சி.வி. சண்முகத்திற்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வாபஸ் - இபிஎஸ் கடும் கண்டனம்
சேலம்:
சி.வி. சண்முகத்துக்கு அளித்து வந்த போலீஸ் பாதுகாப்பை இந்த அரசு திடீரென்று வாபஸ் பெற்றதை அ.தி.மு.க. சார்பில் கடுமையாக கண்டிக்கிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளருமான சி.வி. சண்முகத்துக்கு வழங்கப்பட்டு வந்த காவல்துறையினரின் பாதுகாப்பை திடீரென்று வாபஸ் பெற்றதை அ.மு.க. சார்பில் சார்பில் கடுமையாக கண்டிக்கிறேன்.
முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளருமான சி.வி. சண்முகம் அ.தி.மு.க. சார்பில் 2006-ம் ஆண்டு திண்டிவனம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது, 2006-ம் ஆண்டு மே மாதம் அரசியல் எதிரிகள் இவரது வீடு புகுந்து அவர் மீது கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டனர். அத்தாக்குதலில் சண்முகம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும், அத்தாக்குதலில் அ.தி.மு.க தொண்டர் முருகானந்தம் கொலை செய்யப்பட்டார். உடமைகளுக்கு சேதம் ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், ரோஷணை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும் என்றும், தவறு செய்தவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் சண்முகம் இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று உயர்நீமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அதன்படி 2012ம் ஆண்டு முதல் சி.பி.ஐ. இவ்வழக்கை விசாரித்து வருகிறது.
அச்சமயத்தில் அவரது பாதுகாப்பை ஆய்வு செய்த காவல்துறை, அவர் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தக்கூடிய அச்சுறுத்தல் உள்ளதாகவும், அவர் தங்கியுள்ள இடத்தில் தாக்குதல் நடத்தப்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளன என்றும், எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவருக்கும், அவரது வீட்டிற்கும் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு வழங்க முடிவு செய்து அவர் வெளியே சென்றால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும், அவரது வீட்டிற்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டு வந்தது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னும், கடந்த 6 மாதங்களாக அவருக்கும், அவரது வீட்டிற்கும் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது. தற்போது, சி.வி. சண்முகத்துக்கு அளிக்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பு திடீரென்று வாபஸ் பெறப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த விழுப்புரம் மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக-வினரின் அராஜகத்தையும், அவர்களது தேர்தல் தில்லு முல்லுகளையும் துணிவுடன் எதிர்த்து நின்று, அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கழக வேட்பாளர்களுக்கு முழு பாதுகாவலனாக
விளங்கிய முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு 2006-ம் ஆண்டு, அம்மா ஆட்சி காலம் முதல் வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பை இந்த தி.மு.க. அரசின் காவல்துறை திடீரென்று வாபஸ் பெற்றுள்ளதை பார்க்கும்போது ஏதோ உள்நோக்கத்துடன் இது நிகழ்ந்துள்ளதாக சந்தேகம் எழுகிறது. மேலும், அ.தி.மு.க. தொண்டர் முருகானந்தம் கொலை வழக்கு வரும் நவம்பர் மாதம் 19-ந்தேதி முதல் நடைபெற உள்ள சூழ்நிலையில் இந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன்தான் நடந்துள்ளது என்பதை உறுதிபடுத்தும் வண்ணம் உள்ளது.
சி.வி. சண்முகத்துக்கு அளித்து வந்த போலீஸ் பாதுகாப்பை இந்த அரசு திடீரென்று வாபஸ் பெற்றதை அ.தி.மு.க. சார்பில் நான் கடுமையாக கண்டிக்கிறேன். அவர் மீது ஏதேனும் தாக்குதல் நடைபெற்றால் அதற்கு இந்த தி.மு.க. அரசுதான் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று அறிக்கையின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments