உள்ளாட்சித் தேர்தலில் விஜய் ரசிகர்கள் போட்டி... 2021-ல் உள்ளாட்சியில வரோம் ! 2026-ல் நல்லாட்சி தரோம்!! - போஸ்டரில் அதிரடி...
மதுரை:
நடிகர் விஜயை அரசியலுக்கு இழுக்கும் வகையில் போஸ்டர்களை ஒட்டுவதை வழக்கமாக கொண்ட மதுரை ரசிகர்கள் தற்போது, உள்ளாட்சியில் வாரோம், நல்லாட்சி தாரோம் என்ற வாசகங்களுடன் நகர் பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் 6 அக்டோபர் மற்றும் 9 அக்டோபர் என இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்தார்.
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
உள்ளாட்சி தேர்தலில் ரசிகர்களை களமிறக்கி தமது பலத்தை சோதனை செய்வதற்காக ஒரு பலப்பரீட்சை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளையில் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது பெயரை பயன்படுத்த வேண்டாம் என்று விஜய் கேட்டுக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் நடக்கவிருக்கும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜயின் ரசிகர் மன்ற அமைப்பான விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டியிட நடிகர் விஜய் அனுமதி அளித்துள்ளதாக வந்த தகவலை தொடர்ந்து, அவரது ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் தேர்தல் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மதுரையில் காலியாக உள்ள மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய மற்றும் கிராம பஞ்சாயத்து பதவிக்கான தேர்தல்களில் போட்டியிடுவதற்காக விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் நடிகர் விஜயிடம் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீண்ட காலமாக நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் பல்வேறு விதத்தில் போஸ்டர்கள் ஒட்டியும் சமூக வலைதளங்கள் மூலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், தற்போது 2021-ல் உள்ளாட்சியில வரோம் ! 2026-ல் நல்லாட்சி தரோம்!! என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை மதுரை மாநகர் முழுவதும் அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ளனர்.
ஏற்கனவே, அண்ணா பிறந்த நாளில் மதுரை விஜய் ரசிகர்கள், நாட்டிற்காக உழைப்பதற்கே அண்ணா பிறந்தார், பொதுநலத்தில் தானே நாள் முழுக்க கண்ணாயிருந்தார், அண்ணா யாரு தளபதி, மீண்டும் அண்ணா வேண்டும் அண்ணா, போன்ற வாசகத்துடன் அண்ணா புகைப்படத்தில் அவரது முகத்தில் விஜய் முகம் இடம்பெறும் வகையில் மார்ஃபிங் செய்து போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே தனது பெயரையோ, தனது ரசிகர் மன்றத்தின் பெயரையோ பயன்படுத்துவதை தடை செய்யக் கோரி தனது தந்தை மற்றும் தாய் உட்பட 11 நபர்கள் மீது நடிகர் விஜய் சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இம்மாத இறுதியில் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.




No comments
Thank you for your comments