Breaking News

பேரிகார்டில் மோதி தனியார் பேருந்து விபத்து - படியில் தொங்கிய மாணவர்கள் உட்பட 13 பேர் காயம்!

வேலூர் :

வேலூர் அருகே அதிவேகமாகச் சென்ற தனியார் பேருந்து விபத்தில் சிக்கியதில், படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் உட்பட 13 பேர் படு காயமடைந்தனர்.


வேலூர் மாவட்டம், ஒடுகத்தூரிலிருந்து இன்று காலை ஆற்காடு நோக்கி தனியார் பேருந்து ஒன்று புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தது. 

ஆற்காடு வேப்பூரைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் பேருந்தை ஓட்டினார். கண்டக்டராக பிரபாகரன் என்பவர் பணியிலிருந்தார். 

வேலூர் பழைய பேருந்து நிலையத்துக்கு 8:40 மணிக்கு வந்தடைந்த அந்தப் பேருந்தில், கல்லூரி மாணவர்கள் பலர் முண்டியத்து ஏறினர். 

இதில், 20க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் உட்பட 70க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். கல்லூரி மாணவர்கள் 10க்கும் மேற்பட்டோர் பேருந்தில் படிக்கட்டில் நின்றவாறே புட்போர்டு பயணம் செய்துள்ளனர்.



பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலை மார்க்கத்தில் பேருந்தை சுமார் 110 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டுநர் சுப்பிரமணி ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது. 

சத்துவாச்சாரியை அடுத்திருக்கும் பெருமுகை அரசு மேல்நிலைப் பள்ளி பகுதியில் சென்றபோது, இரு சக்கர வாகனம் ஒன்று குறுக்கே வந்திருக்கிறது.

அப்போது, ஓட்டுநர் இருசக்கர வாகனத்தின்மீது மோதிய பேருந்தை வலதுபுறமாக வளைத்து, சடன் பிரேக் அடித்திருக்கிறார். அதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரமிருந்த பேரிகார்டுகளை மோதி உடைத்தபடி சென்று நின்றது.

இந்த விபத்தில் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த கல்லூரி மாணவர்கள் 10 பேர் உட்பட 12 பேர் கீழே விழுந்து படு காயமடைந்தனர். பைக்கில் வந்த நபரும் காயமடைந்தார். 

தகவலறிந்ததும், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற சத்துவாச்சாரி போலீஸார் காயமடைந்தோரை மீட்டு ஆம்புலன்ஸுகள் மூலம் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

விபத்தில், படுகாயமடைந்தவர்களில் மூன்று மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து  3 பேர் உயிரியிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

முதல் கட்டம் விசாரணையில்  கல்லூரி அப்துல் அக்கீம் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் என்று தெரியவந்துள்ளது.

வேலூரில், சில தனியார் பேருந்துகள் அதிக பயணிகளை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக செல்வதால் தான் விபத்து ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


No comments

Thank you for your comments