திருவள்ளுர் மாவட்டத்தில் இலக்கை கடந்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
திருவள்ளுர், செப்.12-
திருவள்ளுர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம், புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி சமுதாய கூடம், புதுப்பேட்டையில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அங்கன்வாடி மையம் மற்றும் திருவள்ளுர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இன்று (12.09.2021) நடைபெற்ற மாபெரும் கோவிட்-19 தடுப்பூசி முகாம்களை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வுக்கு பின் தெரிவித்ததாவது, 12.09.2021 அன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது. திருவள்ளுர் மாவட்டத்திலும் 1029 முகாம்கள் வாயிலாக 4000 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு, மாவட்டம் முழுவதும் 1,00,000 நபர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. திருவள்ளுர் மாவட்டத்தில் தற்போதைய 6.30 மணி நிலவரப்படி 1,11,198 நபர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்பது ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியாகும். இதில் 81,000 நபர்களுக்கு முதல் தவணையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது தவணையாக 30,000 நபர்களுக்கும் என மொத்தம் 1,11,000 நபர்களுக்கு தடுப்பூசிகள் இன்று (12/09/2021) செலுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 7.00 மணி நிலவரப்படி 1,28,751 நபர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
திருவள்ளுர் மாவட்டத்திற்கான 1,00,000 இலக்கை கடந்து, அதிகபட்ச நபர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்துவதற்கு அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட்டதால் தான் இது சாத்தியமானது. இதற்காக, மாண்புமிகு அமைச்சர் அவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரின் வழிகாட்டுதலினாலும், திருவள்ளுர் சுகாதார மாவட்டம், பூவிருந்தவல்லி சுகாதார மாவட்டம் உள்ளிட்ட திருவள்ளுர் மாவட்டத்தின் சுகாதாரத்;துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளின் பணியாளர்களும் ஒன்றிணைந்து செயல்பட்ட காரணத்தினாலே இலக்கை எட்ட முடிந்தது. நடைபெற்ற மாபெரும் தடுப்பூசி முகாம் என்பது மக்களிடையே தடுப்பூசி குறித்து மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. கிராமங்கள், நகரங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் முகாம்கள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாவட்டத்தில் எல்லாம் பகுதிகளிலுருந்தும் கொரோனா தடுப்பூசிக்கு நல்ல வரவேற்புகள் கிடைத்துள்ளது.
மருத்துவர்கள், செவிலியர்கள், நகர்ப்புற சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்துத்துறை பணியாளர்களுக்கும் இந்த தடுப்பூசி முகாம்களில் ஈடுபடுத்தப்பட்டு, தம் பணியை திறம்பட செய்துள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், திருவள்ளுர் சுகாதார மாவட்ட துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) மரு.ஜவஹர்லால், திருவள்ளுர் நகராட்சி ஆணையர் சந்தானம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
No comments
Thank you for your comments