Breaking News

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை இல்லை! - உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி:

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்த மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு நீக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம்   தெரிவித் துள்ளது. மேலும் இரண்டு மாணவர்களுக்காக 16 லட்சம் மாணவர்களுக்கான முடிவுகளை தாமதப்படுத்த முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் கடந்த மாதம் செப்டம்பர் 12ஆம் தேதி நடந்தது. இதில் சுமார் 16 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள்.

இந்தநிலையில் 2 மாணவர்கள் தங்களது வினாத்தாள் மற்றும் விடைத்தாள் ஆகியவற்றில் உள்ள எண்கள் தவறாக பொருத்தப்பட்டதாகவும், கண்காணிப்பாளர்கள் தவறு செய்துள்ளனர் என்றும் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரை சேர்ந்த வைஷானவி போபாலி, அபிஷேக் சிவாஜி ஆகிய 2 பேர் தங்களுக்கு நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிடக்கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

 இந்த மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம்  2 மாணவர்களுக்கும் நீட் மறுதேர்வு நடத்த வேண்டும் என்றும், அதன் பின்னரே நீட் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

மறுதேர்வு தேதி மற்றும் தேர்வு மையம் குறித்து விண்ணப்பதாரர்களுக்கு 48 மணி நேரத்துக்கு முன்கூட்டியே அறிவிக்கவும் அவர்களின் தேர்வு முடிவுகளை 2 வாரங்களில் வெளியிடவும் தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில்  இந்த அறிவிப்பால், நீட் தேர்வு முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்படும் என்றும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஏஎம்எஸ், பிஎஸ்எம்எஸ், பியூஎம்எஸ் மற்றும் பிஎச்எம்எஸ் போன்ற இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை செயல்முறை பாதிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் என்டிஏ (ழிஜிகி) தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், அதில் கண்காணிப்பாளர்கள் தவறு செய்துள்ளதை தேசிய தேர்வு முகமை ஒப்புக்கொண்டிருந்தது.

இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம்   இன்று தீர்ப்பளித்தது. அதில் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை என்று நீதிபதி உத்தரவிட்டனர்.

மேலும் 2 மாணவர்களுக்கு நீட் மறுதேர்வு நடத்திய பின்னரே முடிவை வெளியிட வேண்டும் என்ற மும்பை உயர் நீதிமன்றம்   பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தும் உச்ச நீதிமன்றம்  ஆணையிட்டுள்ளது.

இதுகுறித்து நீதிபதிகள் கூறியதாவது:-

இரண்டு மாணவர்களுக்காக 16 லட்சம் மாணவர்களுக்கான முடிவுகளை தாமதப்படுத்த முடியாது. அவர்களின் நலன்களை சமநிலைபடுத்த வேண்டும். தேர்வு நாளில் ஏற்பட்ட குழப்பத்தால் நேரத்தை இழந்த 2 மாணவர்களுக்கு என்ன செய்வது என்பது குறித்த திட்டம் பற்றி தேசிய தேர்வு முகமை கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments

Thank you for your comments