கல்லூரி ஆசிரியர் பணியிடங்களுக்கு நியமன ஆணைகள் வழங்கினார் முதலமைச்சர்
சென்னை
இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் புதிதாக துவக்கப்பட்டுள்ள அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு தேர்வு செய்யப்பட்ட உதவி பேராசிரியர்கள், நூலகர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 11 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் புதிதாக துவக்கப்பட்டுள்ள அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு பல்கலைக்கழக விதிமுறைகளின் அடிப்படையில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 9 நபர்களுக்கும், ஒரு நூலகர் மற்றும் ஒரு உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 2 நபர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (21.10.2021) தலைமைச் செயலகத்தில், பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
2021-22ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில், இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் பத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பினை துரிதமாக செயல்படுத்தும் விதமாக,
முதற்கட்டமாக சென்னை மாவட்டம் - கொளத்தூர், நாமக்கல் மாவட்டம் - திருச்செங்கோடு, திண்டுக்கல் மாவட்டம் - தொப்பம்பட்டி, தூத்துக்குடி மாவட்டம் - விளாத்திகுளம் ஆகிய நான்கு இடங்களில் B.Com., BBA, BCA, B.Sc. Computer Science ஆகிய பாடப்பிரிவுகளை கொண்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கிட 6.10.2021 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.
இந்நான்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சென்னை, கொளத்தூரில், மயிலாப்பூர் - அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் சார்பில் அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் கல்லூரி துவங்கிட உத்தேசிக்கப்பட்டதன் அடிப்படையில், நடப்பு கல்வியாண்டிலேயே அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தற்காலிகமாக கொளத்தூரில் உள்ள எவர்வின் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தொடங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு, மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
👮உறைய வைக்கும் Police Commemoration Day- வில் வீரவணக்கம் பாடல்...
அதன்தொடர்ச்சியாக, பல்கலைக்கழக விதிமுறைகளின்படி அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான உதவி பேராசிரியர் நேர்முக தேர்வுக்கு வல்லுநர் குழு அமைக்கப்பட்டு, 18.10.2021 அன்று நேர்காணல் நடத்தப்பட்டு, தகுதி, அனுபவம் மற்றும் மதிப்பெண் அடிப்படையில் 9 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், ஒரு நூலகர் மற்றும் ஒரு உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு 2 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தர மோகன், இந்துசமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ. குமரகுருபரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments