Breaking News

வேலூர் மாநகராட்சியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் தோல்வியா? வேலூர் பொதுமக்கள் கேள்வி

வேலூர், நவ.8-

வேலூர் மாநகராட்சியில் எந்த பணிகளும் நடைபெறுவதில்லை, மாறாக மந்த கதியில் செயல்பாடு அமைந்துள்ளது. இதோடு மட்டுமன்றி உதவி ஆணையர்கள் எங்குள்ளனர் என்பது பொதுமக்களுக்கு புரியாத புதிராக உள்ளது. கோமா நிலையில் செயல்படும் மாநகராட்சி உத்வேகம் அடைவது எப்போது என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது என்கின்றனர் பொதுமக்கள்... அதுமட்டுமின்றி ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் தோல்வியா..?  என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். . 

நாடு முழுவதும் 100 நகரங்களைத் தேர்வு செய்து அவற்றை சீர்மிகு நகரங்களாக உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 11 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன. தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், நெல்லை, திருப்பூர், ஈரோடு, கோவை, தஞ்சை, தூத்துக்குடி மற்றும் வேலூர்  மாநகராட்சிகளில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப்பணிகள் நடந்து வருகின்றன.

மத்திய அரசு ஒவ்வொரு நகரத்துக்கும் ரூ.500 கோடி நிதியுதவி வழங்குகிறது. இதற்கு இணையான ரூ.500 கோடியை தமிழக அரசும் வழங்குகிறது. தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்ட 11 நகரங்களில் ரூ.10 ஆயிரத்து 440 கோடி மதிப்பில் 357 திட்டங்கள் மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளன.

இந்த ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் வேலூர் மாநகராட்சியும் ஒன்று... ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோட்டை அகழியை தூர் வாரும் பணிகள், திடக்கழிவு திட்டங்கள், பாதாள சாக்கடை திட்டம், பசுமை பூங்காக்கள் அமைப்பது மற்றும் கால்வாய் அமைக்கும் பணிகள், சாலை மேம்படுத்துதல், நடைபாதை அமைத்தல் ஆகியவை நடைபெற்று வருகின்றன.  மேற்கண்ட பணிகள் நடந்த பகுதிகள் மற்றும் நடைபெறும் பகுதிகள் என அனைத்து மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளன.  இதற்கு பல்வேறு குற்றச்சாட்டுகளை பொதுமக்கள் வைத்துள்ளனர். வேலூர் மாநகராட்சியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் தோல்வியா..?  என்ற கேள்வியையும் முன்  வைத்துள்ளனர்.

குறிப்பாக, வேலூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை பணி 07-01-2019 அன்று தொடங்கப்பட்டது. இதற்காக  ரூ.343.69 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு அதற்கான முழு நிதியையும் ரூ.343.69 ஒதுக்கப்பட்டது. 31-12-2021 அன்று இந்த பணி முழுமையாக முடிவு பெறும் என்று வேலூர் மாநகராட்சி சார்பில் ஆர்டிஐ மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாதாள சாக்கடை பணி எந்த அளவு முடிவு பெற்றுள்ளது  என்று கேள்வி எழுப்பினால்... சரியான பதில் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்...    2020 இல் மொத்தம் 19% பணி நிறைவடைந்ததாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  2021ல் இன்று வரையும் மொத்தமாக 50 சதவீதம் பணிகள் முழுமையாக நடைபெற்றுள்ளதா என்பது மில்லியன் டாலர் கேள்வி... அரசு திட்டத்தின் மொத்த தொகை ஒதுக்கியும் இதுவரை பணிகள் குறிப்பாக சொல்லும் அளவிற்கு கூட செய்யாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி பொதுமக்கள் எழுப்புகின்றனர்.

மாநகராட்சி முழுவதும் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளுக்காக சாலையின் மத்தியில் நீளவாக்கில் பள்ளம் தோண்டினர்...  இதனால் பல சாலைகள் மக்கள் பயன்பாட்டுக்கு உதவாதவாறு துண்டிக்கப்பட்டு பொது மக்கள் எண்ணற்ற இடையூறுக்கு ஆளாக்கப்பட்டனர். 

தற்போது மழை சீசன் என்பதால் மேற்கண்ட  சாலைகள் முழுவதும் வயல் காடு போல மாறிவிட்டன.  பொது மக்கள் ஆஸ்பத்திரி, அத்தியாவசிய பணி காரணமாக வெளியே செல்ல முயன்றால் திக்கு முக்காட வேண்டியுள்ளது. அந்த அளவுக்கு சாலை சந்திப்புகளில் ஒப்பந்ததாரர்கள் கால்வாய் தோண்டி அவற்றை சரவர மூடாமல் விட்டுள்ளனர். மூடிய பகுதிகளிலும் மேடு பள்ளமாக சாலையை பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் விழுந்து எழும் நிலையில் உள்ளன.. 

மழை காலம் என்பதால் சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரால் இரவு வேளைகளில் வாகன  ஓட்டிகள் விழுந்து வீட்டிற்கு செல்லாமல் மருத்துவமனை செல்லும் அவல நிலையே நீடிக்கின்றன... 

நீண்ட இடைவெளிக்கு  பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளி குழந்தைகள் மிதிவண்டியில் பள்ளிக்கு செல்லும்போது சேற்றில் விழுந்து கை கால் அடிப்படும் நிலையில் உள்ளன. பெற்றோர்கள் மனவாட்டத்தில் தவித்துவருகின்றனர்... இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பாராத விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. தடுமாறி கீழே விழுந்துவிடுகின்றனர். பாதுகாப்பற்ற நிலையிலுள்ள சாலையால் மாணவர்கள், முதியவர்கள், வாகன ஓட்டிகளுக்கு எப்போதும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

சென்னையில் பள்ளாங்குழி சாலையால் விபத்து நேர்ந்த பின்னே தற்போது நடவடிக்கை மேற்கொள்கின்றனர்... அதே போன்று ஒங்வொரு மாவட்டத்திலும் பலி கொடுத்தால்தான் நடவடிக்கை மேற்கொள்ளுமா அரசு என்ற கேள்வியை பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் எழுப்பி உள்ளனர். ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை என்று மன வேதனை அடைகின்றனர். 

ஸ்மார்ட் சிட்டி பணிகளை செய்யப்போகிறோம் என்று ஒப்பந்ததாரகள் பகுதிவாழ் மக்களுக்கு எந்தவித முன் அறிவிப்பையும் செய்யாமல் பணிகளை மேற்கொள்வதால் மக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளார்கள்.  மேலும் மேற்கண்ட பணிகளில் ஒப்பந்ததாரர்கள் தரமற்ற முறையில் சிமெண்ட் கலவை மற்றும் வலு குறைவு கொண்ட கம்பிகளை கொண்டு பாதாள சாக்கடை, பக்கவாட்டு கால்வாய், பேருந்து நிலையம் போன்றவற்றை கட்டி வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன.  

பக்கவாட்டு கால்வாய்கள் கட்ட சரிவர திட்டம் தீட்டப்படாததால் குடியிருப்புகளின் கேட்டுகளுக்கு மேலே கால்வாய் உயர்த்தி கட்டப்பட்டுள்ளது. இதனால் வீட்டு உரிமையாளர்களுக்கு நிரந்தர தொல்லை ஏற்படுத்தி வருகிறார்கள். 

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சாலைகளில் நடைபாதை அமைக்கும் பணிகள் நடக்கிறது. இதனால் வாகனங்களை ரோட்டில் நிறுத்தும் அவலம் ஏற்பட்டு இருப்பதால் சாலைகள் குறுகலாகி வருகின்றன. அதற்குள் நடைபாதை உடைந்துகிடக்கின்றன... 

அதுமட்டு மின்றி 10% முதல் 30% வரை  ஒப்பந்ததாரர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் கமிஷன் பெற்றுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.. இதுபோன்று கமிஷன் வாங்கினால் பணிகள் எவ்வாறு நடைபெறும்.. ஒப்பந்ததாரரிட்ம் எவ்வாறு பணியை சரிபார்ப்பார்கள் என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் எழுப்பி உள்ளனர்... கை நீட்டியபின் கேள்வி கேட்கும் அதிகாரத்தை இழந்துவிடுகிறார்கள்... திட்டம் என்பது மக்களுக்கானது அல்ல திட்டம் என்பது அவர்களது கமிஷன் வாங்கும் திட்ட கணக்கு... இதுதான் இன்றளவும் நடைபெறுகிறது.. ஆட்சி மாறினாலும் காட்சிம் மாறாது... கமிஷன் கணக்கு மாறாது... பொதுமக்கள் தலையில் மட்டும் வரிசுமை கூடிகொண்டே போகும்... 

இன்னும் பாதாள சாக்கடை பணி தொடங்காமலும் சில பகுதிகள்  உள்ளன... இந்நிலையில் எவ்வாறு 31-12-2021க்குள் பணியை முடிக்க முடியும் என்பது புரியாதா புதிராக உள்ளது...  

‘’ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை தெளிவான பார்வையுடன் அணுக வேண்டும் என்று மத்திய அரசு மாநகராட்சிகளுக்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வழங்கியுள்ளது. ஆனால், அதை எதையும் எந்த மாநகராட்சியும் கடைப்பிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.  


முன்னதாக தமிழகத்தில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் தோல்வி; மத்திய அரசு வழிகாட்டுதல் எதுவும் பின்பற்றப்படவில்லை என்று நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், மற்றும் மதுரை எம்.பி.யுமான சு.வெங்கடேசன் கருத்து தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தெளிவில்லாமல், முறையில்லாமல் நடக்கும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளால் வேலூர் மாநகராட்சி பல்லாங்குழி சாலைகளாக மாறியுள்ளன என்பதே நிதர்சனம்... வேலூர் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் தோல்வியா..? என்று வேலூர் பொதுமக்களும் கேள்வி எழுப்பி... கடும் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டால் ஒருவர் மீது ஒருவர் பழிசுமத்தி தன்பொறுப்பினை தட்டிக்கழிக்கின்றனர்.... கணக்கு போட்டு கமிஷன் வாங்கிக்கொண்டு கப்சிப் என்று கமுக்கமாக இருக்கின்றனார்கள்...? என்று கேள்வி எழுந்துள்ளது... தெளிவுபடுத்துவார்களா... மாநகராட்சி அதிகாரிகள்...  


No comments

Thank you for your comments