சீட் பங்கீடு பேச்சுவார்த்தையில் கூட்டணி கட்சிகள் அதிருப்தி!
சென்னை:
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் திமுக, கூட்டணி கட்சிகளுடனான சீட் பங்கீடு பேச்சுவார்த்தையில் திமுக பொறுப்பாளர்கள் கறாராக பேசுவதால் கூட்டணி கட்சிகள் அதிருப்தி அடைந்துள்ளன.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் திமுக, கூட்டணி கட்சிகளுடனான சீட் பங்கீடு பேச்சுவார்த்தையில் திமுக பொறுப்பாளர்கள் கறாராக பேசுவதால் கூட்டணி கட்சிகள் அதிருப்தி அடைந்துள்ளன.
திமுகவின் பிரதான கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மேயர் சீட்கூட இல்லை என்பதால் காங்கிரஸ் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
பிபரவரி 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகிறது. அதனால், தமிழகத்தில் ஆளும் திமுக தங்கள் கூட்டணி கட்சிகளுடன் வார்டுகளை ஒதுக்குவதில் சீட் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதே போல, அதிமுகவும் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் சீட் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
திமுக தலைமயில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அமைந்த கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை.
அதே நேரத்தில், அதிமுக கூட்டணியில், பாமக கடந்த 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சித் தேர்தலிலேயே அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிட்டது. மேலும், இனி வருகிற தேர்தல்களில் பாமக தனித்து போட்டியிட்டு ஆட்சியைப் பிடிக்கும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
இந்நிலையில், அதிமுக கூட்டணியில், கூட்டணி அமைத்து பா.ஜனதா நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திக்க இடப்பங்கீடு தொடர்பாக பா.ஜனதா தலைவர்கள் அ.தி.மு.க.வினருடன் பேச்சு நடத்தினார்கள். அப்போது 20 சதவீத இடங்கள் தர வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால் அ.தி.மு.க. தரப்பில் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே வார்டுகள் ஒதுக்கீடு செய்ய முடியும் என்று கூறிவிட்டனர். இதனால் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் இன்று மதியம் 1.30 மணிக்கு பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டார்.
மேலும் அவர் கூறியதாவது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அ.தி.மு.க. கூட்டணியுடன் இணைந்து சந்திப்பது தொடர்பாக அ.தி.மு.க. தலைவர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்போது குறிப்பிட்ட எண்ணிக்கையில் இடங்களை கேட்டோம். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா தனித்து போட்டியிடுகிறது. நம்முடைய கூட்டணி என்பது தேசிய ஜனநாயக கூட்டணியாக தொடர்ந்து இருக்கும். 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வரை கூட்டணியில் தொடர்ந்து இருந்து கொண்டு இருக்கும் என்றார்.
திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், மாவட்ட செயலாளர்கள் மற்று உயர்மட்ட பொறுப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் சீட் பங்கீடு பேச்சுவார்த்தையில், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சுமூகமாக பேசி தீர்வு காண வேண்டும் என்று கூறினார்.
மேலும் கழகத்தினருக்கு எழுதிய கடிதத்தில், கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வது, தோழமைக் கட்சிகளுக்கான இடங்களைப் பகிர்ந்தளிப்பது, வாக்கு சேகரிப்பில் அனைவருடனும் ஒருங்கிணைந்து ஒரே நோக்கோடு செயல்படுவது என, ஒவ்வொரு கட்டத்திலும் கழக நிர்வாகிகள் கடமை உணர்வுடனும், மிகுந்த பொறுப்புடனும் செயலாற்றிட வேண்டும்.
தோழமைக் கட்சித் தலைவர்கள் பலர் அண்ணா அறிவாலயத்திற்கு வந்து, கழகத்தின் மாநில நிர்வாகிகள் மற்றும் கழகத்தின் தேர்தல் பொறுப்பாளர்களுடன் கலந்தாலோசனை நடத்தியுள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான ஆட்சியின் ஆக்கபூர்வமான செயல்பாடுகளுக்கு அருகிருந்து துணை நிற்கும் வகையில் அவர்கள் நன்னம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.
மாவட்ட - ஒன்றிய - நகர அளவில் உள்ள கழக நிர்வாகிகள், அவரவர்தம் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் தோழமைக் கட்சியினருக்கு உரிய அளவிலான இடங்களை மனமுவந்து ஒதுக்கீடு செய்வதில் சுணக்கமின்றிச் செயல்பட வேண்டும். கூட்டணிக் கட்சியின் உள்ளூர் நிர்வாகிகளுக்கு நெருடல் ஏற்படாத வகையில் கழகத்தினரின் அணுகுமுறை அவசியம் அமையவேண்டும் என்பதும், வெறும் தேர்தல் கூட்டணியாக இல்லாமல், கொள்கைக் கூட்டணியாக உள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தூய தோழமை தொடர்ந்திட வேண்டும் என்பதும் உங்களில் ஒருவனான என் வேண்டுகோளாகும்.
கூட்டணிக் கட்சியினருக்கு ஒதுக்கீடு செய்தபிறகு, தி.மு.கழகம் போட்டியிட உள்ள இடங்களுக்கான கழக வேட்பாளர்கள் தேர்வு என்பது, இராணுவ வீரர்களைத் தேர்வு செய்வது போன்ற நெறிமுறைகளுடன் கண்டிப்பானதாகவும் கட்டுக்கோப்பானதாகவும் இருக்க வேண்டும் என்பதைக் கழகத் தலைவர் என்ற முறையில் அறிவுறுத்தக் கடமைப்பட்டுள்ளேன் என்று கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, திமுக மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், உயர் மட்ட பொறுப்பாளர்கள், கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ, விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதற்கு முன்னர் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனது கூட்டணி கட்சியினருக்கும் மிகவும் சொர்ப்பமான இடங்களையே ஒதுக்கியது. இதனால், அப்போதே கூட்டணி கட்சிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தின. ஆனால், திமுக தரப்பில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேண்டிய இடங்கள் ஒதுக்கப்படும் என்று கூறி சமாதானம்செய்யப்பட்டது.
ஆனால், நகர்புற உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக சீட் பங்கீடு பேச்சுவார்த்தையில் தனது கூட்டணி கட்சிகளிடம் கறாராக நடந்துகொள்வதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகளில் 6 மாநகராட்சிகளுக்கான மேயர் பதவியை ஏதிர்பார்த்தது. ஆனால், ஒரு மாநகராட்சி மேயர் பதவிகூட காங்கிரஸ் கட்சிக்கு இல்லை என்று திமுக கறாராக நடந்துகொள்கிறது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திருச்சி மாநகராட்சியில் ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி மேயர் பதவியை வகித்துள்ளது. அதனால், திருச்சி, நாகர்கோயில் உள்ளிட்ட மாநகராட்சிகளின் மேயர் பதவி காங்கிரஸுக்கு கிடைக்கும் என்று காங்கிரஸ் சார்பில் உறுதியான நம்பிக்கையுடன் இருந்தனர்.
ஆனால், திருச்சியில் 4 வார்டுகளை மட்டுமே காங்கிரஸுக்கு தர முடியும் என்று திமுக அமைச்சர் கே.என்.நேரு கறாராக கூறிவிட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த 4 கவுன்சிலர் வேட்பாளர்கள் யார் என்பதை கே.என்.நேருவே குறிப்பிட்டு கூறிவிட்டார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் வருத்தத்துடன் கூறுகின்றனர்.
திமுக அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் வார்டுகளில் 4 சதவீதம் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க முடிய்வு செய்துள்ளதால் காங்கிரஸ் கட்சியினர் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளதாகக் கூறுகின்றனர்.
ஆனால், திமுக வட்டாரங்கள், காங்கிரஸ் கட்சிக்கு 2 அல்லது 3 மேயர் பதவியை ஒதுக்கலாம் ஆனால் அதையும் உறுதியாக சொல்ல முடியாது. ஏனென்றால், காங்கிரஸ் பலமாக இல்லை. அதிகமான இடங்களைக் கொடுத்தால் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுமா என்பது சந்தேகம்தன் என்று கூறுகின்றனர்.
திமுக மற்ற கூட்டணிகளான சிபிஐ, சிபிஎம், விசிக, மதிமுக ஆகிய கட்சிகளுக்கு காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய இடங்களைவிட குறைவாக ஒதுக்கி முடிவு செய்திருப்பதால் அவர்களும் அதிருப்தியில் உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments
Thank you for your comments