Breaking News

நாளை ரெட் அலர்ட்... சென்னை அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி ... கரையை நெருங்கும்...

 சென்னை, நவ.17-

சென்னையில் மீண்டும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் மாநகராட்சி சார்பில் அனைத்துவித முன் ஏற்பாடு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கடந்த 6ம்  தேதி பெய்த கனமழையால் சென்னை உள்பட பல்வேறு மாவட்டகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.சென்னையில் ஒரே நாள் இரவில் 23 செ.மீ. அளவுக்கு மழை பெய்ததால் நகரமே தண்ணீரில் தத்தளித்தது. மழை நீர் வடிகால் சரிவர தூர்வாரப்படாததால் தண்ணீர் போக வழியின்றி குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

சென்னையில் முக்கிய வியாபார மையமாக உள்ள தி.நகரில் மழை வெள்ளம் தேங்கியதில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. 3 நாட்களுக்கு பிறகே நிலைமை ஒரளவுக்கு சரி செய்யப்பட்டது.

மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து மீண்டு சென்னை மற்றும் புறகர் பகுதிகள் மெல்ல மெல்ல சகஜ நிலைக்கு திரும்பி வந்துள்ள நிலையில் மீண்டும் சென்னையில் மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளது கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது:-

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கடந்த 6ம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்தது.

அதே போல் நாளையும் சென்னையில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதாவது, அந்தமான் கடல் பகுதியில் கடந்த 13ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மெல்ல மெல்ல நகர்ந்து நேற்று தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிக்கு வந்தது.

இந்த காற்றழுத்த தாழ்வு மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக இன்று மாலை முதல் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய ஆரம்பிக்கும். சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உண்டு.

இந்த காற்றழுத்த தாழ்வு நாளை சென்னைக்கு அருகே தெற்கு ஆந்திரா-வட தமிழக கடற்கரை நோக்கி நெருங்கி வரும் என்று கணிக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும். சில இடங்களில் மிக அதிக கனமழை பெய்யவும் வாய்ப்புண்டு.

சென்னையில் ஏற்கனவே மழை பெய்தது போல் 20 செ.மீட்டர் அளவுக்கு மழை பெய்யும் என தெரிகிறது.

இதன் காரணமாகவே வானிலை ஆய்வு மையம் சென்னைக்கு முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதற்கான ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளது.

சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கடலூர், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என எதிர் பார்க்கப்படுகிறது.

மத்திய மேற்கு, தென்மேற்கு வங்க கடல் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையத்தால் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையில் மீண்டும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் மாநகராட்சி சார்பில் அனைத்துவித முன் ஏற்பாடு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் ஒவ்வொரு மண்டலத்திலும் கண்காணிப்பு மற்றும் நிவாரண பணிகளை ஒருங்கிணைக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் ஏற்கனவே குழு உள்ளது. தண்ணீர் தேங்கும் தாழ்வான பகுதிகளில் இந்த குழுவினர் உடனடியாக சென்று மழை நீரை வடிய வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை நகரில் மழை நீர் தேங்கினால் அவற்றை வடிய வைக்க 550-க்கும் மேற்பட்ட ராட்சத மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. மரங்கள் சாய்ந்து விழுந்தால் அவற்றை அப்புறப்படுத்த மரம் அறுக்கும் எந்திரங்களும் ஒவ்வொரு மண்டலத்திலும் கையிருப்பு உள்ளது.

தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர், நீச்சல் வீரர்கள், உஷார் படுத்தப்பட்டு தயார் நிலையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கனமழை பெய்தால் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை தங்க வைப்பதற்கு சென்னையில் பாதுகாப்பு மையங்களும், நிவாரண முகாம்களும் மீண்டும் தயார் படுத்தப்பட்டு வருகிறது.

இது சம்பந்தமாக பேரிடர் துறை உயர் அதிகாரி கூறியதாவது:-

ஏற்கனவே பெய்த கன மழையின்போது பணியாற்றிய அதிகாரிகள், ஊழியர்கள் அதே பகுதிகளில் மீண்டும் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எனவே பலத்த மழை மீண்டும் பெய்தாலும் அதை எதிர்கொள்ள அரசு நிர்வாகம் தயார் நிலையில்தான் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments

Thank you for your comments