Breaking News

நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி ஆட்சி பிடித்தது திமுக

சென்னை, டிச.29-

தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதியின்படி பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரவேண்டும் என்று  சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி தனது அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார்.

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று (29/12/2021) தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளதாவது, 

நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தது திமுக.

மக்களுக்கு பயன் அளிக்கக்கூடிய தேர்தல் வாக்குறுதிகளை இந்த விடியா அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பலமுறை அறிக்கைகள் வாயிலாகவும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையிலும், மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் வலியுறுத்தினோம்.

ஆனால் தேர்தலின் போது வாய்க்கு வந்தவாறு அறிவித்த வாக்குறுதிகளை தமிழக மக்களுக்கு பொருளாதார ரீதியாக பயனளிக்கக்கூடிய குறைந்தபட்ச வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான முதல் அடியைக் கூட இந்த அரசு இதுவரை எடுத்து வைக்கவில்லை.

விடியலை தருவோம் என்று சொல்லி முதலமைச்சரான திரு ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அம்மாவின் அரசு வழங்கிய பொங்கல் பரிசாக 2500 ரூபாய்க்கூட வழங்காதது, ஏழையை ஏழை எளிய நடுத்தர மக்களை கடும் கோபத்துக்கு உள்ளாக்கி உள்ளது

இந்நிலையில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேட்டி அளித்த திமுகவின் மக்களவை தலைவரும் கட்சியின் பொருளாளர் திரு டி.ஆர்.பாலு அவர்கள் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார். அவ்வாறு பெட்ரோல் டீசல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவதன் மூலம் குறைந்தது 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை பெட்ரோலிய பொருட்களின் விலை குறையும் என்றும் பொது மக்களுக்கு குறைந்த விலையில் எரிபொருட்கள் கிடைக்கும் என்றும் கூறினார். இதனால் தமிழகத்தில் சரக்கு போக்குவரத்து கட்டணம் குறைந்து அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விலையும் குறையும்.

அப்போது திரு டிஆர் பாலுவை பேட்டி கண்ட தனியார் தொலைக்காட்சி நெறியாளர், தமிழக நிதியமைச்சர் திரு.தியாகராஜன் அவர்கள் பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர எதிர்ப்பு தெரிவித்திருக்கிறாரே என்று கேட்டதற்கு தனிமனிதன் கருத்து எல்லாம் பொருட்படுத்தக் கூடாது என்று திரு டி.ஆர்.பாலு பதில் அளித்துள்ளார்

திரு டி.ஆர்.பாலுவை பேட்டி கண்ட நெறியாளர், தியாகராஜன் மாநில நிதியமைச்சர் ஆயிற்றே என்று கேட்டதற்கு நான் திமுக கட்சி பொருளாளர் திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவராக இருந்தேன். அப்போது திமுக கட்சியின் தலைவர் (மு.க.ஸ்டாலின்) ஆணைப்படி தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் டீசல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி நான்தான் எழுதினேன் என்று தெளிவாக பேட்டி அளிக்கிறார்.  ஸ்டாலின் அவர்களும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும் என்று பலமுறை பேசியுள்ளார்

மத்திய அரசு பெட்ரோலிய பொருட்கள் ஜிஎஸ்டி பரப்பில் கொண்டுவர முடிவு செய்ததாகவும் இதற்காக மாநில அரசுகள் நிலைப் பாட்டினை கேட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன. இதற்கு பெரும்பாலான மாநிலங்கள் யூனியன் பிரதேசம் சம்மதித்து தெரிவித்துள்ள நிலையில் தமிழக அரசு மேற்கு வங்க அரசு மட்டுமே எதிர்ப்பு தெரிவிப்பதாக மத்திய நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாகவும் ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் செய்திகள் வருகின்றன

திமுகவின் பொருளாளரும் மூத்த தலைவருமான டிஆர் பாலுவை பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வரவேண்டுமென்று பரிந்துரைத்த நிலையில், தேர்தல் சமயத்தில் திமுக அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற விடாமல் தடுப்பது எது என்பதை இந்த விடியா அரசின் முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள் தமிழக மக்களுக்கு பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.








No comments

Thank you for your comments