அறங்காவலர்கள் நியமிக்கப்பட்ட பின்னரே கோவில் நகைகள் உருக்கப்படும்-உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம்
சென்னை, அக்.29-
கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படாத நிலையில் தங்க நகைகளை உருக்க அனுமதிக்க கூடாது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
தமிழக கோவில்களில் உள்ள தங்கத்தை உருக்கி, கட்டிகளாக மாற்றி வைப்பது, கோவில் உபரி நிதியில் கல்லூரி துவங்குவது உள்பட 112 அறிவிப்புகள் தமிழக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டன.
இந்த அறிவிப்புகளின் அடிப்படையில் கோவில்களில் உள்ள தங்க நகைகளை உருக்கி கட்டிகளாக மாற்ற இந்து சமய அறநிலைய துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இண்டிக்ட் கலெக்டிவ் அறக்கட்டளை மற்றும் டி.ஆர்.ரமேஷ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த மனுவில், கோவில்களின் தங்க நகைகளை உருக்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, விதிகளின்படி, கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படாத நிலையில் தங்க நகைகளை உருக்க அனுமதிக்க கூடாது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சண்முக சுந்தரம், கோவில் நகைகளை உருக்கவில்லை. காணிக்கையாக வந்த நகைகள் தான் உருக்கப்படுகிறது. அதை மேற்பார்வையிட சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரும், உயர் நீதிமன்றம் ஓய்வுபெற்ற நீதிபதி இருவரும் அடங்கிய குழு அமைத்து, நகைகள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.
ஏற்கனவே நகைகள் உருக்கி கட்டிகளாக மாற்றி வங்கிகளில் முதலீடு செய்ததன் மூலம் 11.5 கோடி ரூபாய் வட்டி வருவாயாக கிடைத்துள்ளது. அது கோவில் நலனுக்கு பயன்படுத்தப்பட்டது.
கோவில்கள் சீரமைப்புக்கு நிதி தேவைப்படுகிறது. கடந்த 11 ஆண்டுகளாக கோவில்களில் உள்ள தங்க நகைகள் மதிப்பீடு செய்யப்படவில்லை” என்று கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அறங்காவலர்கள் இல்லாமல் நகைகளை உருக்க முடியாது எனக் கூறினர்.
இதையடுத்து, நகைகளை கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடைபெறும். அறங்காவலர்கள் நியமிக்கப்பட்ட பிறகே நகைகள் உருக்கப்படும் என அட்வகேட் ஜெனரல் உத்தரவாதம் அளித்தார்.
இதை பதிவு செய்த நீதிபதிகள், கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட நகைகளை கணக்கெடுக்கலாம். அறங்காவலர்கள் நியமிக்கும் வரை நகைகளை உருக்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்க கூடாது. மேலும், மனுவுக்கு பதில் அளிக்க உத்தரவிட்டு டிசம்பர் 15ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
No comments
Thank you for your comments