Breaking News

சென்னையில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள், ஆளிநர்களுக்கு வெகுமதி வழங்கி பாராட்டு

சென்னை

சென்னை மாநகரில் சிறப்பாக புலனாய்வு செய்தும், இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டும், குற்றவாளிகளை கைது செய்த D-1 திருவல்லிக்கேணி, S-9 பழவந்தாங்கல், J-11 கண்ண கிநகர், R-8 வடபழனி காவல் ஆளிநர்கள் மற்றும் நேர்மையான ஆட்டோ ஓட்டுநர் பழனி ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இன்று (22.11.2021) நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.



இது குறித்து சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு

1. இரயில் டிக்கெட் எடுத்து தருவதாக கூறி வாலிபரை திருவல்லிக்கேணி அழைத்துச் சென்று ஏமாற்றி பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்ற வடமாநிலத்தைச் சேர்ந்த 6 நபர்கள் கைது. 19 செல்போன்கள் மற்றும் ரூ.5,800/- பறிமுதல்.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பூடன் பகுடி, வ/21, த/பெ.சாய்மல் பகுடி என்பவர் சென்னை , தாம்பரம் பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார். பூடன் பகுடி கடந்த 28.10.2021 அன்று காலை 10.00 மணியளவில் தனது சொந்த ஊர் செல்ல இரயில் டிக்கெட் வாங்குவதற்கு சென்ட்ரல் இரயில் நிலையம் வந்த போது, அங்கு முன்பதிவு செய்யப்படாத இரயில் டிக்கெட் விற்பனை இல்லை என்று கூறியதால், அருகிலிருந்த கும்பல் மேற்படி பூடன் பகுடியிடம் தாங்கள் டிக்கெட் வாங்கி தருகிறோம் என் ஆசை வார்த்தை கூறி ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு, சேப்பாக்கம், அக்பர் தெரு அருகே அழைத்துச் சென்று அவரிடமிருந்த பணம் ரூ.5,000/- மற்றும் 1 செல்போனை பறித்துக்கொண்டு தப்பியுள்ளனர். இது குறித்து பூடன் பகுடி D-1 திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.



D-1 திருவல்லிக்கேணி காவல் நிலைய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் கலைச்செல்வி, முதல் நிலைக் காவலர்கள் மணிமுத்து, வேல்செல்வன் மற்றும் சலீம் ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் சம்பவயிடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட 1. அமன்குமார், வ/23, த/பெ.ஆனந்த் மஹ்தோர், கவுன்காஹலி, பீகார் மாநிலம் 2. ரபிகுமார், வ/22, த/பெ.சஞ்சய் மஹ்தோர், சிதாமண்டி, பீகார் மாநிலம் 3. சாஞ்சி மஹ்தோர், வ/36, த/பெ.கேவல் மஹ்தோர், எண்.10, தோஸ்டியா, சிதாமண்டி, பீகார் மாநிலம் 4. மோஹித்குமார், வ/21, த/பெ.சம்ஜிமண்டோல், சிதாமண்டி, பீகார் மாநிலம் 5 .ராஜேஷ்குமார், வ/26, த/பெ.ஸ்ரீபிரபு மஹ்தோர், சிதாமண்டி, பீகார் மாநிலம் 6. சுஷில்குமார், வ/22, த/பெ.ஸ்ரீதுகா மண்டல், சிதாமண்டி, பீகார் மாநிலம் ஆகிய 6 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 19 செல்போன்கள் மற்றும் ரூ.5,800 பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் மேற்படி எதிரிகள், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் டிக்கெட் வாங்கி தருவதாக கூறி அழைத்துச் சென்று பணம் மற்றும் செல்போன்கள் பறித்துச் சென்றது தெரியவந்தது.

2. பழவந்தாங்கல் பகுதியில் முன்விரோதம் காரணமாக கொலை செய்யும் நோக்கத்துடன் கத்தியுடன் இருந்த 2 குற்றவாளிகள் கைது.

S-9 பழவந்தாங்கல் காவல் நிலைய முதல்நிலைக் காவலர் திரு.வினோத்குமார் (மு.நி.கா. 45068) என்பவர் 17.10.2021 அன்று இரவு ரோந்து பணியிலிருந்தபோது, அதிகாலை சுமார் 03.00 மணியளவில் (18.10.2021) மீனம்பாக்கம் சுரங்கப்பாதை அருகே நின்றிருந்த 6 நபர்களை விசாரணை செய்ய முயன்றபோது, 6 நபர்களும் ஓடவே, காவலர் வினோத்குமார் துரத்திச் சென்று இருவரை பிடித்து, அவர்களிடமிருந்து கத்தியை பறிமுதல் செய்து, S-9 பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில் பிடிபட்ட நபர்கள் ராஜேஷ், வ/26, த/பெ.பெருமாள், நங்கநல்லூர் மற்றும் பரத்குமார், வ/21, த/பெ.ராஜா, நங்கநல்லூர் என்பதும், தப்பிச் சென்ற மற்ற நபர்களுடன் சேர்ந்து முன்விரோதம் காரணமாக எதிர் தரப்பைச் சேர்ந்த நபரை கொலை செய்ய கத்திகளுடன் பதுங்கி இருந்ததும் தெரியவந்தது. அதன்பேரில், எதிரிகள் ராஜேஷ், மற்றும் பரத் ஆகியோருடன் தொடர்புடைய மேலும் 9 குற்றவாளிகள் என் மொத்தம் 11 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து மொத்தம் 4 கத்திகள் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

3. கண்ணகிநகரில் நள்ளிரவு இருசக்கர வாகனங்களை திருடிக் கொண்டு வந்த 2 குற்றவாளிகள் கைது. 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.

J-11 கண்ணகிநகர் காவல் நிலைய முதல்நிலைக் காவலர் திரு.கௌதம் (மு.நி.கா.40207), ஆயுதப்படை காவலர் சிலம்பரசன் (கா.52297) (ரோந்து வாகன ஓட்டுநர்) மற்றும் ஊர்க்காவல் படை வீரர் திரு.மணிகண்டன் (HG 4764) ஆகியோர் 17.10.2021 அன்று இரவு காவல் ரோந்து வாகன பணியிலிருந்தபோது, கண்ண கிநகர், கல்லறை அருகில் 2 நபர்கள் 2 இருசக்கர வாகனங்களை தள்ளிக் கொண்டு சென்றதை கண்டு, அவர்களை விசாரிக்க அருகில் சென்றபோது, இருவரும் இருசக்கர வாகனங்களை கீழே போட்டுவிட்டு தப்பியோடினர். மேற்படி காவல் குழுவினர் துரத்திச் சென்று சிவராமன், வ/19, த/பெ. பரமசிவம், கண்ண கிநகர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு என்பவரை பிடித்தனர். விசாரணையில் பிடிபட்ட சிவராமன் தப்பியோடிய அவரது நண்பர் வீரமுத்து என்பவருடன் சேர்ந்து துரைப்பாக்கம் பகுதியில் மேற்படி 2 இருசக்கர வாகனங்களையும் திருடிக் கொண்டு வந்தபோது, பெட்ரோல் தீர்ந்துவிட்டதால், தள்ளிக் கொண்டு வந்ததும், இருவரும் சேர்ந்து கண்ணகிநகர், துரைப்பாக்கம் பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடியதும் தெரியவந்தது.

J-11 கண்ணகிநகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சிவராமன் கொடுத்த தகவலின் பேரில், தப்பிச் சென்ற வீரமுத்து, வ/29, த/பெ.வீரபாண்டியன், கண்ணகிநகர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு என்பவரை பிடித்து, இருவரிடமிருந்தும் மேற்படி 2 இருசக்கர வாகனங்கள் உட்பட 6 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில் எதிரிகள் இருவர் மீதும் ஏற்கனவே கஞ்சா வழக்குகள் உள்ளது தெரியவந்தது. விசாரணைக்கு பின்னர் எதிரிகள் இருவரும் நீதிமன்றக் காவலக்கு உட்படுத்தப்பட்டனர்.

4. நள்ளிரவு கடைகளில் புகுந்து திருடிக் கொண்டு ஆட்டோவில் வந்த 2 குற்றவாளிகள் வடபழனி பகுதியில் கைது. உண்டியலில் இருந்த பணம் மற்றும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 4 புதிய கட்டிங் மெஷின்கள் மற்றும் 1 ஆட்டோ பறிமுதல்

R-8 வடபழனி காவல் நிலைய காவலர் திரு.பார்த்திபன் (கா.50908) என்பவர் கடந்த 17.11.2021 அன்று இரவு ரோந்து பணியிலிருந்தபோது, நள்ளிரவு சுமார் 12.45 மணியளவில், வடபழனி கங்கையம்மன் கோயில் தெருவில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு ஒரு ஆட்டோவில் 2 நபர்கள் பதுங்கியிருந்தது தெரியவந்தது. காவலர் பார்த்திபன் அருகில் சென்றபோது, காவலரை கண்டதும் இருவரும் ஓடவே, பார்த்திபன் துரத்திச் சென்று இருவரையும் பிடித்தபோது, அதில் ஒருவர் ஏற்கனவே கஞ்சா வழக்கில் கைதானவர் என தெரியவந்ததின்பேரில், விசாரணை செய்தார். விசாரணையில் பிடிபட்ட நபர்கள் சூர்யா, வ/21, த/பெ.சம்பத்குமார், பஜனை கோயில் தெரு, வடபழனி மற்றும் சுரேஷ், வ/40 (ஆட்டோ ஓட்டுநர்) த/பெ.விஜயகுமார், சாலிகிராமம் என்பதும், இருவரும் சேர்ந்து ஆட்டோவில் விருகம்பாக்கம் சென்று அங்குள்ள ஒரு கடையில் புகுந்து 2 உண்டியல்களை திருடிக் கொண்டு, பக்கத்திலுள்ள மற்றொரு கடையின் பூட்டை உடைத்து கட்டிங் மெஷின், டிரில்லிங் மெஷின் என 4 மெஷின்களை திருடிக் கொண்டு ஆட்டோவில் வந்ததும் தெரியவந்தது.

அதன்பேரில் காவலர் பார்த்திபன் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுத்து, பிடிப்பட்ட குற்றவாளிகளை R-8 வடபழனி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அதன்பேரில், எதிரிகள் சூர்யா மற்றும் சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து சுமார் ரூ.25,000/- பணம் இருந்த 2 உண்டியல்கள், சுமார் ரூ.50,000 மதிப்புள்ள 4 மெஷின்கள் மற்றும் 1 ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணைக்குப் பின்னர் எதிரிகள் இருவரும் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

5. ஆட்டோவில் பெண் பயணி தவறவிட்ட பணம் மற்றும் செல்போன் அடங்கிய கைப்பையை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்து உரியவரிடம் ஒப்படைக்க உதவிய ஆட்டோ ஓட்டுநர் பழனிக்கு பாராட்டு.



சென்னை, எர்ணாவூர், கிரிஜா நகர், முல்லை தெருவில் வசித்து வரும் பழனி, வ/60, த/பெ.திருமலைராஜ் என்பவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். பழனி கடந்த 06.11.2021 அன்று சவாரிக்காக ஆட்டோ ஓட்டி வந்த நிலையில், இரவு ஒரு வயதான பெண்மணியை திருவொற்றியூரில் இறக்கிவிட்டு சென்றபோது, அவரது ஆட்டோவின் பின் இருக்கையில், ஒரு கைப்பை இருந்ததும், அதிலிருந்து செல்போன் ஒலித்தம் கேட்டபோது, பயணி யாரோ ஒருவர் மேற்படி கைப்பையை ஆட்டோவில் தவறவிட்டது தெரியவந்தது. உடனே, பழனி மேற்படி கைப்பையை H-8 திருவொற்றியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்ததின்பேரில், விசாரணை செய்து, கைப்பையை பார்த்தபோது, அதில் 1 செல்போன், பணம் ரூ.1,000/- மற்றும் வங்கி ஏ.டி.எம் கார்டு இருந்தது தெரியவந்தது. மேலும் காவல் குழுவினர் விசாரணை செய்ததில், மேற்படி கைப்பை திருமதி.ராஜேஸ்வரி, பெவ.63, க/பெ.பாலன், சேஷலகிராமணி தெரு, திருவொற்றியூர், என்பவருடையது என்பதும், சற்று முன்பு பழனியின் ஆட்டோவில் பயணம் செய்தபோது தவறவிட்டதும் தெரியவந்தது.

அதன்பேரில், கைப்பையின் உரிமையாளர் ராஜேஸ்வரி என்பவருக்கு தகவல் கொடுத்து வரவழைத்து, விசாரணை செய்து, அவருடைய கைப்பையா என உறுதி செய்து, மேற்படி கைப்பை ராஜேஸ்வரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேற்படி சம்பவங்களில் சிறப்பாக புலனாய்வு செய்தும், இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டும், குற்றவாளிகளை கைது செய்த D-1 திருவல்லிக்கேணி, S-9 பழவந்தாங்கல், J-11 கண்ண கிநகர், R-8 வடபழனி காவல் ஆளிநர்கள் மற்றும் நேர்மையான ஆட்டோ ஓட்டுநர் பழனி ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் இன்று (22.11.2021) நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

🔥Click and Join 

No comments

Thank you for your comments