ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து பிரியாவிடை அளித்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
சென்னை:
பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் தமிழ்நாட்டின் தற்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை சந்தித்துப் பேசினார்.
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை மரியாதை நிமித்தமாக சந்தித்து, தமிழ்நாடு ஆளுநராக பணியாற்றியதற்கு வாழ்த்து தெரிவிக்கவும், பிரியாவிடை கொடுக்கும் வகையிலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் இன்றைய சந்திப்பு அமைந்துள்ளது.
இந்த சந்திப்பின்போது, முதலமைச்சருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, எ.வ. வேலு, க. பொன்முடி, ஐ. பெரியசாமி, தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழ்நாட்டிற்கு புதிய ஆளுநராக 1976-கேரள பிரிவைச் சோ்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநருமான ரவீந்திர நாராயண ரவியை (69) குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் கடந்த வாரம் நியமித்தார்.
தமிழ்நாட்டின் தற்போதைய ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநிலத்தின் முழு நேர ஆளுநராக நியமிக்கப்பட்டார் எனவே, பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நாளை பொறுப்பேற்க உள்ளார். அதற்காக அவர் நாளை காலை 8.30 மணிக்கு தமிழகத்திலிருந்து புறப்பட்டுச் செல்கிறார்.
இன்று தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித்தின் கடைசி பணிநாள் என்பதால், மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநரை சந்தித்து பிரியாவிடை கொடுக்கிறார்.
மேலும், தமிழ்நாட்டின் ஆளுநராக பணியாற்றி விடைபெறவுள்ள பன்வாரிலால் புரோகித் அவர்களை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பெருமக்களுடன் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்திகளையும் நன்றியையும் தெரிவித்தார்..
No comments
Thank you for your comments