அம்மா உணவகத்தில் இலவச உணவு அறிவிப்பு
சென்னை, நவ.9-
மழைக்காலம் முடியும் வரை அம்மா உணவகங்களில் உணவு இலவசம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.
சென்னை மாநகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை நேரில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பாதிக்கப்பட்டோரின் குறையைக் கேட்டறிந்து உணவு மற்றும் நலத்திட்டங்களை வழங்கினார்.
அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேட்டியில்,
திமுக ஆட்சிக்கு வந்த ஐந்து மாதங்களில் 771 கி.மீ தூரத்திற்கு மழைநீர் கால்வாய் தூர்வாரப்பட்டுள்ளது. ஆகாயத் தாமரைகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த முறை வந்த மழையால் கிட்டத்தட்ட 15 நாட்கள் வரை மழை நீர் தேங்கி இருக்கும். ஆனால், இந்த முறை தேங்கி இருந்த மழை நீர், மழை விட்டதும் வடிந்துவிட்டது. மெட்ரோ பணி நடைபெறும் இடங்களிலும், தாழ்வான இடங்களிலும் தேங்கி இருக்கும் நீரை மோட்டார் மூலம் எடுத்து வெளியேற்றும் பணியும் நடைபெற்று வருகிறது. இதற்காக, 560 பம்ப் செட் மோட்டார்கள் பயன்பாட்டில் உள்ளது.
கேள்வி : நீங்கள் நிறைய பகுதிகளுக்கு சென்று கொண்டிருக்கிறீர்கள், நிலைமை எப்படியிருக்கிறது?
பதில்: மழையால் பாதிக்கப்பட்டு தண்ணீர் தேங்கியிருக்கும் இடங்களில் எல்லாம் அரசாங்கம் சார்பாகவும், கட்சி சார்பாகவும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய உணவு வசதி, தங்குவதற்கான ஏற்பாடு, மருத்துவ முகாம்கள் போன்ற எல்லாவற்றையும் திட்டமிட்டு செய்து கொண்டிருக்கிறோம்.
கேள்வி: Water-logging பிரச்சனை சிறிது குறைந்திருக்கிறதா?
பதில்: ஓரளவுக்கு குறைந்திருக்கிறது, முழுமையாக குறையவில்லை. ஏனென்றால், ஏற்கனவே முந்தைய ஆட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்று போட்டு, அதில் பல கோடி ரூபாய் ஒன்றிய அரசிடமிருந்து நிதி வாங்கி, என்ன செய்தார்கள் என்றே தெரியவில்லை. முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் நடந்த உள்ளாட்சி துறையின் சார்பாக பணிகள் எதுவுமே நடைபெறவில்லை, கமிஷன் மட்டும் வாங்கியிருக்கிறார்கள் என்பது நன்றாகத் தெரிகிறது. இருந்தாலும், நாங்கள் சமாளித்து பணிகளை செய்து கொண்டிருக்கிறோம். இப்பணிகள் முடிந்த பிறகு, இதுகுறித்து உரிய விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும்.
கேள்வி : இதெல்லாம் முடிந்தபிறகு அந்த ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
பதில் : நிச்சயமாக, உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
அம்மா உணவகத்தில் இலவச சாப்பாடு
இதைத்தொடர்ந்து அம்மா உணவகம் ஒன்றில் இட்லியை ருசி பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மழை பாதிப்பு சரியாகும் வரை அம்மா உணவகத்தில் இலவச சாப்பாடு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
சென்னையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்டு தங்க வைப்பதற்காக 169 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு வழங்குவதற்காக அனைத்து வசதிகளுடன் கூடிய சமையலறைகள் 15 இடங்களில் தயார் நிலையில் உள்ளன.
அம்மா உணவங்கள் மூலமும் உணவு தயாரித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் உணவு வழங்கப்பட்டுள்ளது.
மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உணவினை வழங்க வருவாய்த்துறை சார்பில் வரி வசூலிப்பவர் அல்லது உரிம ஆய்வாளர் 200 பேர் பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தேவைப்பட்டால் ஒவ்வொரு வேளையும் சுமார் ஒன்றரை லட்சம் நபர்களுக்கு வழங்கக்கூடிய அளவுக்கு உணவு சமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments
Thank you for your comments