குடும்பத்துடன் போதைப்பொருள் கடத்தல் 3பேர் கைது - 35 கிலோ பறிமுதல்
வேலூர், டிச.31-
ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு குடும்பத்துடன் பேருந்தில் போதைப்பொருள் கடத்தி வந்த கணவன், மனைவி உள்பட 3 பேரை தமிழக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 35 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தமிழகம் முழுவதும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் தமிழ்நாடு போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு போலீசாரால் சட்டவிரோத போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலுக்கு எதிரான சிறப்பு இயக்கம் மாநிலம் முழுவதும் கடந்த 6.12.2021 முதல் மேற்கொண்டு வருகிறது. தமிழக கிரைம் கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு எஸ்பி ரோஹித்நாதன் கண்காணிப்பில் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவினர் இரண்டு குழுக்களாக பிரித்து தமிழகம் முழுவதும் கண்காணித்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக சேலம் போதைப் பொருள் நுண்ணறிவுப்பிரிவு டிஎஸ்பி முரளி மற்றும் வேலூர் டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலும் விசாகப்பட்டினம் முதல் வேலூர் வரை சுமார் 800 கிலோ மீட்டர் தூரம் தொடர் கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு கஞ்சா கடத்துவதாக தனிப்படைக்கு தகவல் வந்தது. அது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து ரயில் மூலம் திருப்பதிக்கு கஞ்சா கடத்திவரப்படுவது தெரியவந்தது.
அதன் தொடர்ச்சியாக போலீசார் அங்கிருந்து திருப்பதியிலிருந்து சித்தூர் வழியாக வேலூருக்கும் பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த திருப்பூரைச் சேர்ந்த வீரண்ணன் என்பவரை தமிழ்நாடு எல்லையில் வைத்து போலீசார் வாகன சோதனையில் மடக்கிப் பிடித்தனர். அவரிடம் இருந்து 26 கிலோ கஞ்சா போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.
அவரிடம் விசாரணை நடத்தியதில் வீரண்ணனுக்கு உதவியாக அவரது மனைவி புனிதா என்பவரும் உடன் வந்திருந்தது தெரியவந்தது. போலீசாருக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக தங்களது இரண்டு குழந்தைகளையும் அவர்கள் தங்களுடன் அழைத்து வந்திருந்துள்ளனர். அதே பஸ்சில் மற்றொரு குற்றவாளி கதிர் என்பவரிடம் சோதனை செய்ததில் 8 கிலோ கஞ்சா சிக்கியது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர் கண்காணிப்பின் மூலம் 35 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த தனிப்படையினரை கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் வெகுவாக பாராட்டினார்.
சட்ட விரோதமாக போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் பற்றிய தகவல்களை பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 மூலமாகவும், 94984 10581 என்ற எண்ணில் வாட்ஸ்அப் குறுந்தகவல் மற்றும் புகைப்படம் மூலமாகவும் மற்றும்
spnibcid@gmail.com என்ற இ மெயில் மூலமாகவும் தெரிவிக்கலாம் என போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
No comments
Thank you for your comments