Breaking News

திருச்சியில் காவல் உதவி ஆய்வாளர் வெட்டிப் படுகொலை : 4 தனிப்படைகள் அமைப்பு... தீவிர விசாரணை

திருச்சி, நவ.21:

திருச்சி நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் பள்ளபட்டி என்ற ஊரில் வெட்டிப்படு கொலை செய்யப்பட்டார். இந்தக் குரூரக் கொலை குறித்து போலீஸ் விசாரணை துவக்கப்பட்டுள்ளது. திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்தாருக்கு ரூபாய் 1  கோடி நிதியுதவி மற்றும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (21-11-2021) அறிவித்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட திருச்சி நவல்பட்டு காவல் நிலையத்தில்
 சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சோழ மாநகர் பகுதியை சேர்ந்தவர் பூமிநாதன் (வயது 51).  இவருக்கு கவிதா என்ற மனைவியும், குகன் என்ற மகனும் உள்ளனர்.

1995-ம் ஆண்டு காவல் பணியில் சேர்ந்த இவர் பல்வேறு போலீஸ் நிலையங்களில் வேலை பார்த்துள்ளார்.  நேர்மையாக பணியாற்றி வந்த இவர் போலீஸ் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெற்றார். 

இதையடுத்து கடந்த 1.7.2020-ல் திருச்சி மாவட்டம் நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பொறுப்பேற்று பணியாற்றி வந்தார்.  அப்போது முதல் தொடர்ந்து 1½  ஆண்டுகளாக இரவு ரோந்து பணியை மேற்கொண்டு வந்த பூமிநாதன் இரவு நேர குற்றசெயல்களை தடுத்தார். மேலும் இரவில் சுற்றித்திரியும் சமூக விரோத கும்பலுக்கு இவர் சிம்ம சொப்பனமாகவும் திகழ்ந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் ரோந்து பணிக்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். அவருடன் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் ஏட்டு சித்திரைவேல் என்பவரும் சென்றிருந்தார். அவர்கள் இருவரும் திருவெறும்பூரை அடுத்த சின்னசூரியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நள்ளிரவு 2 மணி அளவில்,  இருள் சூழ்ந்த அடர்ந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இருந்ததை பார்த்து உடனே தங்களது வாகனத்தை நிறுத்தினர். அந்த சமயம் அங்கு ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டதால் உஷாரான பூமிநாதன் மற்றும் ஏட்டு அந்த பகுதியை நோக்கி சென்றனர்.

இதற்கிடையே 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் ஆடுகளை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து சென்றனர். அவர்கள் ஆடு திருடும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பதை உறுதி செய்த போலீஸார் தொடர்ந்து துரத்தினர். ஆனால் அந்த கும்பல் நிற்காமல் வேகம் காட்டினர்.

இதற்கிடையே குறிப்பிட்ட தொலைவுக்கு மேல் ஏட்டு சித்திரைவேலால் கும்பலை துரத்தி செல்லமுடியவில்லை. ஆனால் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் மட்டும் ஆடு திருடும் கும்பலை துரத்தி சென்றார். ஒரு கட்டத்தில் அந்த கும்பல் திருச்சி மாவட்டத்தை கடந்து புதுக்கோட்டை மாவட்ட எல்லைக்கு சென்றனர்.

கீரனூரை அடுத்த களமாவூர் ரயில்வே கேட்டை தாண்டி பள்ளத்துப்பட்டி அருகே சென்றபோது ஒரு வாகனத்தை பூமிநாதன் தடுத்து நிறுத்தினார். அவர்களிடம் விசாரித்தபோது, முன்னால் சென்ற வாகனத்தில் இருந்தவர்கள் திரும்பி வந்தனர். அவர்கள் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதனுடன் தகராறில் ஈடுபட்டனர்.

அப்போது பூமிநாதன் நவலூர் போலீஸ் நிலையத்தில் தன்னுடன் வேலை பார்த்து வரும் மற்றொரு காவல் உதவி ஆய்வாளரான கீரனூரை சேர்ந்த சேகர் என்பவரை உதவிக்காக செல்போனில் அழைத்தார். இதனால் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்தில் ஆடு திருடும் கும்பலை சேர்ந்தவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதனை சரமாரியாக வெட்டினர்.


தலை மற்றும் கையில் பலத்த காயம் அடைந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன்,  ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.  பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. 

இந்தநிலையில் உதவிக்கு அழைத்த மற்றொரு காவல் உதவி ஆய்வாளர் சேகர் அங்கு வந்து பார்த்தபோது, பூமிநாதன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில்  புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

இந்த கொடூர கொலை சம்பவம் தொடர்பாக கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொலையுண்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இதற்கிடையே சம்பவம் நடந்த பகுதிக்கு பொதுமக்கள் திரண்டு வந்தனர்.  ஆடு திருடும் கும்பலால் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை செய்யப்பட்டது திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விசாரணை

கொலையாளிகள் நிச்சயம் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அதிரடியாக போலீசார் விசாரணையை தொடங்கினர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக இருப்பதால் ஆடுகளை திருடி கறிக்கடைகளுக்கு சப்ளை செய்வதற்காக ஒரு கும்பல் செயல்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே இதுபோன்று ஆடு திருடு போன புகார்களின் அடிப்படையில் கைதானவர்கள், அதில் தொடர்புடைய நபர்களின் பட்டியலை தயாரித்த போலீசார் அவர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.

மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்து வரப்பட்ட மோப்ப நாய் சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது. அதே திசையில் கொலையாளிகள் தப்பியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதே போல் கைரேகை நிபுணர்களும் கொலையாளிகள் விட்டுச்சென்ற தடயங்களை சேகரித்தனர்.

இதற்கிடையே திருச்சியில் இருந்து கொலை சம்பவம் நடந்த புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதி வரை அமைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் தீவிர ஆய்வு செய்து அதன் மூலம் குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். 

மேலும், ஆயுதங்கள் எதையும் விட்டு சென்றுள்ளனரா என சுரங்கப் பாதையில் தேங்கி இருந்த தண்ணீரை வெளியேற்றியும், வாய்க்கால் மற்றும் வயல் பகுதியில் போலீஸார் தேடி வருகின்றனர்.

14 பேர் கொண்ட 4 தனிப்படைகள்

இந்த நிலையில் ஐஜி பொறுப்பு கார்த்திகேயன், டிஐஜி சரவணன் சுந்தர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இரண்டு டிஎஸ்பிக்கள், இரண்டு காவல் ஆய்வாளர், இரண்டு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 14 பேர் கொண்ட 4 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

முதல்வர் அறிவிப்பு

திருச்சியில் திருடர்களை விரட்டி பிடிக்க முயன்றபோது வெட்டிக் கொல்லப்பட்ட உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்

30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து சொந்த ஊரான சோழமாநகருக்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. 

அதன்பின்னர் சோழமாநகர் இடுகாட்டில் பூமிநாதனின் உடல்  மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.


No comments

Thank you for your comments