக்கிறது.  விரைவில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழகத்திலே நிச்சயமாக முற்றுப்புள்ளி வைக்கப்படும் (மேசையைத் தட்டும் ஒலி) என்ற உறுதியை பேரவைத் தலைவர் அவர்கள் மூலமாக  உறுப்பினர் வைத்தியலிங்கம் அவர்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவித்தார்




No comments

Thank you for your comments