இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி உடபட 8 பேருக்கு ‘அண்ணா பதக்கம்’
சென்னை:
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11ம் தேதி கன மழை பெய்த பேரிடர் காலத்தில் கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்ட வளாகத்தில் மயங்கி கிடந்த உதயகுமார் என்ற வாலிபரை தனது தோளில் சுமந்து சென்று வாகனத்தில் ஏற்றி உடனடியாக ஆஸ்பத்திரிக்கு இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி அனுப்பி வைத்தார்.
தி.மு.க. பிரமுகரான தனியரசு திருவொற்றியூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஆபத்தான நிலையில் இருந்ததை அறிந்து அங்கு வசித்த மக்கள் அனைவரையும் வெளியேற்றினார்.
சென்னை கடற்கரை சாலையில் இன்று குடியரசு தினவிழாவில் சென்னை தலைமை செயலக காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மற்றும் தி.மு.க. பிரமுகர் தனியரசு உள்ளிட்ட 8 பேருக்கு வீர-தீர செயலுக்கான “அண்ணா பதக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
பதக்கம் பெற்றவர்களின் வீர-தீர செயல்பாடுகள் பற்றிய விவரம் வருமாறு:-
இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி
இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி சென்னை மாநகர காவல் துறையில் நீண்ட காலமாக பணியாற்றி வருகிறார். தடகள வீராங்கனையான அவர் பொதுமக்கள் நலனுக்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருபவர். சாலையோரத்தில் வசிக்கும் ஏழ்மையான பெண்களுக்கு இவர் பல்வேறு உதவிகளை செய்து பாராட்டுக்களை பெற்று இருந்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11ம் தேதி கன மழை பெய்த பேரிடர் காலத்தில் கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்ட வளாகத்தில் மயங்கி கிடந்த உதயகுமார் என்ற வாலிபரை தனது தோளில் சுமந்து சென்று வாகனத்தில் ஏற்றி உடனடியாக ஆஸ்பத்திரிக்கு இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி அனுப்பி வைத்தார்.
மேலும் ஓட்டேரி பகுதியில் புயல் பாதுகாப்பு ரோந்து பணியின்போது இடிந்த வீட்டுக்குள் தவித்த கணேஷ் என்ற இளைஞரை காப்பாற்றியதுடன், காணாமல் போன பழனி என்ற சிறுவனை 3 மணி நேரத்தில் கண்டுபிடித்துள்ளார். இதற்காகவே அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
திமுக பிரமுகர் தனியரசு
தி.மு.க. பிரமுகரான தனியரசு திருவொற்றியூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஆபத்தான நிலையில் இருந்ததை அறிந்து அங்கு வசித்த மக்கள் அனைவரையும் வெளியேற்றினார். இவர் உடனடியாக செயல்பட்டு மக்களை வீடுகளை விட்டு வெளியே கொண்டு வந்த சிறிது நேரத்தில் அடுக்கு மாடி குடியிருப்பு இடிந்து விழுந்தது.
சரியான நேரத்தில் தனியரசு பொதுமக்களை வெளியேற்றினார். அனைவரும் உயிர் பிழைத்தனர். இதன் காரணமாக தனியரசுக்கு வீர-தீர செயலுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
தீயணைப்பு வீரர் ராஜீவ்காந்தி
விழுப்புரம் மாவட்டம் திருவத்தி அருகே உள்ள ஆதிவூரைச் சேர்ந்த ராஜீவ்காந்தி என்ற தீயணைப்பு வீரருக்கு வீர-தீர செயலுக்காக அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.
இவர் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள எடையார் கிராமத்தில் கடந்த நவம்பர் மாதம் வடகிழக்கு பருவ மழையின்போது தென்பெண்ணை மற்றும் மல்லாடாறு கரை பகுதியில் வெள்ளத்தில் சிக்கி 24 மணி நேரமாக போராடிய 2 பேரை காப்பாற்றி கரை சேர்த்துள்ளார். அதற்காக இந்த விருதை பெற்று இருக்கிறார்.
வன கால்நடை மருத்துவர் அசோகன்
கோவை அன்னூர் அருகே உள்ள சர்க்கார் சாமக்குளம் பகுதியைச் சேர்ந்த வன கால்நடை மருத்துவர் அசோகனும் வீர-தீர செயலுக்காக அண்ணா பதக்கம் பெற்றுள்ளார்.
கோவை வனப்பகுதியில் பொதுமக்கள் 7 பேரை கொன்று உயிர்களுக்கும், உடமைகளுக்கும் கடும் சேதம் விளைவித்த சின்னதம்பி யானையை பிடிக்கும் பணியில் தனது உயிரை பொருட்படுத்தாமல் அதன் மிக அருகில் சென்று மயக்க ஊசியை செலுத்தி உள்ளார். இதன் காரணமாக அந்த யானை பிடிபட்டுள்ளது.
மேலும் சங்கர் என்ற யானையை பிடிக்கும் பணியிலும் இதே போன்று தீரத்துடன் செயல்பட்டு உள்ளார்.
பொதுமக்கள் 4 பேர்
இவர்களை தவிர பொது மக்கள் 4 பேருக்கும் வீர-தீர செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் மதுரை- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் கண்மாய்க்குள் விழுந்த காரில் இருந்தவர்களை துரிதமாக செயல்பட்டு மீட்டதற்காக சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை வடகரை பகுதியைச் சேர்ந்த முத்து கிருஷ்ணனுக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
இதே போன்று திருச்சி மாவட்டம் புதுக்கோட்டை கிராமத்தில் கிணற்றில் தவறி விழுந்த தாய்-மகளை காப்பாற்றும் பணியில் ஈடுபட்ட சிறுவன் லோகித்துக்கும் அண்ணா பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சொக்கநாதன் என்பவரும் வீர-தீர செயலுக்காக அண்ணா பதக்கம் பெற்றுள்ளார். இவர் அப்பகுதியில் குளிக்க சென்ற 6 சிறுமிகள் வாய்க்காலில் இழுத்துச் செல்லப்பட்ட போது அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டவர் ஆவார்.
அதே போன்று திருப்பூர் மாவட்டம் கள்ளிமேட்டுபாளையம் பி.ஏ.பி. வாய்க்காலில் குளிக்க சென்ற மாணவிகள் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்ட போது அவர்களை காப்பாற்றியதற்காக அதே பகுதியைச் சேர்ந்த பேச்சியம்மாள் என்ற பெண்ணுக்கும் வீர-தீர செயலுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments