Breaking News

காவலர்களிடம் 9 மணி நேரம் குறைகள் கேட்டறிந்த சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால்

 சென்னை

உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் காவலர்கள் குறை தீர்க்கும் முகாமில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடர்ந்து 9½ மணி நேரம் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் குறைகளை கேட்டறிந்து 431 மனுக்களைப் பெற்றார்.



சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றும் அனைத்து காவல் ஆளிநர்களின் துறை ரீதியான குறைகளை களைய “உங்கள் துறையில் முதலமைச்சர்” என்ற திட்டத்தின் கீழ் காவலர்கள் குறை தீர்க்கும் முகாம், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால் தலைமையில், இன்று (24.12.2021) சென்னை, எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டரங்களில் நடைபெற்றது.



இம்முகாமில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களிடமிருந்து 431 மனுக்களை பெற்றார். நண் பகல் 12.15 மணி முதல் இரவு 9.45 மணிவரை தொடர்ந்து 9 ½ மணி நேரம் நேரடியாக காவலர்களின் குறைகளைக் கேட்டறிந்து கமிஷனர் சங்கர் ஜிவால் மனுக்களைப் பெற்றார்.



இந்த முகாமில் பணி இடமாறுதல், தண்டனை களைதல், ஊதிய முரண்பாடு களைதல், காவலர் குடியிருப்பு வேண்டுதல், காவலர் சேமநல நிதியிலிருந்து மருத்துவ உதவி தொகை பெற்று தர கோருதல் உள்ளிட்ட 431 மனுக்களை பெற்று அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க ஆணையாளர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 



இந்த முகாமில், தலைமையிட  கூடுதல் ஆணையாளர் லோகநாதன்,  இணைஆணையாளர் சாமுண்டீஸ்வரி, துணை ஆணையாளர்கள் பாலாஜி சரவணன்,  சௌந்தராஜன் (ஆயுதப்படை), கோபால் (மோட்டார் வாகனப்பிரிவு)  மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும், உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் காவலர் குறை தீர் முகாம் 27.12.2021 அன்று தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments