ஆளுங்கட்சியின் கைப்பாவையானது மாநில தேர்தல் ஆணையம்... ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி புகார் மனு
சென்னை:
ஊரக உள்ளாட்சி தேர்தல் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து புகார் அளிப்பதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, சென்னை கிண்டியில், உள்ள ஆளுநர் மாளிகையில், எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து மனு அளித்தார்.
மாநில தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின் கைப்பாவையாக இருந்து அவர்கள் ஆட்டுவிக்கும் பொம்மையாக செயல்பட்டார்கள் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்த 9 மாவட்டங்களில் கடந்த அக்.6ம் தேதியும், அக்.9ம் தேதியும் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.
ஓட்டு எண்ணிக்கை அக்.12ம் தேதி நடைபெற்றது. இதில் தி.மு.க. அமோக வெற்றி பெற்று பெரும்பாலான இடங்களை கைப்பற்றியது.
இந்நிலையில், தேர்தலில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக அ.தி.மு.க. குற்றம்சாட்டியது.
இதனையடுத்து, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில் தேர்தலில் முறைகேடுகள் நடந்து இருக்கின்றன என்று குற்றம்சாட்டி இருந்தார்.
🔥Also Read 👍 விதிகளை மீறும் தி சென்னை சில்க்ஸ்! துணை போகின்றதா மாநகராட்சி..?-பகீர் குற்றச்சாட்டு
எடப்பாடி பழனிசாமி ஆளுநரிடம் அளித்த மனுவில் கூறி இருந்ததாவது:-
9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்பட்டன. 2 கட்டங்களாக நடத்துவதால் இதில் முறைகேடு நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக நாங்கள் அப்போதே புகார் அளித்தோம். ஆனால் அதை அரசு கண்டு கொள்ளவில்லை.
ஒரே மாவட்டத்தில் உள்ள யூனியன்களை இரண்டாக பிரித்து தேர்தல் நடத்தினார்கள். இது முறைகேடுக்கு முக்கிய வாய்ப்பாக இருந்தது. முறைகேடு செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது.
இது சம்பந்தமாக நாங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அப்போதும் சில வழிகாட்டுதல்களை நீதிமன்றம் வழங்கியது. அதை ஏற்றுக்கொள்வதாக அரசு அறிவித்தது. ஆனால் அதை மாநில தேர்தல் ஆணையம் அமல்படுத்தவில்லை.
அனைத்து வாக்குச்சாவடிகள், வாக்கு எண்ணும் மையங்கள், ஓட்டு பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த அறைகள் போன்றவற்றை சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை சரியாக செயல்படுத்தவில்லை.
ஒவ்வொரு வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும் மேற்பார்வையாளர்களை நியமிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது. அது சரியாக செயல்படுத்தப்படவில்லை. நியமிக்கப்பட்ட மேற்பார்வையாளர்களை பற்றிய விவரங்கள் முன்கூட்டியே வெளியிடப்படவில்லை.
மாநில தேர்தல் ஆணையம் வெளிப்படையாக சுதந்திரமான முறையில் தேர்தலை நடத்தவில்லை. ஆளுங்கட்சியின் கைப்பாவையாக இருந்து அவர்கள் ஆட்டுவிக்கும் பொம்மையாக செயல்பட்டார்கள்.
அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட்டு ஜனநாயகத்துக்கு எதிராக நடந்து கொண்டார்கள். அ.தி.மு.க. வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் பல இடங்களில் உரிய காரணங்கள் இல்லாமல் நிராகரிக்கப்பட்டன. பல அதிகாரிகள் தவறான விதிகளை சொல்லி நிராகரித்தார்கள்.
வயது ஆதாரமாக ஆதார் கார்டு நகலை இணைத்து இருந்த போதும், வயதை குறிப்பிடவில்லை என்று காரணம் கூறி கூட வேட்புமனுக்களை நிராகரித்தனர். நோட்டரி பப்ளிக் சீல் இல்லை என்று கூறியும் நிராகரிக்கப்பட்டது. 2 பேருக்கு முன்மொழிந்துள்ளார் என்று காரணம் காட்டி தவறான விதிகளை சொல்லி நிராகரித்தனர்.
தமிழ்நாடு பஞ்சாயத்து விதிகளை முறையாக பின்பற்றவில்லை. தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பலர் சட்ட திட்டங்களை பின்பற்றாமல் தன்னிச்சையாக செயல்பட்டு அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு எதிராக நடந்து கொண்டார்கள்.
சில அ.தி.மு.க. வேட்பாளர்களின் வேட்புமனுக்களை வேறு நபர்கள் மூலம் வாபஸ் பெற வைத்து போட்டியிட முடியாமல் செய்தனர். இதன் மூலம் சில வார்டுகளில் போட்டியின்றி ஏகமனதாக உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்கள் தி.மு.க.வை சேர்ந்தவர்கள். அவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதற்காக பல விதிமீறல்கள் நடந்தன. மாநில தேர்தல் ஆணையத்தை அரசு தங்களுக்கு சாதகமாக தவறாக பயன்படுத்தியது.
வாக்குச்சாவடி, ஓட்டு எண்ணும் மையங்கள், ஓட்டு பெட்டி வைக்கப்பட்ட அறைகள் போன்றவற்றில் பல சட்ட விரோத செயல்கள் நடைபெற்றன.
தேர்தலின்போது சட்டம்-ஒழுங்கு முறையாக பராமரிக்கப்படவில்லை. ஆளுங்கட்சிக்கு சாதகமாக காவல்துறை பயன்படுத்தப்பட்டது. அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் ஒவ்வொரு பகுதிக்கும் பொறுப்பாளர்களாக கட்சி சார்பில் நியமிக்கப்பட்டு இருந்தார்கள். அவர்கள் தேர்தல் அதிகாரிகளை அதிகாரப்பூர்வமற்ற முறையில் அழைத்து கூட்டம் நடத்தினார்கள். தவறான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. வாக்காளர்களுக்கு ஆளுங்கட்சியினர் வெளிப்படையாக பணம், பரிசுகளை வழங்கினார்கள். அது தடுக்கப்படவில்லை.
உள்ளூர் எம்.எல்.ஏ.க்கள் தேர்தல் நடத்தும் அதிகாரிகளை அழைத்து பேசி சில வாய்மொழி உத்தரவுகளை பிறப்பித்தார்கள். எதிர்க்கட்சி வெற்றி பெற்றால் அதை அறிவிக்கக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இது சம்பந்தமாக நாங்கள் தேர்தல் கமிஷனிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓட்டு எண்ணும்போது பெரிய அளவில் சட்டவிரோத செயல்கள் நடந்தன.
காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடந்தபோது எல்லா மையங்களிலும் ஒரே நேரத்தில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கப்படவில்லை. வேண்டுமென்றே காலம் தாழ்த்தப்பட்டது. தபால் ஓட்டுகள் முறைப்படி அறிவிக்கப்படவில்லை. வழக்கமான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை.
முதல் சுற்றில் எங்கெங்கெல்லாம் அ.தி.மு.க. முன்னணியில் இருந்ததோ அங்கெல்லாம் ஓட்டு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. நீண்ட நேரத்துக்கு பின்னரே 2-வது சுற்று ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது.
சில இடங்களில் நள்ளிரவுக்கு பிறகும் ஓட்டு எண்ணிக்கை நடத்தினார்கள். ஓட்டு எண்ணிக்கை நிறுத்தப்பட்ட இடங்களில் புதிய ஓட்டுச்சீட்டு பண்டல்கள் உள்ளே புகுத்தப்பட்டன. இந்த சீட்டுகள் ஆம்புலன்ஸ்கள் மூலம் கொண்டு வரப்பட்டன.
ஒரு மையத்தில் ஓட்டு எண்ணிக்கை நிறுத்தப்பட்டால் அதன் பிறகு ஓட்டு சீட்டுகள் வேறு அறைக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு உள்ளூர் தி.மு.க.வினர் அதிகாரிகளுடன் அமர்ந்து இருந்தனர். அதில் ஓட்டு சீட்டுகள் மாற்றப்பட்டன.
ஆளுங்கட்சிக்கு சாதகமாக முடிவு வரும் வரை ஓட்டு சீட்டு மாற்றங்கள் நடந்தன. இதுபற்றி புகார் செய்தபோதும் கண்டு கொள்ளவில்லை. இதில் தேர்தல் கமிஷன் முழுமையாக தோல்வி அடைந்தது. மாநில தேர்தல் எந்திரங்கள் ஜனநாயகத்திற்கு எதிரான செயல்களை செய்தன. கடைசி சுற்று எண்ணிக்கையில் அ.தி.மு.க. முன்னணியில் இருந்தால் அந்த மையத்தில் ஓட்டு எண்ணிக்கை நிறுத்தப்பட் டது. தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக பின்னர் அறிவிக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆலங்காயம் யூனியனில் தி.மு.க. எம்.எல்.ஏ. ஓட்டு பெட்டி இருந்த அறைக்குள் சட்டவிரோதமாக புகுந்து தவறான செயல்களை செய்தார். இதுபோல பல வகைகளிலும் முறைகேடுகள் நடத்தப்பட்டுள்ளது.
எனவே இது சம்பந்தமாக ஆளுநர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சுதந்திரமான விசாரணை ஒன்றை நடத்த வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார். அவருடன், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
ஆளுநரிடம் மனு அளித்த பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி கே.பழனிசாமி கூறியதாவது,
அதிமுகவிற்கும் சசிகலாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் சசிகலா பொதுச்செயலாளர் என கூறிவருவதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம் எனவும் கூறினார்.
ஊரக உள்ளாட்சி தேர்தல் முறைகேடு குறித்து ஆளுநரிடம் மனு அளித்துள்ளதாகவும், திமுக தில்லுமுல்லு செய்து ஜனநாயக படுகொலை செய்து வெற்றி பெற்றவர்களை தோல்வி அடைந்ததாக அறிவித்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், மாவட்ட ஆட்சியர்களும் முறையாக பணி மேற்கொள்ளவில்லை என குறிப்பிட்ட அவர், தவறுகள் முறைகேடுகள் நடைப்பெற்றது குறித்து ஆளுநரிடம் முழுமையாக தெரிவித்ததாகவும் கூறினார்.
தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைப்பெற வேண்டும் என தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தை அதிமுக நாடியதாகவும், இந்த தேர்தல் இந்திய நாட்டிற்கு முன்னுதாரணமாக இருக்கும் தேர்தலாக நடைப்பெற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், ஆளுங்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற யுக்திகளை கையாண்டு வெற்றி பெற செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
திருப்பத்தூரில் வாக்குப் பெட்டியை எடுத்து சென்ற சட்டமன்ற உறுப்பினர் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என குறிப்பிட்ட அவர், 2019ல் தேர்தலை நடத்த அதிமுக தயாராக இருந்ததாகவும், வார்டு மறுவரை பணிகள் குறித்து நீதிமன்றத்திற்கு சென்றது திமுக தான் எனவும் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும், தூத்துக்குடி சம்பவத்தில் மக்களை பாதுக்காக்கும் காவலருக்கே இந்த நிலை என்றால் பொதுமக்களுக்கு என்ன நிலை என்பதை பார்ப்பதோடு, தவறு செய்தவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வேண்டும் என்றே திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கத்தோடு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்து வருவதாகவும், மடியில் கனம் இல்லை விழியில் பயம் இல்லை எனவும் கூறினார். 5 மாத கால ஆட்சியில் கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் மட்டுமே திமுக செய்து வருவதாக குற்றம்சாட்டிய அவர், ஊரக உள்ளாட்சி தேர்தலில் பணம் கொடுத்து மட்டுமே திமுக வெற்றி பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.
அதிமுகவிற்கும் சசிகலாவிற்கு எந்த தொடர்பும் இல்லை என கூறிய அவர், சசிகலா பொதுச்செயலாளர் என கூறிவருவதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம் என்றும் தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியில் இருந்த போது மீனவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்ததாகவும், மீனவர்களுக்கு அதிமுக உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
No comments
Thank you for your comments