வரலாற்றில் இடம் பிடித்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
புதுச்சேரி, ஜன.27-
இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் குடியரசு தினத்தன்று இரு மாநிலங்களிலும் தேசிய கொடியேற்றிய முதல் ஆளுநர் என்ற பெருமையை தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஆளுநரான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பெற்றுள்ளார்.
இந்தியா முழுவதும் நாட்டின் குடியரசு தின விழா தனது வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. டெல்லி ராஜபாதையில் நாட்டின் பாரம்பரியத்தையும் பெருமையையும் வீரத்தையும் பறைசாற்றும் வகையில் நடைபெற்ற பேரணி உலகையே திரும்பிப் பார்க்க செய்தது.
டெல்லி செங்கோட் டையில் குடியரசு தினவிழா வையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக்கொடி ஏற்றினார். இதே போல நாடு முழுவதும் குடியரசு தின விழாவையொட்டி அந்தந்த மாநில ஆளுநர்கள் தேசிய கொடியேற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஆளுநராக பொறுப்பு வகித்து வரும் தமிழிசை சௌந்தரராஜன் ஒரே நாளில் குடியரசு தினத்தில் இரு மாநிலங்களில் கொடி ஏற்றிய முதல் ஆளுநர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
பொதுவாக சுதந்திர தின விழாவின்போது அந்தந்த மாநிலங்களின் முதல்வர்களும் குடியரசு தின விழாவின் போது அந்தந்த மாநிலங்களின் ஆளுநர்களும் தேசியக் கொடியை ஏற்றுவது வழக்கம். மாநிலங்களின் கூடுதல் பொறுப்பு வகித்து வரும் ஆளுநர்கள் ஏதேனும் ஒரு மாநிலத்தில் கொடியேற்றினால் அங்கு அந்த மாநில முதல்வர் கொடியேற்றலாம்.
கடந்த 2014ஆம் ஆண்டு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பை கூடுதலாக வகித்த அந்தமான் ஆளுநர் ஏ.கே.சிங் அந்தமானில் தேசிய கொடியேற்றிய நிலையில் அப்போது புதுச்சேரி முதல்வராக இருந்த ரங்கசாமி தேசியக் கொடியை ஏற்றினார்.
இதேபோல கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக முதலமைச்சராக இருந்த ஓ பன்னீர்செல்வமும் குடியரசு தினத்தன்று தமிழகத்தில் தேசியக் கொடியை ஏற்றினார்.
இந்த நிலையில் தெலுங்கானா புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களிலும் ஆளுநர் தமிழிசையே தேசியக் கொடி ஏற்றுவார் என தகவல்கள் வெளியானது.
26ஆம் தேதி புதுச்சேரியில் காலை 7 மணிக்கே குடியரசு தின விழா நிகழ்ச்சி தொடங்கும் நிலையில் 8 மணிக்குள் புதுச்சேரி நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு ஆளுநர் தமிழிசை தெலுங்கானா புறப்பட்டுச் சென்று அங்கும் தேசியக் கொடி ஏற்றுவார் என தகவல்கள் வெளியானது.
இந்நிகழ்ச்சியில் சிறு மாற்றமாக முதலில் தெலுங்கானாவில் தேசிய கொடியேற்றிய ஆளுநர் தமிழிசை பின்னர் புதுச்சேரியில் தேசியை கொடியை ஏற்றி வரலாற்றில் இடம் பெற்றுள்ளார்.
குடியரசு தின விழா அன்று காலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் ஹைதராபாத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் தனி விமானம் மூலம் புதுச்சேரி வந்த ஆளுநர் தமிழிசை புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
ஒரு ஆளுநர் 2 மாநிலங்களில் தேசிய கொடியை ஏற்றி வைப்பது இதுவே முதல் முறை என்பது அந்தப் பெருமையைப் பெற்ற ஒரே ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments
Thank you for your comments