ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்
சென்னை, டிச.5-
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக இன்று டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நாளை (6/12/2021) ஆளுநர் ஆர். என். ரவி, பங்கேற்க இருந்தார். இந்நிலையில் அவர், திடீர் பயணமாக இன்று டெல்லி சென்றுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் அழைப்பை அடுத்து, ஆளுநர் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
நாகலாந்தில், பிரிவினைவாதிகள் என்று நினைத்து அசாம் ரைபிள்ஸ் ராணுவப் பிரிவை சேர்ந்த பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சுரங்கத் தொழிலாளர்கள் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன.
உள்துறை அமைச்சகம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
நாகாலாந்தில் பதற்றத்தைத் தணிக்க இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, ஏற்கனவே நாகலாந்து ஆளுநராக இருந்தவர் என்பதால், அங்குள்ள பிரச்னைகள் குறித்து ஆலோசிப்பதற்காக அவர் திடீரென டெல்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
No comments
Thank you for your comments